Published:Updated:

`தாலிக் கயிற்றால் இளம்பெண் கழுத்தை நெரித்துக் கொலை; கணவன் தலைமறைவு!' - நடந்தது என்ன?

நந்தினி கொலைசெய்யப்பட்ட பிறகு அவரின் கணவர் ஆனந்தராஜ், மூன்று குழந்தைகளோடு தலைமறைவாக இருக்கிறார். அதனால் இந்த வழக்கில் ஆனந்தராஜைத் தேடிவருகிறோம்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (30). இவர் டிரைவராக வேலை பார்த்துவருகிறார். இவரின் மனைவி நந்தினி (27). இந்தத் தம்பதியருக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆனந்தராஜ், குடும்பத்தோடு சென்னையை அடுத்த பூந்தமல்லிக்குக் குடிபெயர்ந்தார். பூந்தமல்லி, கிழக்கு மாடவீதி, ஸ்கூல் தெருவில் நந்தினியின் தங்கை குடியிருந்துவருகிறார். அதனால் அவரின் வீட்டின் மாடியில் ஆனந்தராஜ் குடும்பத்தோடு தங்கியிருந்தார்.

கொலை
கொலை

இந்த நிலையில், ஆனந்தராஜின் வீடு நேற்று திறக்கப்படவில்லை. அதனால் கீழ்த்தளத்தில் குடியிருக்கும் நந்தினியின் தங்கை பவித்ரா, கதவைத் தட்டிப்பார்த்தார். பதில் வராததால் அக்கம் பக்கத்தினர் உதவியோடு உள்ளே சென்றார். அப்போது நந்தினி, தாலிக் கயிற்றால் கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பவித்ரா, பூந்தமல்லி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் நந்தினியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

 `சித்தி மகளைக் காதல் திருமணம் செய்ததால் இளைஞர் கடத்திக் கொலை?!'- திருத்தணியில் பரபரப்பு

இந்தச் சம்பவம் தொடர்பாக பூந்தமல்லி உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டியன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``நந்தினி கொலைசெய்யப்பட்ட பிறகு அவரின் கணவர் ஆனந்தராஜ், மூன்று குழந்தைகளோடு தலைமறைவாக இருக்கிறார். அதனால் இந்த வழக்கில் ஆனந்தராஜைத் தேடிவருகிறோம். இவரின் சொந்த ஊர் பண்ருட்டி என்பதால் அங்கு ஆனந்தராஜ் குறித்து விசாரித்தோம். அப்போது அங்கு ஒரு வழக்கில் ஆனந்தராஜை போலீஸார் தேடிவரும் தகவல் கிடைத்தது.

கொலை
கொலை

நந்தினியைக் காதலித்து திருமணம் செய்துகொண்ட ஆனந்தராஜ், அதன் பிறகு மீண்டும் ஒரு பெண்ணைக் காதலித்திருக்கிறார். அவருடன் நெருக்கமாக இருந்திருக்கிறார். அதனால் ஆனந்தராஜுக்கு பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சமயத்தில் ஆனந்தராஜுடன் நெருக்கமாக இருந்த பெண், தற்கொலை செய்துகொண்டார். அந்த வழக்கில்தான் ஆனந்தராஜை கடலூர் மாவட்டம், புதுப்பேட்டை போலீஸார் தேடிவருகின்றனர். இந்த வழக்கில் ஆனந்தராஜின் அம்மாவை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

ஆனந்தராஜ்
ஆனந்தராஜ்

புதுப்பேட்டை போலீஸாரிடமிருந்து தப்பிய ஆனந்தராஜ், குடும்பத்தோடு சென்னையில் தலைமறைவாக இருந்திருக்கிறார். இந்த நிலையில்தான் தற்போது நந்தினி கொலை செய்யப்பட்டிருக்கிறார். அதுவும் தாலிக் கயிற்றால் அவரின் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளங்களும், தலையில் உருட்டுக்கட்டையால் தாக்கியதற்கான காயங்களும் இருக்கின்றன. அதனால், நந்தினி கொலை வழக்கில் ஆனந்தராஜ் சிக்கினால்தான் என்ன நடந்தது என்பது தெரியவரும்" என்றனர்.

`சொத்துக்காகக் கொலை; ஏ.சி விபத்தால் இறந்ததாக நாடகம்!' - மூவர் கொலை வழக்கில் தம்பதி சிக்கியது எப்படி?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு