Published:Updated:

புதுச்சேரி: மத்திய குழுவினர் ஆய்வின்போது அதிகாரியை முற்றுகையிட்ட விவசாயிகள்! - நடந்தது என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மத்திய குழுவுடன் சென்ற அதிகாரி மீது தாக்குதல்
மத்திய குழுவுடன் சென்ற அதிகாரி மீது தாக்குதல்

மழை பாதிப்பை ஆய்வு செய்யவந்த மத்திய குழுவினருடன் சென்ற புதுச்சேரி வேளாண்துறை இயக்குநர் பாலகாந்தியை விவசாயிகள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜீவ் ஷர்மா தலைமையில் வேளாண்துறை ஐடி பிரிவின் இயக்குநர் விஜய் ராஜ்மோகன், சென்னையிலிருக்கும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மண்டல அதிகாரி ரணஞ்செய் சிங், மத்திய ஊரக வளர்ச்சித்துறை சார்பு செயலர் வரப்பிரசாத் உள்ளிட்ட ஐந்து பேர்கொண்ட குழு புதுச்சேரி வந்தது. அந்தக் குழு இன்று காலை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தது.

புதுச்சேரி மழை பாதிப்பை மத்திய குழுவினர் ஆய்வு
புதுச்சேரி மழை பாதிப்பை மத்திய குழுவினர் ஆய்வு

புதுச்சேரி பிள்ளைச்சாவடி மீனவர் கிராமத்தில் கடல் அரிப்பையும், வீடுகள் சேதமடைந்ததையும் பார்வையிட்டனர். அப்போது, மத்திய குழுவினரிடம் அந்தப் பகுதி மக்கள் தொடர் கடல் அரிப்பால் தூண்டில் முள்வளைவு தேவை என்று கோரிக்கை வைத்தனர். அதையடுத்து, இந்திரா காந்தி சிலை சதுக்கம் அருகேயிருக்கும் குடியிருப்புப் பகுதிகளிலும், மணவெளிப் பகுதியிலும் குடியிருப்புகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் ஏற்பட்ட பாதிப்பைப் பார்வையிட்டனர்.

கனமழையின்போது, மணவெளி தொகுதிக்குட்பட்ட என்.ஆர்.நகரில் வெள்ளத்தில் சிக்கிய 80 குடும்பங்களைப் பேரிடர் மீட்புக் குழு மீட்டது. அந்த இடத்தை மத்திய குழு இன்று ஆய்வு செய்தது. அப்போது மத்திய குழுவினரைத் தங்கள் பகுதிக்குள் வருமாறு உள்ளே அழைத்துச் சென்றனர் பாதிக்கப்பட்ட மக்கள். அப்போது ``புதுச்சேரி-கடலூர் சாலையில் பழைய பாலம் உடைந்துவிட்டது. இங்கு இரு வழிப் பாலம் அமைக்க வேண்டும். பாலத்துக்குக் கீழ் தடுப்பணை அமைத்தால் ஊருக்குள் மழை வெள்ளம் வருவதைத் தடுக்க முடியும்" எனப் பகுதி மக்கள் மத்திய குழுவிடம் தெரிவித்தனர்.

மத்திய குழு
மத்திய குழு

இறுதியாக பாகூர் கிராமப் பகுதியில் பாதிக்கப்பட்ட விளைநிலங்களைப் பார்வையிடச் சென்றனர் மத்திய குழுவினர். அப்போது அவர்களுடன் சென்ற புதுச்சேரி வேளாண்துறை இயக்குநர் பாலகாந்தியை முற்றுகையிட்ட விவசாயிகள், அவரை திரும்பிச் செல்லுமாறு கோஷமிட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒருகட்டத்தில் அவரைப் பிடித்துத் தள்ளிய விவசாயிகளிடமிருந்து போலீஸார் அவரை மீட்டு அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய விவசாயிகள், ``மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேரத்தில் ஒரு முறைகூட வேளாண்துறை இயக்குநர் பாலகாந்தி இங்கு வந்து ஆய்வு செய்யவில்லை. விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படுகிறார். சித்தேரி அணைக்கட்டில் இரண்டு ஷட்டர்கள் பழுதடைந்து பல ஆண்டுகளாகியும் அவற்றைச் சரிசெய்யவில்லை. வாய்க்கால் தூர்வாரவில்லை. மிக மோசமாகச் செயல்படுவதுடன், பணி செய்யும் அதிகாரிகளையும் தரக்குறைவாகப் பேசுகிறார்" என்றனர்.

நிவர் புயல்: மழை நீரில் மூழ்கிய பயிர்கள்... உடனடியாக விவசாயிகள் செய்ய வேண்டியது என்ன?

அதன் பிறகு, அந்த இடத்திலிருந்து விலகிச் சென்ற இயக்குநர் பாலகாந்தி மத்தியக்குழுவுடன் இணைந்தார். அப்போது தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ-வான செந்தில்குமார், ``விளைநிலங்கள் பாதிப்பால் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதனால், நிவாரணம் தந்து உதவ வேண்டும்" என்று மத்திய குழுவிடம் விளக்கினார். பின்னர் முள்ளோடைப் பகுதியில் சேதமடைந்த மின்சாதன பொருள்கள் குறித்தும், பரிக்கல்பட்டு கிராமத்தில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதையும் பார்வையிட்டனர். புதுச்சேரியிலிருந்து கடலூருக்குப் புறப்பட்ட மத்திய குழுவிடம் புதுச்சேரி எல்லையான முள்ளோடையில் திமுக எம்.எல்.ஏ-க்கள் சார்பில் கூட்டாக மனு தரப்பட்டது. இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரான சிவா எம்.எல்.ஏ கூறுகையில், ``புதுச்சேரியில் கடந்த புயலின்போது கணக்கெடுப்பு ஆய்வு நடத்தப்பட்டு, போதுமான நிதி வழங்கவில்லை. அதனால் விவசாயிகள் கோபத்திலிருக்கின்றனர். எனவே, ஆளுநர் தமிழிசை உடனடியாக மத்திய அரசிடம் பேசி குறைந்தது நிவாரண நிதியாக ரூ.500 கோடி பெற்றுத் தர வேண்டும்" என்றார்.

புதுச்சேரி: மது போதையில் தனியார் விடுதியில் தகராறு - டாடி ஆறுமுகத்தின் மகனைத் தேடும் போலீஸ்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு