Published:Updated:

`நிலத்துக்கு அதிக விலை கேட்கிறாங்க; சிலர் தர மறுக்கிறாங்க!'- அரசின் ரூ.23 கோடி திட்டத்தின் கதி என்ன?

நாகை - அக்கரைப்பேட்டை இடையே ரூ. 23 கோடியில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம்

மேம்பாலம்
மேம்பாலம்

நாகை - அக்கரைப்பேட்டை இடையே ரூ. 23 கோடியில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம், தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறையின் மெத்தனப் போக்கால் 6 ஆண்டுகளாகப் பயன்பாடின்றி கிடப்பில் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேம்பாலம்
மேம்பாலம்

நாகப்பட்டினத்தைச் சுற்றி மும்மதத்தினரும் வழிபடும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்காரவேலவர் கோயில் போன்றவை அமைந்துள்ளதால் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நாகைக்கு வந்து செல்கின்றனர். நாகையிலிருந்து அக்கரைப்பேட்டை வழியாக வேளாங்கண்ணி செல்லும் வழியில் பிரசித்திபெற்ற கோரக்கர் சித்தர் கோயில் அமைந்துள்ளதால் இவ்வழியை அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். மேலும், அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தினமும் பல்வேறு வாகனங்களில் மீன்களை ஏற்றிச் செல்ல வேண்டியுள்ளது. நாகை - அக்கரைப்பேட்டை இடையேயுள்ள ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. உரிய நேரத்தில் மீன்களை விற்பனைக்குக் கொண்டு போக முடியவில்லை. காலம் தாழ்ந்து கொண்டுச் செல்லும் மீன்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. மாணவ- மாணவிகளும் பள்ளி, கல்லூரிகளுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடிவதில்லை.

தாமிரபரணி ஆற்றில் புதிய பாலம்! - 90 சதவிகிதம் பணிகள் நிறைவு 

இந்த அவலநிலை குறித்து பொதுமக்கள் ரயில்வே கேட் மீது மேம்பாலம் கட்ட பலமுறை அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதைக் கருத்தில் கொண்டு ரயில்வே கேட் குறுக்கே ரூ.23 கோடியில் மேம்பாலம் அமைக்க மத்திய - மாநில அரசுகள் திட்டமிட்டன. முதல்கட்டமாக ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரயில்வே நிர்வாகம் சார்பில் தண்டவாளத்தின் மீது மேம்பாலம் கட்டும் பணி முடிந்துவிட்டது. இது கட்டி முடிக்கப்பட்டு 6 ஆண்டுகளாகியும் தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேம்பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் கட்ட வேண்டிய இணைப்புப் பாலங்கள் மற்றும் தார்சாலைகள் அமைக்கும் பணி இன்னும் தொடங்கப்படவேயில்லை. இதனால் பழையபடி ரயில்வே கேட் மூடப்படும்போதெல்லாம் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்புக்கும் பொதுமக்கள் பெரும் அவதிக்கும் ஆளாக வேண்டியுள்ளது. நெடுஞ்சாலைத்துறைக்கு வேண்டிய நிதி ஒதுக்கீடு செய்து பல ஆண்டுகளாகியும் அவர்கள் பணிகளை இன்னுமும் தொடங்காமல் அலட்சியப்படுத்துகின்றனர். இதுபற்றி பலமுறை மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தந்தும் பலனில்லை எனப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேம்பாலம்
மேம்பாலம்

பொதுமக்களின் புகார் குறித்து நாகை நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, "மேம்பாலத்தின் இரண்டு பக்கமும் சுமார் 400 மீட்டர் நீளத்தில் இணைப்புப் பாலங்கள் கட்ட வேண்டும். அதற்கான நி்லத்தைக் கையகப்படுத்தும்போது, சிலர் அதிக விலை கேட்கிறார்கள். சிலர் இடம் தர மறுத்து எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இது தொடர்பாகக் கடந்த மார்ச் மாதம் பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தியுள்ளோம். நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் முடியும் பட்சத்தில் எங்கள் பணி தொடங்கி இரண்டு ஆண்டுகளில் நிறைவு பெறும்" என்று முடித்தார்.