இந்திய குடியரசுத் துணை தலைவரான வெங்கைய நாயுடு, இந்தியாவில் ஒருவர் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும்கூட, இந்தியாவின் உயர்ந்த அரசியலமைப்பு பதவியை வகிக்க முடியும் என்பதாகக் கூறியிருக்கிறார்.
டெல்லியிலுள்ள குடியரசுத் துணைத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், இந்திய ஜனநாயகத் தலைமைத்துவக் கழகத்தின் (ஐ.ஐ.டி.எல்) மாணவர்களுடன் வெங்கைய நாயுடு உரையாற்றினார். அப்போது மாணவர்களிடையே பேசிய வெங்கைய நாயுடு, ``உலக அமைதி என்பது, மனிதகுலத்தின் முன்னேற்றத்துக்கு மிகவும் முக்கியமான ஒன்று. பயங்கரவாதம், பிரிவினைவாதம், வெறுப்பு போன்றவற்றுக்கு இந்த நாகரிக சமுதாயத்தில் இடமில்லை. இந்தியர்கள் தங்களின் சொந்தக் கலாசாரத்தைப் பற்றி மட்டும் பெருமைகொள்வதில்லை. அவர்கள் மற்ற அனைத்து கலாசாரங்களையும் மதங்களையும் மதிக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், இந்த உலகம் முழுவதுமே ஒரே குடும்பம் என்பதில் நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம். உலக அளவில் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகத் திகழ்கிறது. இங்கு ஒருவர் யாராக இருந்தாலும், எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும்கூட, இந்தியாவின் உயர்ந்த அரசியலமைப்புப் பதவியை வகிக்க முடியும். மேலும், எந்தவொரு மதத்துக்கும் எதிரான வெறுப்புப் பேச்சுகளையோ அல்லது இழிவான கருத்துகளையோ யாரும் கூறக் கூடாது. அதை ஒருபோதும் ஏற்கவும் முடியாது" கூறினார்.
மேலும் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய வெங்கைய நாயுடு, ``போராட்டம் என்பது ஜனநாயக உரிமை என்றாலும்கூட, வன்முறைகளில் ஈடுபடுவது தேசத்தின் நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கும்" என்று கூறினார்.
