Published:Updated:

``அந்த டைப் லோன் கொடுக்கறதில்லை!'' - கொந்தளித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ; பதறிய வங்கி அதிகாரிகள்

ஜெ.முருகன்
தனம் ஏ கே

”படித்த இளைஞர்களுக்கு கடன் வழங்க முடியவில்லை என்றால் வங்கியை வேறு ஊருக்கு மாற்றிக்கொள்ளுங்கள்” என்று கூட்டுறவு வங்கி அதிகாரிகளை எச்சரித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலு.

காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலு
காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலு ( அ.குரூஸ்தனம் )

புதுச்சேரியில் தி.மு.க ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. பாகூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் தனவேலு எம்.எல்.ஏ. இவர் தன் தொகுதி மக்களுக்கு எதிரான அனைத்து விவகாரங்களிலும் தலையிட்டு சொந்தக் கட்சி என்றும் பாராமல் கடுமையாக விமர்சித்து வருபவர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலு
காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலு
அ.குரூஸ்தனம்

இவர் தொகுதியில் அதிகளவில் இருக்கும் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருவதோடு, பொது மக்களுடன் இணைந்து மதுக்கடைகளை அடித்து நொறுக்கியவர். இந்நிலையில் இளைஞர்களின் சுய முன்னேற்றத்துக்கு கடன் தர மறுத்த வங்கி ஊழியர்களை இவர் கடுமையாக எச்சரிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சரியாக 53 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ காட்சிகளில் வரும் உரையாடல்கள் அப்படியே கீழே...

எம்.எல்.ஏ தனவேலு: ``கடை வெச்சிருக்கறவங்களுக்கு லோன் தரக் கூடாதுன்னு யார் சொன்னது ?”

வங்கி ஊழியர் : “ஹெட் ஆஃபீஸ்ல சொன்னாங்க.”

எம்.எல்.ஏ தனவேலு: ``ஹெட் ஆஃபீஸ்ல யாரு சொன்னாங்க ? யாருக்கு அதிகாரம் இருக்குது..? கடை வெச்சிருக்கவங்களுக்கு எதுக்கு லோன் ? இளைஞர்கள் படிச்சிட்டு இருக்காங்க. வேலை வாய்ப்பை பெருக்கிக்கணும். அவங்களுக்கும் லோன் கொடுக்கணும். அது இல்லைன்னா எதுக்கு உங்க பேங்க் இங்க இருக்கணும் ?''

வங்கி ஊழியர்களை எச்சரிக்கும் எம்.எல்.ஏ
வங்கி ஊழியர்களை எச்சரிக்கும் எம்.எல்.ஏ
அ.குரூஸ்தனம்

வங்கி ஊழியர் : ``அந்த டைப் லோன் இங்க கொடுக்கறதில்லை சார்”

எம்.எல்.ஏ தனவேலு: ``அந்த டைப் லோன் கொடுக்கறதில்லைன்னா உங்க பேங்க் எங்க ஊருக்கு தேவையில்லை. வெளியூருக்கு எடுத்துட்டுப் போயிடுங்க.”

வங்கி ஊழியர்: ``எப்படி சார்...”

எம்.எல்.ஏ தனவேலு: ``நீங்க யாருகிட்ட வேணும்னாலும் சொல்லுங்க. எங்க ஊரு எம்.எல்.ஏ கத்துறாருனு சொல்லு, உங்க மேலதிகாரி யாரு அவங்களை வரச் சொல்லுங்க.”

இந்த வீடியோ குறித்து விளக்கம் கேட்க எம்.எல்.ஏ தனவேலுவைத் தொடர்பு கொண்டோம். ``கூட்டுறவு வங்கியில் இளைஞர்கள் எதற்கு லோன் கேட்பார்கள் ? படித்துவிட்டு வேலை கிடைக்காததால் தனியாகத் தொழில் செய்து முன்னேற நினைக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு லோன் கொடுக்க மறுக்கிறார்கள். சுய தொழில் தொடங்க வேண்டும் என்று லோன் கேட்டால் உங்களிடம் எதுவுமே இல்லாமல் எப்படி லோன் தர முடியும் என்று கேட்கிறார்கள்.

கூட்டுறவு வங்கி
கூட்டுறவு வங்கி
அ.குரூஸ்தனம்

அங்கே இங்கே கடன் வாங்கி சிறிய அளவில் கடை வைத்துவிட்டு போய் கேட்டால், கடை வைத்திருப்பவர்களுக்கு லோன் இல்லை என்று திருப்பி அனுப்புகிறார்கள். லோன் தருவதும், தராமல் போவதும் ஒருபுறம் இருக்கட்டும். அதற்கான விண்ணப்பத்தைக் கூட அமைச்சர் சொன்னால்தான் இவர்கள் கொடுக்கிறார்கள். கூட்டுறவு வங்கித் துறை அமைச்சரின் குடும்ப சொத்தா?” என்று கொந்தளித்தார்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்க சமூக நலத்துறை மற்றும் கூட்டுறவு நலத்துறை அமைச்சர் கந்தசாமியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ``மக்களுக்கு சேவை செய்வதற்குத்தான் நாங்கள் இருக்கிறோம். வங்கிகளில் லோன் கொடுக்கும் விவகாரங்களிலெல்லாம் நான் தலையிடுவதில்லை. அதிகாரிகளிடம் நீங்களே விசாரித்துக் கொள்ளுங்கள். அனைத்து வங்கிகளுக்கும் கடன் கொடுப்பதற்கான வரம்புகள் இருக்கும். அதில் நான் தலையிட முடியாது.

அமைச்சர் கந்தசாமி
அமைச்சர் கந்தசாமி
அ.குரூஸ்தனம்

கடன் வாங்கியவர்களில் பெரும்பாலும் திருப்பி செலுத்த நினைக்காமல், கடன் தள்ளுபடியைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அதனால் அனைத்துக் கூட்டுறவு வங்கிகளும் கடந்த ஆட்சியில் இருந்து நஷ்டத்தில்தான் இயங்கி வருகின்றன. ஆனாலும், கடன் கேட்டு வரும் பொதுமக்களுக்கு கடன் வழங்க வேண்டும் என்றுதான் அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகிறேன்” என்றார்.