Published:Updated:

புழல் சிறை; பரவும் கொரோனா... அச்சத்தில் சிறைவாசிகள்...!

புழல் சிறை
புழல் சிறை

700-க்கும் மேற்பட்டவர்கள் உள்ள புழல் தண்டனைச் சிறைப் பிரிவில், 120 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது. அவர்களில் 55 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு முறையான சிகிச்சைகள் வழங்கப்படுவதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சர்ச்சைகளுக்குப் பெயர் போன புழல் சிறையில் மீண்டும் பல சர்ச்சைகள் வெடித்துள்ளன. கைதிகளை அடிப்பது, துன்புறுத்துவது எனப் புழல் சிறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் மீது ஏற்கெனவே பல புகார்கள் உண்டு. இந்தநிலையில், கொரோனா காலத்தில் அது இன்னும் உச்சநிலையை அடைந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

700-க்கும் மேற்பட்டவர்கள் உள்ள தண்டனைச் சிறைப் பிரிவில், 120 பேருக்கு மட்டுமே கொரோனா சோதனை நடத்தப்பட்டதாகவும் அவர்களில் 55 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையிலும் மற்ற கைதிகளுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளாமல் இருப்பது கைதிகள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது. அந்த 55 பேருக்கும் உரிய சிகிச்சைகள் அளிக்காமல் இருக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாது, மற்ற சிறைகளில் இருந்து, புழல் சிறைக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வந்த சிறைவாசிகளை, கொரோனா பாதித்த சிறைவாசிகளுடன் தங்க வைத்தது மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இது குறித்து தேர்வு எழுத வந்த சிறைவாசிகள், வார்டனிடம் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

கண்காணிப்பாளர் செந்தில்குமார்
கண்காணிப்பாளர் செந்தில்குமார்

மேற்கண்ட விஷயங்களை முன்னிறுத்தி, புழல் சிறையில் 300-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் கடந்த சில நாள்களுக்கு முன்பாக உண்ணாவிரதம் இருந்துள்ளனர். இதனால் கோபம் கொண்ட சிறைத்துறை அதிகாரிகள், 50-க்கும் மேற்பட்ட காவலர்களைக்கொண்டு கைதிகளைக் கடுமையாகத் தாக்கியும் மண்டையை உடைத்தும் பல சித்ரவதைகளைச் செய்துள்ளனர். இதனால் 30-க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

தொடர்ந்து சிறைக்கைதிகளுக்கு ஆதரவாக பல சமூக ஆர்வலர்கள், தங்களின் சமூக வலைதளங்களில் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். ``தமிழக அரசு உடனடியாகக் காயம் பட்ட சிறைவாசிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். சிறைக் கண்காணிப்பாளர் செந்தில் குமார் உள்ளிட்ட சிறை அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்ற கோரிக்கையையும் முன்வைத்து வருகின்றனர். ஆனால், இது சம்பந்தமாக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது.

வழக்கறிஞர் புகழேந்தி
வழக்கறிஞர் புகழேந்தி

இது குறித்து, மனித உரிமைச் செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான புகழேந்தி பேசுகையில்,

``கொரோனா பாதித்த சிறைவாசிகளுக்கு முறையான சிகிச்சை மேற்கொள்ளாதது மட்டுமல்ல, சிறைவாசிகளுக்குக் கொரோனா தொற்று ஏற்படவே, சிறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமாரின் அக்கறையின்மைதான் காரணம். எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அவர் மேற்கொள்ளவில்லை. கைதிகளை அடிப்பது, துன்புறுத்துவது என எப்போதும் மிகக் கடுமையாகத்தான் அவர் நடந்துகொள்வார். தற்போது கொரோனா காலத்திலும் அவரின் அடக்குமுறைகள் தொடர்கின்றன. பலருக்குக் கடுமையான ஜூரம் ஏற்பட்டு, பலவித போராட்டங்களுக்குப் பிறகுதான் பரிசோதனைகளையே செய்தார்கள். 55 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஆறு பேர் கடுமையாகப் பாதிக்கப்பட அவர்களுக்கு வெளியே சிகிச்சை அளிக்கப்பட்டது.

தண்டனை சிறைவாசிகள் பலர் பரோலில் செல்லாமல் இருக்கிறார்கள். பரோலில் சென்ற கைதிகள் உள்ளே வரலாம் என உயர்நீதிமன்றம் தற்போது கூறியுள்ளதால், எங்களுக்குப் பரோல் கொடுங்கள் என்கிற கோரிக்கையை அவர்கள் முன்வைக்கிறார்கள். `அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை, மனைவிக்கு உடல்நிலை சரியில்லை, குழந்தையைப் பார்க்க' எனப் பலருக்கு பரோல் தேவைப்படுகிறது. ஆனால், சிறை அதிகாரிகள் அதுகுறித்து கண்டுகொள்வதே இல்லை. ஒட்டுமொத்தமாக சிறை நிர்வாகம் முடங்கிப் போயிருக்கிறது.

உச்ச்நீதிமன்றம்
உச்ச்நீதிமன்றம்
`தண்டனைக் கைதிகளுக்கும் பரோல் வழங்க வேண்டும்!' - தமிழக அரசின் மீதான குற்றச்சாட்டு என்ன?

ஏழு ஆண்டுகள் அல்லது அதற்குக் கீழ் தண்டனை பெறத்தக்க வழக்கில் உள்ள கைதிகள் அல்லது ஏழு ஆண்டுகள் தண்டனை பெற்ற சிறைக்கைதிகளுக்குப் பரோல் கொடுத்து, சிறையின் அடர்த்தியைக் குறைக்குமாறு உச்சநீதிமன்றம் (23.3.2020) உத்தரவிட்டது. ஆனால் தமிழகத்தில் அது போல யாரையும் வெளியில் விடவில்லை. புழல் சிறையில் ஏற்கெனவே கடுமையான இட நெருக்கடி இருக்கிறது. அதனால் சிறைக்கைதிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி உண்ணாவிரதம் இருந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, 50-க்கும் மேற்பட்ட காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு 30 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். தற்போது அடிபட்டவர்களை தனிமைப் படுத்தி சிகிச்சை அளித்து வருவதாகச் சொல்கிறார்கள். மண்டை உடைந்தவர்களை சிறைக்குள் வைத்து சிகிச்சை அளிக்கவே முடியாது. என்ன சிகிச்சை அளிக்கிறார்கள் எனத் தெரியவில்லை.

உறவினர்களைச் சந்திக்க, வழக்கறிஞர்களைச் சந்திக்க என எதற்கும் தற்போது கைதிகளுக்கு அனுமதி கிடையாது. குடும்பத்தினருடன் பேச, வீடியோ கால் வசதி ஏற்பாடு செய்தார்கள். புழல் சிறையில் கலவரம் நடப்பதற்கு முன்பே அதையும் நிறுத்திவிட்டார்கள். சிறைக்குள் என்ன நடக்கிறது என்பதே தெரியாத நிலைதான் தற்போது இருக்கிறது. சிறைத்துறை அமைச்சருக்கு நான் இதுகுறித்து, ஒரு மனு அனுப்பியிருக்கிறேன். உடனடியாக அவர் இதுகுறித்து விசாரணை நடத்தவேண்டும் '' என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

புழல் சிறைக்குள் நீதிபதிகள் தலைமையில் கள ஆய்வு செய்யப்படவேண்டும் என்பதே தற்போது பலரின் கோரிக்கையாக இருக்கிறது.

தொடர்ந்து சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் பேசினோம்,

``தண்டனைக் கைதிகள் விடுமுறையில் செல்வதற்கு பல விதிமுறைகள் இருக்கின்றன. அதைப் பின்பற்றித்தான் வெளியில் அனுப்ப முடியும். திடீரென ஐம்பது ஐம்பது பேராக, எங்களை வெளியில் அனுப்பவேண்டும் எனக் கைதிகள் கோரிக்கையை முன்வைத்தனர். அப்படிச் செய்ய முடியாது. சட்டப்படிதான் நடந்துகொள்ள முடியும். அதேபோல, பல்வேறு சிறைகளிலிருந்து தேர்வெழுத வந்தவர்கள், பரோல் ட்ரெயினிங்குக்காக வந்தவர்கள் கொரோனா ஊரடங்கின் காரணமாக அவர்களின் சிறைக்குப் போகாமல் இங்கே தங்க வைக்கப்பட்டனர். அவர்களும் எங்களை உடனே அனுப்ப வேண்டும் எனக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அவர்களில் இருபது இருபது பேராக பலத்த பாதுகாப்போடு அனுப்பிவருகிறோம். விரைவில் அனைவரையும் அனுப்பி வைத்துவிடுவோம். கொரோனா காரணமாகத்தான் நேரில் சந்திப்பதை தவிர்க்க, வீடியோ கால் வசதி ஏற்படுத்தப்பட்டது. அது நிறுத்தப்பட்டிருக்கிறது என்பது தவறான தகவல். கொரோனா சிகிச்சை குறித்து வெளியான தகவல்கள் உண்மையல்ல. அனைவருக்கும் பரிசோதனைகள் செய்து பாதிப்புள்ளவர்களைத் தனிமைப்படுத்தி முறையான சிகிச்சைகளை வழங்கி வருகிறோம். அதேபோல கண்காணிப்பாளர் மிகவும் நேர்மையான அதிகாரி. இருந்தாலும் அவரின் மீது சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரிக்கிறேன்'' என்றார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு