Published:Updated:

தமிழகத்தில் 2 ரயில்கள் தனியாருக்குத் தாரைவார்ப்பு? - ரயில்வே துறையில் என்ன நடக்கிறது?

தினேஷ் ராமையா

தமிழகத்தில், இரண்டு ரயில்களைத் தனியார் இயக்குவதற்கு அளிக்க ரயில்வே முடிவுசெய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ரயில்வே
ரயில்வே

2014-ம் ஆண்டு, மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பேற்றதும் ரயில்வே துறையில் சேவைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக பிபேக் தேப்ராய் தலைமையில் கமிட்டி ஒன்றை அமைத்தது. அந்தக் கமிட்டி, ரயில்வேயின் பல்வேறு துறைகளில் ஆய்வு நடத்தி, அதில் மேற்கொள்ளவேண்டிய மாற்றங்கள்குறித்து அரசுக்கு ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தது.

ரயில்வே
ரயில்வே

அதில் முக்கியமானது, ரயில்வே துறையில் தனியார் முதலீடு செய்ய ஊக்கமளிக்க வேண்டும் என்பது. அதன்படி, `பயணிகள் மற்றும் வர்த்தகரீதியில் இயக்கப்படும் ரயில்களை இயக்க தனியாருக்கு அனுமதி அளிக்க வேண்டும். ரயில்வேயின் உற்பத்தி மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் தனியாரை அனுமதிக்க வேண்டும்' போன்ற பரிந்துரைகளை பிபேக் தேப்ராய் கமிட்டி, தனது அறிக்கையில் கூறியிருந்தது. இதன் அடிப்படையில், பல்வேறு திட்டங்களை மத்திய அரசு முன்னெடுத்துவருகிறது.

பியூஷ் கோயலின் கண்ணாமூச்சி ஆட்டம்! தனியார்மயமாகுமா ரயில்வே?

அதன் ஒருபகுதியாக, நாட்டில் உள்ள சில வழித்தடங்களில் பயணிகள் ரயில்களைத் தனியார் இயக்க அனுமதி அளிக்க அரசு முடிவுசெய்தது. முதற்கட்டமாக, டெல்லி - லக்னோ இடையிலான தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை தனியார் இயக்க மத்திய அரசு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அனுமதி அளித்தது. ரயில்களைத் தனியார் இயக்க அனுமதி அளிப்பதன்மூலம் டிக்கெட் கட்டணங்கள் உயரும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை மணியடிக்கிறார்கள்.

ரயில்வே
ரயில்வே

அதேபோல், லாபம் ஈட்டும் வகையில் இயக்கப்படும் ரயில்களைத் தனியாருக்குத் தாரை வார்த்தால், ரயில்வேயின் வருமானம் பாதிக்கப்படும் என்றும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. அதேபோல், விமான டிக்கெட்டுகளில் பயன்படுத்தப்படுவது போல, கடைசி நேரங்களில் எடுக்கப்படும் டிக்கெட்டுகளுக்கான விலை பன்மடங்கு உயர்த்தப்படும் என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

அந்த வகையில், தமிழகத்தில் சென்னை - மதுரை இடையிலான தேஜாஸ் ரயில் மற்றும் சென்னை - கோயம்புத்தூர் இடையே இயக்கப்படும் ஒரு விரைவு ரயில் ஆகியவற்றை இயக்கும் பொறுப்பை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கோவையில் நேற்று நடைபெற்ற எஸ்.ஆர்.எம்.யூ கூட்டத்தில் ரயில்வேயின் இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், அதுபோன்ற நடவடிக்கைகளில் ரயில்வே ஈடுபடும்பட்சத்தில், மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என்றும் அந்தத் தொழிற்சங்கம் எச்சரித்திருக்கிறது.

ரயில்வே
ரயில்வே

ரயில்களை இயக்கும் பொறுப்பைத் தனியார் வசம் ஒப்படைக்கும்பட்சத்தில், அரசு அளித்துவரும் 53 சதவிகித மானியம் ரத்துசெய்யப்படும் என்றும் இதனால், பயணிகள் டிக்கெட்டுகளை இரு மடங்கு விலை கொடுத்து வாங்கவேண்டி வரும் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். ஒவ்வொரு மண்டலத்திலும் இரண்டு ரயில்கள் தனியாருக்குத் தாரைவார்க்க அரசு முடிவுசெய்துள்ளதாகவும், இது தவிர்த்து ரேபரேலியில் உள்ள ரயில்வே பெட்டி தயாரிப்புத் தொழிற்சாலையையும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ரயில்வே வட்டாரத்தில் விசாரித்தோம். ``ரயில்வே துறையில் தனியாரை ஈடுபடுத்துவதில் அரசு ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில், பயணிகள் ரயிலை இயக்கும் பொறுப்பை தனியாருக்குக் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசின் 100 நாள் செயல்திட்டத்தில் அது இருக்கிறது. தமிழகத்தில் இரண்டு ரயில்களை இயக்கும் பொறுப்பு தனியாருக்குக் கொடுக்கப்பட இருக்கிறது.

தேஜாஸ் ரயில்
தேஜாஸ் ரயில்

ஆனால், அவை எந்த இரண்டு ரயில்கள் என்பது முடிவு செய்யப்படவில்லை. அதுகுறித்து அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை என்ற அளவில் மட்டுமே இருக்கிறது. குறிப்பாக, சென்னை - மதுரை தேஜாஸ் எக்ஸ்பிரஸ், சென்னை - கோவை இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை தனியாருக்குக் கொடுக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது என்பது உறுதியான தகவல் இல்லை'' என்பதோடு முடித்துக்கொண்டனர்.