Published:Updated:

`எங்க தொழிலுக்குக் குழந்தைதான் முதலீடு!’ – திருட்டு வழக்கில் வளர்ப்பு பெற்றோர் உட்பட 4 பேர் கைது!

சட்டவிரோத தொழிலுக்குக் குழந்தையைப் பயன்படுத்திய பெண்களையும், குழந்தையை வாடகைக்குவிட்ட வளர்ப்புப் பெற்றோரையும் வளைத்துப் பிடித்து கைதுசெய்திருக்கிறது புதுச்சேரி போலீஸ்.

புதுவை அரசுக்குச் சொந்தமான புதுச்சேரி சாலைப் போக்குவரத்து பேருந்தில் (பி.ஆர்.டி.சி) நடத்துநராகப் பணியாற்றிவருபவர் வேல்விழி. அரும்பார்த்தபுரத்தைச் சேர்ந்த இவர் 2021, அக்டோபர் 9-ம் தேதி நெல்லித்தோப்பு சுப்பையா சிலை சந்திப்பில் பேருந்துக்காகக் காத்திருந்தார். அப்போது ஒரு குழந்தையுடன் அங்கு காத்திருந்த இரண்டு பெண்களிடம் பேசிக்கொண்டிருந்தார் வேல்விழி. சிறிது நேரத்தில் அந்த இரண்டு பெண்களும் விழுப்புரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றில் ஏறிச் சென்றனர். அதையடுத்து வீட்டுக்குச் சென்ற வேல்விழி தனது மணிபர்ஸுடன் அதிலிருந்த நகை மற்றும் பணம் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் அது குறித்துப் புகாரளித்தார்.

திருட்டு
திருட்டு
சித்தரிப்புப் படம்

அந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார் அந்தப் பகுதியிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், குழந்தையுடன் நிற்கும் இரண்டு பெண்களும் நடத்துநர் வேல்விழியிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே அவரது கவனத்தைத் திசை திருப்பி, மணிபர்ஸைத் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. தொடர்ந்து அந்தப் பெண்களின் முகம் தெரியும்படி சிசிடிவி காட்சிகளைப் புகைப்படமாக மாற்றிய போலீஸார், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநில காவல்துறையினருக்கு அனுப்பிவைத்தனர். அந்தப் புகைப்படங்களைப் பார்த்துவிட்டு புதுச்சேரி போலீஸாரை தொடர்புகொண்ட ஆந்திர காவல்துறையினர், புகைப்படத்தில் இருக்கும் அந்தப் பெண்கள் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்று உறுதிப்படுத்தினர்.

அதையடுத்து, ஆந்திராவுக்கு விரைந்த புதுச்சேரி போலீஸார், அந்த மாநில காவல்துறையினரின் உதவியுடன் அந்த இரண்டு பெண்களையும் அழைத்து வந்தனர். பணத்தைப் பறிகொடுத்த வேல்விழி அந்த இரண்டு பெண்களையும் அடையாளம் காட்டியதால் அவர்கள்மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அப்போது அந்தப் பெண்கள் வைத்திருந்த குழந்தை குறித்து போலீஸார் கேட்டபோது, `இது எங்கள் குழந்தைதான்’ என்றும், தங்களின் பெயர் செல்வசுந்தரி, ஆர்த்தி என்றும், சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீஸாரிடம் தெரிவித்தனர்.

குற்றம்
குற்றம்

அதனடிப்படையில் அந்தப் பெண்கள் கொடுத்த முகவரிக்குச் சென்று விசாரித்தபோது, அவர்கள் அளித்த தகவல்கள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. அதையடுத்து உஷாரான போலீஸார், உடனே அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட குழந்தையைக் காப்பகத்தில் ஒப்படைத்தனர். அதையடுத்து, ``ஆந்திர மாநிலம், சித்தூரைச் சேர்ந்த இரண்டு பெண் கைதிகளிடமிருந்து இரண்டு வயதுக் குழந்தை மீட்கப்பட்டிருக்கிறது. அந்த குழந்தையைப் பற்றித் தகவல் தெரிந்தால் தெரிவிக்கலாம்" என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து அந்த இரண்டு பெண்களையும் மீண்டும் தங்கள் கஸ்டடிக்கு எடுத்து விசாரித்தது போலீஸ். அப்போது ``இந்தக் குழந்தையை அவங்க அப்பா, அம்மாகிட்ட இருந்துதான் வாடகைக்கு எடுத்திருக்கோம். இந்த குழந்தைதான் எங்கள் தொழிலுக்கு முதலீடு. திருட்டு மூலம் கிடைக்கிற வருமானத்துல அவங்களுக்கும் கொஞ்சம் கொடுத்துடுவோம்" என்று கூறியிருக்கிறார்கள். அதைக் கேட்டு வாயடைத்துப்போன போலீஸார், மீண்டும் ஆந்திராவுக்கு விரைந்தனர். அங்கு அந்தப் பெண்கள் கூறிய தகவலின் அடிப்படையில் குழந்தையின் வளர்ப்புப் பெற்றோரான ஜீவா, அவரின் மனைவி துர்கா ஆகியோரைக் கைதுசெய்தனர்.

இன்ஸ்பெக்டர் பாபுஜி
இன்ஸ்பெக்டர் பாபுஜி

இந்தச் சம்பவம் தொடர்பாக நம்மிடம் பேசிய உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி, ``அந்தப் பெண்கள் கொடுத்த முகவரி போலியானது என்று தெரியவந்ததுமே, இதில் ஏதோ தவறு இருக்கிறது என எங்களுக்குப் புரிந்துவிட்டது. அதனடிப்படையில் அவர்களிடம் நடத்திய விசாரணையில், குழந்தையை வாடகைக்கு எடுத்து திருட்டில் ஈடுபடுவது தெரியவந்தது. இவர்கள் இன்னும் வேறு எந்தெந்தச் சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை செய்துவருகிறோம்" என்றார்.

எஸ்.ஐ தமிழரசன் இது குறித்துப் பேசுகையில், ``அந்தப் பெண்கள் கொடுத்த முகவரி போலியானது என்று நாங்கள் கண்டுபிடித்த பிறகும்கூட அவர்கள் உண்மையைக் கூறவில்லை. அதனால் முதலில் அவர்கள் வைத்திருந்த செல்போன் எண்களின் கால் டீட்டெய்ல்ஸ் எடுத்தோம். எங்கிருந்தெல்லாம் போன் வந்ததோ அந்தந்த ஊர்களுக்கு அந்த இரண்டு பெண்களின் போட்டோவுடன் எங்கள் க்ரைம் டீமை அனுப்பிவைத்தோம். சின்னச் சின்னத் தகவலுக்குக்கூட ஆந்திரா சித்தூருக்கும், புதுச்சேரிக்கும் அலைந்தோம். அப்படித்தான் குழந்தையின் வளர்ப்பு பெற்றோர்களான ஜீவா, துர்காவைக் கண்டுபிடித்தோம். ஆனால் அவர்களிடமும் குழந்தையைத் தத்து எடுத்ததற்கான எந்தவித ஆவணமும் இல்லை. அதேபோல அந்த குழந்தையின் பெயர், ஆதார் கார்டு போன்ற எந்த இடத்திலும் பதிவு செய்யப்படவில்லை.

எஸ்.ஐ தமிழரசன்
எஸ்.ஐ தமிழரசன்
நாமக்கல்: 14 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் கொடூரம்! - உறவினர் உள்ளிட்ட 11 பேர் கைது

ஒன்றரை மாதத்தில் போடக்கூடிய தடுப்பூசிகூட அந்தக் குழந்தைக்குப் போடப்படவில்லை. இதன் மூலம் சட்டவிரோதத் தொழிலில் ஈடுபடுத்துவதற்காகவே அந்தக் குழந்தை கடத்தப்பட்டிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். குழந்தையை வைத்துக்கொண்டு பேருந்தில் இடம் கிடைக்காமல் நிற்பவர்கள் மீது நம் அனைவருக்கும் ஏற்படும் இரக்கத்தைப் பயன்படுத்தித்தான் திருட்டில் ஈடுபடுகிறார்கள். பக்கத்தில் அமர்ந்திருப்பவர்களிடம் குழந்தையைப் பேசவைத்து, விளையாட்டுக் காட்டி அவர்களின் கவனத்தை திசைதிருப்பி திருட்டில் ஈடுபடுகிறார்கள். இந்த வழக்கில் தற்போது நான்கு பேரைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு