Published:Updated:

செயலிழந்த பி.ஓ.எஸ் கருவிகள்... அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்... உச்சத்தில் ரேஷன் குளறுபடி...

`பி.ஓ.எஸ்’  கருவி
பிரீமியம் ஸ்டோரி
`பி.ஓ.எஸ்’ கருவி

- இன்று போய் நாளை வா! -

செயலிழந்த பி.ஓ.எஸ் கருவிகள்... அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்... உச்சத்தில் ரேஷன் குளறுபடி...

- இன்று போய் நாளை வா! -

Published:Updated:
`பி.ஓ.எஸ்’  கருவி
பிரீமியம் ஸ்டோரி
`பி.ஓ.எஸ்’ கருவி

தமிழகத்திலுள்ள ரேஷன் கடைகளில் `பி.ஓ.எஸ்’ என்கிற கருவி மூலம் குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் பதியப்பட்டு, உணவுப்பொருள்கள் விநியோகிக்கப்படுகின்றன. பழைய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட அந்தக் கருவிகள் அடிக்கடி செயலிழந்துவிடுவதால் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் உணவுப் பொருள்கள் கிடைக்காமல் பாதிப்பு ஏற்படுவதுடன், கடை ஊழியர்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் 2 கோடியே 19 லட்சத்து 83 ஆயிரத்து 840 ரேஷன் அட்டைகளும், 34,773 ரேஷன் கடைகளும் உள்ளன. அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட உணவுப்பொருள்களை விநியோகம் செய்ய ‘பாயின்ட் ஆஃப் சேல்’ எனப்படும் பி.ஓ.எஸ் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் ஸ்கேன் செய்யப்படும் பி.ஓ.எஸ் கருவிகளும், அதனுடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் கருவிகளும் அடிக்கடி செயலிழந்துபோவதுதான் தற்போது பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தினேஷ் குமார் நம்மிடம் பேசினார்...

செயலிழந்த பி.ஓ.எஸ் கருவிகள்... அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்... உச்சத்தில் ரேஷன் குளறுபடி...

“2015-ம் ஆண்டு ரேஷன் கடைகளை கணினிமயமாக்கும் வகையில் ஸ்மார்ட் அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பிறகு 2019-ல் பி.ஓ.எஸ் கருவியுடன் இணைக்கும் வகையில் பயோமெட்ரிக் கருவிகள் வழங்கப்பட்டன. ஊழியர்கள் தங்கள் மொபைலில் ஹாட்ஸ்பாட் ஆன் செய்து, கருவியில் வைஃபை இணைப்பை ஏற்படுத்திய பிறகே கருவி வேலை செய்யும். தற்போது 5ஜி வரை தொழில்நுட்பம் வந்துவிட்டது. ஆனால், 2015-ல் 2ஜி தொழில்நுட்பத்தில் செயல்படும் வகையில் தயாரிக்கப்பட்ட பி.ஓ.எஸ் கருவிகள்தான் இப்போதும் எங்களிடம் இருக்கின்றன. இதனால் பல இடங்களில் அந்தக் கருவிகள் அடிக்கடி செயலிழந்துவிடுகின்றன. மக்கள் பலருக்கும் இந்தக் கருவிகள் பற்றிய தெளிவு இல்லாததால், பணியாளர்கள்தான் பொருள்களைக் கொடுக்க மறுப்பதாக நினைத்துக்கொண்டு பிரச்னை செய்கிறார்கள்.

பி.ஓ.எஸ் கருவியில் ரேஷன் அட்டையை இரு முறை ஸ்கேன் செய்தும், ‘எரர்’ காட்டினால், மூன்றாவதாக ‘ப்ராக்ஸி’ என்றொரு வழிமுறையைக் காண்பிக்கும். ப்ராக்ஸி முறையில் கார்டை ஸ்கேன் செய்யாமல் பொருள்களைக் கொடுக்கலாம். அதைத் தனி லெட்ஜரில் பதிய வேண்டும். இதைச் சில பணியாளர்களும் அதிகாரிகளும் தவறாகப் பயன்படுத்தி சம்பாதிக்கவும் செய்கிறார்கள். இதனால், ‘ப்ராக்ஸி முறையில் பொருள்களைக் கொடுக்கக் கூடாது’ என்று அதிகாரிகள் எங்களிடம் தனிப்பட்ட முறையில் சொல்கிறார்கள். ஆனால், பி.ஓ.எஸ் கருவிகளை மாற்றிக்கொடுங்கள் என்றால் அதற்கு பதில் இல்லை. புதிய டெண்டர்விட்டு, 4ஜி தொழில்நுட்பத்தில் செயல்படும் கருவிகளை வழங்கினால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். இல்லாவிட்டால் பொதுமக்களுடன் நாங்களும் சேர்ந்தே பாதிக்கப்படுவோம்” என்றார் விரிவாக.

தினேஷ் குமார்
தினேஷ் குமார்
ராஜாராமன்
ராஜாராமன்

இந்தப் பிரச்னை குறித்து நுகர்பொருள் வாணிபக் கழக ஆணையர் ராஜாராமனிடம் விளக்கம் கேட்டோம்... “அனைத்து இடங்களிலும் பி.ஓ.எஸ் கருவிகள் வேலை செய்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படியில்லையென்றால் எப்படி தினம்தோறும் பொருள்களை விநியோகிக்க முடியும்? கடந்த பிப்ரவரி மாதம் ஆதாரில் ஏற்பட்ட பிரச்னையால் பயோமெட்ரிக் வேலை செய்யவில்லை. அதுவும் உடனடியாக சரிசெய்யப்பட்டுவிட்டது. பல இடங்களில் கருவியைக் கையாளத் தெரியாமல் உடைத்தும், ஸ்கேன் செய்யும் இடத்தில் தேய்த்தும் விடுகிறார்கள். இதனாலேயே சிக்கல் ஏற்படுகிறது. சட்டப்படி நடக்க வேண்டும் என்பதைவிட, பொதுமக்களுக்கு உணவுப்பொருள்களைத் தடையின்றி கொடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில், சில சமயம் ப்ராக்ஸியைப் பயன்படுத்தி பொருள்களை விநியோகிப்பதில் தவறில்லை. ஆனால், அதைப் பதிவேட்டில் பதிய வேண்டும். அதிலும் சிலர் ஏமாற்றுவதால்தான் அதையும் தடுக்கிறோம். பி.ஓ.எஸ் கருவி வேலை செய்யவில்லை என்று துறை அதிகாரிகளிடம் சொன்னால் உடனடியாக மாற்றுக் கருவி வழங்கப்படும். மற்றபடி பி.ஓ.எஸ் கருவியில் எந்தப் பிரச்னையும் இல்லை” என்று ஒரேயடியாக மறுத்தார்.

எங்குமே பிரச்னை இல்லாததுபோல ஆணையர் சொல்லவே... உண்மை நிலையை அறிய சாலிகிராமம், கோடம்பாக்கம், கோயம்பேடு, அசோக் நகர், பாரிமுனை, ராயபுரம், சூளைமேடு, கீழ்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்றோம். அவற்றில் 10-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் பி.ஓ.எஸ் கருவியில் பிரச்னை இருப்பதைக் காண முடிந்தது. ஒவ்வொரு கடையிலும் 10 ஸ்மார்ட் கார்டுகளில் இரண்டு அல்லது மூன்று கார்டுகள் மட்டுமே ஸ்கேன் ஆகின. மற்றவற்றில் ‘உங்களின் பயோமெட்ரிக் சரிபார்ப்பு தோல்வியுற்றது. உள்ளீட்டுப் பிழை. மீண்டும் முயற்சிக்கவும்’ என்று காட்டியது. இரண்டு முறைக்கு மேல் ஒரு கார்டை ஸ்கேன் செய்ய முடியாது என்பதால், அடுத்ததாக ‘ப்ராக்ஸி பயன்முறை செயல்படுத்தப்பட்டது’ என்று மெஸேஜ் காட்டியது. ஊழியர்களிடம் பேசினால், “தினமும் இதே பிரச்னைதான் சார். கருவி வேலை செய்யலைன்னா அடுத்த நாள் வரச்சொல்லுவோம். அதுக்கு எங்களைத் திட்டிக்கிட்டே போவாங்க. அதேசமயம் வயசானவங்க வந்தா, அலைக்கழிக்கக் கூடாதுனு ப்ராக்ஸி முறையில கொடுப்போம். ப்ராக்ஸி முறையில கொடுத்த டீடெயில்ஸ் எங்க மேலதிகாரிகளுக்கும் டிஸ்ப்ளே ஆகும். அவங்க அடுத்த நாள் ஆய்வுக்கு வந்து, எங்களுக்கு அபராதம் போடுவாங்க. அதிகாரிகள், பொதுமக்கள்னு ரெண்டு பக்கமும் நாங்க இடி வாங்குறோம்...” என்றார்கள்.

குளறுபடி இருக்கிறது என்பது உறுதியாகத் தெரிகிறது. பிரச்னையை மறைக்காமல், அதற்கான தீர்வை நோக்கிச் செல்வதே மக்களுக்கு நன்மை பயக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism