Published:Updated:

மாமல்லபுரத்தில் மோடி - ஜின்பிங் சந்திப்பு! - வீடுவீடாகச் சோதனை நடத்தும் போலீஸ்

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு அடுத்த மாதம் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. அவர்களின் பாதுகாப்பு குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அப்பகுதியில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த ராஜநாயகம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Modi- Xi Jinping
Modi- Xi Jinping

சீன அதிபர் ஜின்பிங்கும் பிரதமர் மோடியும் கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்கள். மேலும், மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட இடங்களை அவர்கள் பார்வையிட உள்ளனர். இதற்காக கடந்த 17-ம் தேதி தமிழக அரசின் முதன்மைச் செயலர் செந்தில்குமார் தலைமையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மாமல்லபுரத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கடற்கரை கோயில் பகுதியில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்தும், இருவரும் திறந்த வெளியில் பேசுவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

Mahabalipuram
Mahabalipuram

சாலைகளை சரிசெய்வது, மின்விளக்குகள் அமைப்பது, ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்தும் முதன்மைச் செயலர் செந்தில்குமார் அதிகாரிகளிடம் ஆலோசித்தார். மத்திய உளவுப் பிரிவினர், தமிழக அரசு அதிகாரிகளும் அப்பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள். மாமல்லபுரம், கோவளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குச் செல்லும் காவல்துறையினர், அவர்களின் ஆதார் கார்டுகள், குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள், வாகனங்களின் எண்ணிக்கை, எத்தனை பேர் வெளியில் இருக்கிறார்கள் என்ற விவரங்களைக் கடந்த இரண்டு நாள்களாகச் சேகரித்து வருகின்றனர்.

மாமல்லபுரம் வரும் சீன அதிபர் ஜின்பிங்! - பிரதமரோடு பேசப் போகும் விஷயங்கள் என்னென்ன?

இந்த நிலையில், மாமல்லபுரம் மற்றும் கோவளம் சுற்று வட்டாரங்களில் உள்ள வீடுகளில் தங்கி இருப்பவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. செம்மஞ்சேரி குடியிருப்புப் பகுதியில் காவல்துறையினர் ஆய்வு செய்தபோது இலங்கையிலிருந்து சட்டவிரோதமாகத் தங்கி இருந்த ராஜநாயகம் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Mahabalipuram
Mahabalipuram

இலங்கை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த ராஜநாயகம் கடந்த 2009-ல் மூன்று மாத விசாவில் இந்தியா வந்துள்ளார். மீண்டும் இலங்கை செல்லாமல் சட்டவிரோதமாக இங்கேயே தங்கி இருப்பதாகவும், அவரின் மனைவி, மகன், மகள் ஆகியோர் கிளிநொச்சியில் இருப்பதாகக் காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னதாக மாமல்லபுரம் அருகே உள்ள வெண்புருஷம் என்ற மீனவ கிராமத்தில் நாகமுத்து என்பவர் வீட்டில் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லாமல் தங்கியிருந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த 36 வயதுடைய செக்வா அவு மெரா செப்பான்யா என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.