Election bannerElection banner
Published:Updated:

மன்றத்தினரால் முகம்சுளித்த ரஜினி... மூடப்பட்டதா ஐபேக் அலுவலகம்?! - கழுகார் அப்டேட்ஸ்

ரஜினி
ரஜினி

``யப்பா, ஒரு நாளில் எத்தனை மீட்டிங்தான் அட்டெண்ட் செய்வீர்கள்... எப்போது கூப்பிட்டாலும் `ஆபீஸ் மீட்டிங்... ஆபீஸ் மீட்டிங்' என்றே சொல்கிறீர்களே?” எனப் பொய்யாக சலித்தபடி வாட்ஸப் காலில் வந்தார் கழுகார்.

``கடகடவென செய்திகளை வாசிக்கிறேன். மடமடவென குறித்துக்கொள்ளும்... எனக்கு அடுத்த மீட்டிங் இருக்கிறது” என்றுபடியே விறுவிறு செய்திகளுக்குள் நுழைந்தார்.

கருணாநிதி பிறந்தநாள் விழா குழப்பம்!

``கலைஞரின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதில்கூடவா சொதப்புவார்கள்...” என்று புலம்பித்தீர்க்கிறார்கள் உடன்பிறப்புகள். கருணாநிதியின் பிறந்தநாள் விழாவுக்காக தி.மு.க சென்னை மாவட்டத்தின் அனைத்து மா.செ-க்களும் சேர்ந்து கொடுத்த அறிக்கையில், `கலைஞரின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும்; மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை சிறப்பாக வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்கள். அதையொட்டி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுத்த அறிக்கையிலும் அப்படித்தான் இருந்தது.

ஆனால், அதன்பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஸ்டாலின் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், `கொரோனா பிரச்னை காரணமாக கலைஞரின் பிறந்தநாள் விழாவை எளிமையாகக் கொண்டாட வேண்டும்; தொண்டர்கள் கோபாலபுரம் இல்லத்துக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், முன்பாகவே தொண்டர்கள் மெரினாவில் கருணாநிதியின் நினைவிடத்திலும் கோபாலபுரம் மற்றும் சி.ஐ.டி காலனி வீட்டிலும் குவிந்துவிட்டார்கள். முன்யோசனை வேண்டாமா என்பதே அப்பாவித் தொண்டனின் மனக்குரல்!

அத்தைக்கு ஒரு புத்தகம்!

போயஸ் கார்டன் வழக்கு தனக்கு சாதகமாக வந்துள்ள நிலையில் உற்சாகமாக இருக்கும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், தன் அத்தை ஜெயலலிதா பற்றிய செய்திகளைத் தொகுத்து புத்தகமாக எழுதிக்கொண்டிருக்கிறார். அரிய படங்களுடன் தயாராகும் அந்தப் புத்தகத்தை சென்னையில் பிரமாண்டமாக விழா எடுத்து வெளியிடப்போகிறாராம்!

 தீபக்
தீபக்

என்னதான் ஆச்சு இந்த நீலகிரி எஸ்பி-க்கு?

நீலகிரி மாவட்ட எஸ்பி-க்களாக இருந்த முரளி ரம்பா, சண்முகப் பிரியா ஆகியோருக்கு அடுத்து, மிகுந்த எதிர்பார்ப்புடன் கவனிக்கப்பட்டவர் சசி மோகன் ஐபிஎஸ். நீலகிரி எஸ்பி-யாக இவர் பொறுப்பேற்றதும், பல அதிரடிகளை அரங்கேற்றுவார் என்று நீலகிரி மக்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், மாவட்ட எஸ்பி என ஒருவர் இருக்கிறாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது என்று புலம்பல் சத்தம் கேட்டதுதான் மிச்சம்.

அரசு நிகழ்வுகளில் கலெக்டர் வந்து, எஸ்பி-க்காகக் காத்திருக்கும் நிலைதான் இருக்கிறது. புகார் தெரிவிப்பதற்காக மக்கள் அழைத்தால் போனை எடுப்பதும் இல்லையாம். போலீஸ் ஸ்டேஷன்களில் கட்டப்பஞ்சாயத்து நடப்பதாக மாவட்டம் முழுவதும் புகார்கள் குவிகின்றன. அதற்கும் எந்த நடவடிக்கையும் இல்லை. என்னதான் ஆச்சு நீலகிரி எஸ்பி-க்கு என்று பலரும் கேட்கின்றனர்.

கிச்சு கிச்சு மூட்டிய எ.வ.வேலு!

திருவண்ணாமலை தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளர் எ.வ.வேலு, சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது உளறிக் கொட்டிய சம்பவம் மாவட்டம் முழுவதும் சிரிப்பாய் சிரிக்கிறது. ``எனக்குக் கிடைத்திருக்கிற கணக்குப்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில மட்டும் கொரோனா பாதிப்புக்கு 300-க்கும் மேற்பட்டவங்க இறந்துட்டாங்க. அந்தக் குடும்பங்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுவிட்டதா...’’ என்று அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே, அருகிலிருந்த நிர்வாகிகள் அவர் காதில் கிசுகிசுத்தனர்.

`அடுத்து சரியாகப் பேசுவார்’ என்று நினைத்த நிருபர்களிடம், ``இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் கட்சி தரப்பில் நிதியும் கொடுத்துள்ளோம்’’ என்று ஒரே போடாகப் போட்டார். ``சார், திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு இதுவரை ஒருவர்கூட இறக்கவில்லை’’ என்று நிருபர்கள் கூறவும், அசடு வழிந்தபடி அங்கிருந்து நகர்ந்தார் எ.வ.வேலு.

டி.டி.வி தினகரன்
டி.டி.வி தினகரன்

டி.டி.வி அமைதியோ... அமைதி!

மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் அவ்வப்போது இணையம் வாயிலாகத் தொண்டர்களை சந்திக்கின்றனர். காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் இணையம் வழியாக பிரஸ் மீட் நடத்துகிறார். அ.ம.மு.க தகவல் தொழில்நுட்பப் பிரிவினரும்கூட, சமூக வலைதளங்கள் வாயிலாக உறுப்பினர் சேர்க்கை பணியைத் தொடங்கியுள்ளனர். ஆனால், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மட்டும் இணையத்தைப் பயன்படுத்தாமல் அமைதியாகிவிட்டார். ``அவர் தங்கியிருக்கும் புதுச்சேரி ஆரோவில் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் 2 ஜி சிக்னல் மட்டுமே கிடைப்பதால், இணையம் பயன்படுத்துவதை விரும்புவதில்லையாம். தேவைப்பட்டால் மட்டும் லேண்ட் லைன் வாயிலாக இணையத்தை பயன்படுத்துகிறார். புத்தகங்களை அதிகமாக வாசிக்கிறார்” என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.

மூடப்பட்டதா ஐபேக் அலுவலகம்?

பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவன அலுவலகம் சென்னை அண்ணா நகர் `எஃப் ப்ளாக்’ முதல் தெருவில் இயங்குகிறது. தொடக்கத்தில் எந்நேரமும் இளைஞர்கள் புடைசூழ பரபரவென இயங்கிவந்த இந்த அலுவலகம் தற்போது மூடப்பட்டுள்ளது. `ஒன்றிணைவோம் வா’ திட்டத்தால் தி.மு.க மாவட்டச் செயலாளர்களுக்கும் ஐபேக் நிறுவனத்துக்கும் உரசல்கள் அதிகமான நிலையில், ஈகோ யுத்தத்தின் வெளிப்பாடாகத்தான் ஐபேக் அலுவலகம் மூடப்பட்டதாக தி.மு.க-வில் பரபரப்பாக பேசிக்கொள்கிறார்கள். ஆனால் ஐபேக் தரப்பினரோ, ``கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத்தான் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது” என்கின்றனர்.

வி.பி.துரைசாமி
வி.பி.துரைசாமி

``நான் வேட்டி வாங்கப் போனேன்...” புராணம் பாடும் வி.பி.துரைசாமி!

வி.பி. துரைசாமிக்கு பா.ஜ.க, கமலாலயம் அலுவலகத்தில் தனி அறை கொடுத்து அசத்தியிருக்கிறது. ``எனக்கு அறிவாயலத்துல கொடுத்திருந்த ரூமைவிட இது பெரிசுய்யா” என்று தனக்குள் சொல்லி மகிழ்கிறாராம் துரைசாமி. ``பி.ஜே.பி கலர் வேட்டி வாங்க தி.நகர் ஜவுளிகடைகளுக்குப் போனேன். `ஸ்டாக்கே இல்லை... வந்ததும் தீர்ந்துபோயிடுது சார்’ என்று சொல்கிறார்கள். அந்த அளவுக்கு பி.ஜே.பி-க்கு டிமாண்ட் இருக்கிறது. கடை கடையாக அலைந்து ஆறு வேட்டிகளை வாங்கினேன்” என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் பா.ஜ.க புராணம் பாடுகிறாராம் துரைசாமி.

``தமிழகத்தில் ஆளே இல்லையா?”
அண்ணா பல்கலையில் அடுத்த சர்ச்சை!

அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய நியமனங்களில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 300 நபர்களை நுழைக்க அங்கு அதிகாரத்தில் இருக்கும் ஒரு குரூப் ரூட் போடுவதாக சர்ச்சை கிளம்பியிருக்கிறது. கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவரை தலைமைப் பொறுப்புக்கு நியமித்தபோதே, ``ஏன் தமிழகத்தில் ஆளே இல்லையா?” என்கிற விமர்சனம் கிளம்பியது. இதையடுத்து தற்போது, ``புதிய நியமனங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை தர வேண்டும்” என்று பல்கலைக்கழகத்தில் உரிமைக்குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. விரைவில் விவகாரம் பூதாகரமாக வெடிக்கலாம்!

முகம்சுளித்த ரஜினி!

கொரோனா நிவாரண உதவிப் பணிகளில் ரஜினி ரசிகர் மன்றத்தினர் ஈடுபட்டுவந்தனர். அதற்கு `ஓகே’ சொன்ன ரஜினி, `அதையெல்லாம் விளம்பரப்படுத்த வேண்டாம்’ என்றாராம். அதையும் மீறி சிலர் சமூக ஊடகங்களில் புகைப்படங்களை வெளியிட, அதைப் பார்த்த ரஜினி முகம்சுளித்தாராம். தற்போது கொரோனா பரவல் அதிகமாவதைக் கவனித்த ரஜினி, ``மன்றத்தினர் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். இல்லை என்றால், உங்களுக்கும் பிரச்னை... மக்களுக்கும் பிரச்னை” என்று அட்வைஸ் செய்துள்ளார். இதையடுத்து மன்றத்தின் தலைமை நிர்வாகி சுதாகர் மூலமாக, `கொஞ்சம் அடக்கமாகவே இருங்கள்' என்று மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவு போயுள்ளது.

உதவிப் பொருள்கள் வழங்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
உதவிப் பொருள்கள் வழங்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
ம.அரவிந்த்

திருப்பி அழைக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள்!

கொரோனா நிவாரணப் பணி மேற்பார்வையிடும் வகையில் ஐஏஎஸ், ஐபிஎஸ்அதிகாரிகள் 12 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்தது. அவர்கள் வெளியூர்களில் முகாமிட்டு பணிகளை மேற்பார்வையிட்டுவந்தனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நியமிக்கப்பட்டவர்கள் தவிர்த்து, மற்றவர்களை சென்னைக்கே வரச் சொல்லிவிட்டார்கள். அடுத்த ரவுண்டுக்குப் போக ஒரு லிஸ்ட் தயாராக இருந்ததாம். தற்போது அதையும் கிடப்பில் போட்டுவிட்டார்கள்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு