Published:Updated:

`தீபாவளிப் பரிசாக 3 நாள்கள் டாஸ்மாக்கை மூடவேண்டும்'- எடப்பாடிக்கு பொன்னார் வேண்டுகோள்!

தமிழகத்தில், பொதுமக்களுக்கு தீபாவளிப் பரிசாக 3 நாள்களுக்கு மதுக் கடைகளை அரசு மூட வேண்டும் என நாமக்கல்லில் முன்னாள் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

நாமக்கல்லில், முன்னாள் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசியபோது, "மராட்டியம் மற்றும் அரியானா மாநிலங்களில் பா.ஜ.க மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க, 2 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்தக் கூட்டணி தொடர்ந்து தமிழகத்தில் வெற்றி பெறக்கூடிய நிலை அமையும். அந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், தமிழக மக்களுக்கு தீபாவளிப் பரிசாகவும், எதிர்கால முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதலாகவும் 3 நாள்களுக்கு மதுக்கடைகளை மூட தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட வேண்டும். மதுவற்ற தீபாவளியை தமிழர்கள் கொண்டாடும் வகையில், தமிழக அரசு இந்த ஆணையைப் பிறப்பிக்க வேண்டும். காந்தியடிகளின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு பா.ஜ.க சார்பில் 15 நாள்கள் யாத்திரை நடத்தப்பட்டுவருகிறது.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

காந்தியடிகளின் அடிப்படைக் கொள்கைகளான தூய்மை இந்தியா, பெண்கள் பாதுகாப்பு, மது ஒழிப்பு, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு, நீர்நிலை பாதுகாப்பு, சுதேசிப் பொருள்களின் பயன்பாடு, தீண்டாமை ஒழித்தல் உட்பட, பல்வேறு விஷயங்களை இளைஞர்களுக்குக் கொண்டுசெல்லும் வகையில், பிரதமர் நரேந்திர மோடியால் அந்த யாத்திரை திட்டமிடப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் யாத்திரையில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தொகுதி மக்களை 3½ ஆண்டுகள் புறக்கணித்ததால்தான், காங்கிரஸ் கட்சி இடைத்தேர்தலில் தோற்றுள்ளது. இந்தத் தேர்தல், அரசியல்வாதிகளுக்குப் பாடமாக அமைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள எந்தக் கட்சியின் தலைவரும், தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் பிரதமர் நரேந்திர மோடியைப் போல் தமிழைப் பெருமைப்படுத்தியது இல்லை. அறிஞர்கள் நிறைய படைப்புகள் செய்துள்ளனர். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி, தமிழை உலக அளவில் எடுத்துச்சென்று பெருமைப்படுத்தியுள்ளார்" என்று கூறினார்.