Published:Updated:

`தினகரனை அடையாளம் காட்டியதே நான்தான்..!' - புகழேந்தி வார்த்தையால் கொதிக்கும் அ.ம.மு.க

சகாயராஜ் மு

கட்சியில் இருந்துகொண்டே மாற்றக்கட்சியினருக்கு ஆள் சேர்ப்பதாக அ.ம.மு.க செய்தித் தொடர்பாளர் புகழேந்தி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

pugalenthi
pugalenthi

கடந்த 6-ம் தேதி கோவை சென்றுள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி. அங்குள்ள ஹோட்டலில் தங்கியிருந்த அவரைக் கட்சியின் நிர்வாகிகள் சந்தித்துள்ளனர். அவருக்குப் பெண் நிர்வாகிகள் சிலர் சால்வை அணிவித்துள்ளனர். அப்போது, `நீங்கள் எந்தப் பதவியில் இருக்கீங்க?' என்று புகழேந்தி கேட்க, `இணைச் செயலாளராக இருக்கேன்' என்று பெண் நிர்வாகி சிரிப்புடன் பதில் சொல்கிறார். பின்னர், `அனைவரும் ஒன்றாகத்தான் வந்தீர்களா?' என்று புகழேந்தி கேட்க, `ஆமாம். உங்ககிட்ட 5 நிமிடம் பேசத்தான் வந்தேன். உழைக்கிறதுக்கும் கட்சியை மேம்படுத்தவும் நாங்கள் ரெடியாக இருக்கோம்' என்கிறார்.

pugalenthi
pugalenthi

இதற்கு பதில் அளித்துப் பேசிய புகழேந்தி, "ஒண்ணும் தப்பா நினைக்காதீங்க. என்னன்னு கேட்டீங்கன்னா, போற இடத்திலேயேயும் இருக்கிற இடத்திலேயேயும் நமக்கு முகாந்திரம் இல்லாமல் இனிமேல் இருக்கக் கூடாது. கரெக்ட்டான ஃப்யூச்சரையும் நமக்கான பொசிஷனையும் சரிபண்ணிட்டுத்தான் நாம போகணும். அந்த ஐடியாவோடுதான் நான் உட்கார்ந்துகிட்டு இருக்கேன். அந்தப் பட்டியலையும் ரெடி பண்ணி வைக்கிறேன். இங்கு யார் கிட்டேயும் போய் நிற்க எனக்கு இஷ்டமில்லை. எல்லாரையும் திருப்தி பண்ணி, அட்ரஸ் இல்லாமல் 14 வருஷம் வெளியில் இருந்த டி.டி.வி.தினகரனை ஊருக்குக் காண்பித்ததே நான்தான். ஜெயலலிதா சாவில்கூட அவர் கிடையாது. யோசனை பண்ணி உங்ககிட்ட பேசுறேன்" என்று முடிகிறது வீடியோ.

இந்த வீடியோ குறித்து புகழேந்தியிடம் பேசினோம். " இன்னொரு போனில் பேசிக் கொண்டிருக்கிறேன். விரைவில் உங்களிடம் பேசுகிறேன்" என்றதோடு முடித்துக்கொண்டார்.

ttv dinakaran
ttv dinakaran

புகழேந்தியின் பேச்சு, அ.ம.மு.க வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாகப் பேசிய பெரம்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல், " தினகரனை அடையாளப்படுத்தியதாக புகழேந்தி கூறுவது சரியல்ல. அவர் பேசுவதை பார்த்தால் வேறுகட்சிக்கு செல்வதைப் போல் தெரிகிறது" என்றார்.