Published:Updated:

`முரசொலி நிலத்துக்கான மூலப் பத்திரம் எங்கே?'- ஸ்டாலினை தொடர்ந்து சீண்டும் பா.ம.க

முரசொலி நிலம் தொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கும் இடையே அறிக்கைப் போர் நீடித்து வருகிறது.

முரசொலி அலுவலகம்
முரசொலி அலுவலகம்

தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள அசுரன் படத்தைப் பார்த்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ``பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தைக் கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்!' என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்குப் பதில் கொடுத்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ``பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல... பாடம்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் - ஆஹா.... அற்புதம்... அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்!'' என ட்வீட் செய்திருந்தார்.

முரசொலி நிலத்துக்கான பட்டா
முரசொலி நிலத்துக்கான பட்டா

இதற்கு பதில் அளித்த ஸ்டாலின், மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது முரசொலி இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார். அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை" என்றுகூறி ஆதாரத்தை வெளியிட்டார்.

இந்த நிலையில், பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, ``ஸ்டாலின் பதற்றத்தில் உளற வேண்டாம்: முரசொலி நிலத்துக்கு மூலப் பத்திரம் உண்டா... இல்லையா.. தெளிவான பதில் தேவை!" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

``முரசொலி அலுவலகம் மட்டுமல்ல; எல்.ஐ.சி பில்டிங்கூட பஞ்சமி நிலம்தான்.. நிரூபிக்கவா?”-'தடா' பெரியசாமி

"முரசொலி விஷயத்தில் பதற்றப்படுவதற்கோ, உண்மையை அம்பலப்படுத்தி விட்டார் என்ற கோபத்தில் மருத்துவர் ராமதாஸ் மீது வசை மாறி பொழிவதற்கோ எந்தத் தேவையும் இல்லை. முரசொலி நிலம் பஞ்சமி நிலம் இல்லை என்பதற்காக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் 1985-ம் ஆண்டில் பெறப்பட்ட பட்டா ஒன்றை வெளியிட்டார். 1960-களின் பின்னாளில் கட்டப்பட்ட முரசொலி கட்டடம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் இல்லையென்றால், முரசொலி நிலம் தொடர்பான 1924-ம் ஆண்டின் UDR மூல ஆவணம் முதல் 1960-களில் முரசொலி நிலம் வாங்கப்பட்டதற்கான நிலப்பதிவு ஆவணம் வரை அனைத்தையும் தானே மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்க வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் எதிர்வினா எழுப்பியிருந்தார்' என்று சுட்டிக்காட்டியுள்ள ஜி.கே.மணி,

ஸ்டாலின்
ஸ்டாலின்

"நேர்மையான அரசியல்வாதியாக ஸ்டாலின் இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்.. முரசொலி நிலம் குறித்த 1985-ம் ஆண்டின் பட்டாவை எவ்வளவு வேகமாக வெளியிட்டாரோ, அதே வேகத்தில் அந்த நிலம் குறித்த அனைத்து ஆவணங்களையும் வெளியிட்டு, முரசொலி நிலம் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும்.

ஆனால், மருத்துவர் ராமதாஸ் வினா எழுப்பி பல நாள்களாகியும் அதற்கு பதிலளிக்க முடியாத ஸ்டாலின், குழந்தைகள் விளையாடுவதைப் போல அரசியலிலிருந்து மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் விலக ஒப்புக்கொண்டால் மூல ஆவணத்தைக் காட்டுவதாகக் கூறி வருகிறார். இப்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் மனு கொடுத்த பேராசிரியர் சீனிவாசனை ராமதாஸின் கைப்பாவை என விமர்சித்திருக்கிறார்.

நாட்டு நலன் கருதி ராமதாஸ் எழுப்பும் வினாக்களை மீண்டும் எழுப்புபவர்கள் எல்லாம் கைப்பாவை என்றால் ஒட்டுமொத்த தமிழகமும் அவரின் கைப்பாவைதான். இது ராமதாஸ் உள்ளிட்ட அனைவருக்கும் பெருமையளிக்கும் விஷயம் தானே தவிர, வருத்தப்படத்தக்கது அல்ல" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ``முரசொலி நிலம் தொடர்பான மூல ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று ராமதாஸ் பலமுறை வலியுறுத்தியும் அவற்றை வெளியிட மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்.. முரசொலி நிலத்தை அதன் உரிமையாளர்கள் முறைப்படி வாங்கியிருந்தால், அந்நிலத்துக்கான 1985-ம் ஆண்டு பட்டாவைப் போலவே, நிலப் பதிவு ஆவணங்களும் மூலப் பத்திரங்களும் அவர்கள் வசம் இருந்திருக்க வேண்டும்.

ராமதாஸ்
ராமதாஸ்

ஆனால், நிலப்பதிவு ஆவணங்களை மு.க. ஸ்டாலின் இப்போது வரை வெளியிடவில்லை. அப்படியானால் அவர்களிடம் ஆவணங்கள் இருக்கின்றனவா, இல்லையா. முரசொலி விவகாரத்தில் தனது நிலையை நியாயப்படுத்த முடியாத மு.க.ஸ்டாலின் சிக்கலை திசை திருப்பும் வகையில் எதை எதையோ பேசிக் கொண்டிருக்கிறார்" எனக் காட்டமாகக் குறிப்பிட்டிருக்கிறார் ஜி.கே.மணி.

``அப்போதைய சூழல்... அப்படி பேசியிருக்கலாம்..!” - முரசொலி நில விவகாரத்தில் வைகோ