Published:Updated:

`இடைத்தேர்தலில் எங்கள் வெற்றி உறுதியாகிவிட்டது!' - மதுரையில் `உற்சாக' ஓ.பி.எஸ்

``நாட்டுக்காகத் தியாகம் செய்தவர்களை இந்த அரசு எப்போதும் கௌரவிக்கும்'' என்றார் ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

இடைத்தேர்தல் நடைபெற்ற 2 தொகுதிகளின் தேர்தல் முன்னணி நிலவரம் வந்து கொண்டிருந்த நிலையில், அ.தி.மு.க வெற்றி உறுதியாகிவிட்டது எனத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உற்சாகமாகத் தெரிவித்தார்.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போரிட்ட மருது சகோதரர்களின் 218-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மரியாதை செய்ய, நேற்று இரவே மதுரை வந்தார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

இன்று காலை மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்களின் வெண்கலச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மரியாதை செய்தனர்.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ''சிவகங்கை ராணி வேலுநாச்சியாரின் வீரத் தளபதிகளாகத் திகழ்ந்த மருதுபாண்டியர்களுக்கு, தமிழக அரசு சார்பில் விழா எடுத்து மரியாதை செய்யப்பட்டு வருகிறது. நாட்டுக்காகத் தியாகம் செய்தவர்களை இந்த அரசு எப்போதும் மரியாதை செய்யும் '' என்றவரிடம்,

''இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அ.தி.மு.க முன்னணியில் வந்து கொண்டிருக்கிறதே'' என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ''விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது'' என உற்சாகமாகக் கூறினார்.

அதன்பின்னர், மருது பாண்டியர் நினைவிடத்தில் மரியாதை செய்வதற்காகத் திருப்பத்தூருக்குக் கிளம்பினார் ஓ.பி.எஸ்.