Published:Updated:

சென்னை: `அறுவை சிகிச்சை அச்சம்... மருத்துவமனையிலிருந்து மாயம்!' - போலீஸாரைப் பதறவைத்த கர்ப்பிணி

அம்பத்தூர் பகுதியிலுள்ள மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண், அறுவை சிகிச்சைக்கு பயந்து மாயமனார். அவர் தன்னைக் கடத்தியதாக வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜ் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்திவருகிறார். இவரின் மனைவி ராஜலட்சுமி. தற்போது இவர் கர்ப்பமாக இருக்கிறார். ராஜலட்சுமிக்கு பிரசவவலி ஏற்பட்டிருக்கிறது. அதனால், அவர் குடும்பத்தினர் அவரை அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ராஜலட்சுமியின் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் இருப்பதால், அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை வெளியில் எடுக்க முடிவு செய்திருக்கின்றனர். எனவே, ராஜலட்சுமியின் உறவினர்களும், உதயகுமாரின் உறவினர்களும் மருத்துவமனையில் காத்திருந்தனர்.

கர்ப்பிணி ராஜலட்சுமி
கர்ப்பிணி ராஜலட்சுமி

இந்தச் சூழலில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ராஜலட்சுமி திடீரென மாயமானார். அவரை மருத்துவமனை முழுவதும் உறவினர்கள் தேடினர். இந்தச் சமயத்தில், ராஜலட்சுமியின் செல்போனிலிருந்து வாட்ஸ்அப் மெசேஜ் உறவினர் ஒருவருக்கு வந்தது. அதில் ராஜலட்சுமி, தன்னை யாரோ காரில் கடத்திக்கொண்டு செல்வதாகப் பதற்றத்துடன் கூறியிருக்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜலட்சுமியின் உறவினர்கள், ஆவடி உதவி கமிஷனர் சத்தியமூர்த்திக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீஸார் மருத்துவமனைக்கு வந்து விசாரித்தனர். மேலும், சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அப்போது ராஜலட்சுமி கூறியதைப்போல அவர் காரில் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அதனடிப்படையில் போலீஸார் ராஜலட்சுமியைத் தேடினர்.

கர்ப்பிணி கடத்தப்பட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மழை விடாமல் பெய்துகொண்டிருந்தபோதிலும் போலீஸார் கர்ப்பிணியைத் தேடினர். இந்த நிலையில், ராஜலட்சுமியின் செல்போன் சிக்னல் பொன்னேரி பகுதியில் காட்டியிருக்கிறது. அதையடுத்து, போலீஸார் அங்கு சென்றனர். அப்போது ராஜலட்சுமி, தன்னுடைய தோழி ஒருவரின் வீட்டிலிருந்தார். அதைக் கண்டுபிடித்த போலீஸார் ராஜலட்சுமியை மீட்டனர். பின்னர் அவரிடம் விசாரித்தபோது, அறுவை சிகிச்சைக்கு பயந்து மருத்துவமனையிலிருந்து வெளியில் சென்றதாகவும், அப்போது தன்னைக் கடத்திவிட்டதாகக் கூறியதாகவும் தெரிவித்தார். இதையடுத்து ராஜலட்சுமிக்கு புத்திமதிகளைக் கூறிய போலீஸார் அவரைக் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி விசாரணை
உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி விசாரணை

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``மருத்துவமனையிலிருந்து கர்ப்பிணி கடத்தப்பட்டதாகத் தகவல் கிடைத்ததும் சிசிடிவி, செல்போன் சிக்னல் உதவியோடு அவரைத் தேடிவந்தோம். கர்ப்பிணி ராஜலட்சுமி அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ் அவர் உறவினர்களை அதிர்ச்சியடையவைத்தது. அதனால் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினோம். இரவு முழுவதும் பொன்னேரி, பாடியநல்லூர் எனத் தேடினோம். அப்போதுதான் பொன்னேரியில் ராஜலட்சுமி இருக்கும் தகவல் கிடைத்தது. உறவினர்களிடம் ராஜலட்சுமியை ஒப்படைத்திருக்கிறோம். 10 மணி நேரத்தில் ராஜலட்சுமியை மீட்டிருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.

`போலீஸ் விசாரணையின்போது தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!'- அம்பத்தூர் ஏரிப்பகுதியில் நடந்தது என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு