Published:Updated:

`ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கட்சி, வேட்பாளருக்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும்!'-பொன்.ராதாகிருஷ்ணன்

ஸ்டாலின் மிசாவில் கைதுசெய்யப்பட்டதற்கும், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டதற்கும் உள்ள தொடர்புகுறித்து விளக்கினார், பொன்.ராதாகிருஷ்ணன்.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு, பா.ஜ.க சார்பில் நாடு முழுவதும் சமூக விழிப்புணர்வுப் பாதயாத்திரை நடத்திவருகிறார்கள். அந்த வகையில் நேற்று மாலை, திருச்சி மாநகர பா.ஜ.க சார்பில் திருச்சி ஶ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் பாதயாத்திரை தொடங்கியது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாதயாத்திரையைத் தொடங்கிவைத்தார். கோஷம் எழுப்பியபடி கிளம்பிய யாத்திரை, ஸ்ரீரங்கம் வழியாக திருவானைக்கோவில் நான்கு கால் மண்டபத்தில் நிறைவடைந்தது.

ஸ்டாலின் மிசா சட்டத்தில் சிறை சென்றது உண்மை. ஆனால், சிட்டிபாபு கொலைக்குக் காரணமானவர்களைத் தூக்கிக்கொண்டு திரிவதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பொன்.ராதாகிருஷ்ணன்

அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று. இந்த நாட்டின் தலைவராக இருந்த ஒருவரைப் படுகொலை செய்ததை ஒருக்காலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. யார் இந்தச் செயலில் ஈடுபட்டிருந்தாலும் ஈடுபட்டாலும், ஒருக்காலும் ஏற்றுக் கொள்ளவே முடியாது. இனிமேல் இப்படி நடந்தால், அதை வைத்து பெருமைப்பட்டுக்கொள்ள சிலர் இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டதையும், போலீஸார் அப்போது அவரைத் தாக்க முயன்றதுகுறித்தும் தற்போது சர்ச்சைகள் எழுந்துள்ளன. மிசா சட்டத்தில் கைதுசெய்யப்பட்டபோது ஸ்டாலினை போலீஸார் தாக்க முயன்றனர். அப்போது, முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி குறுக்கே பாய்ந்து தடுக்க முயன்றார். அதில் அவரின் காது, கேட்கும் திறனை இழந்தது. இதை ஆற்காடு வீராசாமி பலமுறை பேசக் கேட்டிருக்கிறேன்.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

அந்த வகையில், ஸ்டாலின் மிசா சட்டத்தில் சிறை சென்றது உண்மை. போலீஸாரால் ஸ்டாலின் தாக்குதலுக்குள்ளானது உண்மை. ஆனால் அப்படிப்பட்ட இயக்கம், சிட்டிபாபு கொலைக்குக் காரணமானவர்களைத் தூக்கிக்கொண்டு திரிவதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தேர்தலின்போது ஓட்டுக்குப் பணம் கொடுத்தது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட கட்சியின் வேட்பாளர் மற்றும் அவர் சார்ந்த கட்சி, அடுத்த 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடுவதைத் தடைசெய்ய சட்டம் உறுதிசெய்ய வேண்டும்” என்று கூறினார்.