Published:Updated:

மூழ்கிய தரைப்பாலம்; தண்டவாளத்தைக் கடக்க கற்கள்! - அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ராமநாதபுரம்

பரமக்குடி - ராமேஸ்வரம் இடையே உள்ள தரைப்பாலங்கள் அனைத்திலும் 20 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளன.

தண்ணீரில் மூழ்கியுள்ள தரைப்பாலம்
தண்ணீரில் மூழ்கியுள்ள தரைப்பாலம்

பரமக்குடி - ராமேஸ்வரம் இடையே உள்ள ரயில் பாதையில் அமைக்கப்பட்டுள்ள தரைவழிப் பாலங்களில் மழைநீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ரயில் பாதையைக் கடக்க தண்டவாளங்கள் இடையே கற்களைப் போட்டுள்ளனர். இதனால் விபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

தண்ணீரில் மூழ்கியுள்ள தரைப்பாலம்
தண்ணீரில் மூழ்கியுள்ள தரைப்பாலம்

மதுரை - ராமேஸ்வரம் இடையே உள்ள ரயில் பாதையின் இரு புறங்களிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதனால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்துக்குச் செல்ல ரயில்வே கேட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வழித்தடம் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து இடையே இருந்த பல்வேறு ஆள் இல்லா ரயில்வே கேட்டுகள் அகற்றப்பட்டன. சில இடங்களில் கிராம மக்களின் பயன்பாட்டுக்காக தரைவழிப் பாலங்களும் அமைக்கப்பட்டன.

இந்த தரைவழிப் பாலங்களை கிராம மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் மழைநீர் இந்தப் பாலங்களில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக பரமக்குடி - ராமேஸ்வரம் இடையே உள்ள தரைப்பாலங்கள் அனைத்திலும் 20 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளன. மாற்று வழிப்பாதை இல்லாத நிலையில் தரைப் பாலங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் தங்கள் கிராமத்தைவிட்டு வெளியே செல்ல பெரும் அவதிப்படுகின்றனர்.

தண்டவாளம் இடையே கற்கள்
தண்டவாளம் இடையே கற்கள்

ராமநாதபுரத்தை அடுத்துள்ள லாந்தை கிராமத்துக்குச் செல்ல தரைப்பாலம் ஒன்று உள்ளது. இந்தப் பாலத்தின் வழியாக சின்ன தாமரைக் கொடி, பெரிய தாமரைக் கொடி உள்ளிட்ட 6 கிராமங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது. நேற்று முன்தினம் பெய்த தொடர் மழையால் இந்தத் தரைப் பாலத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச்செல்லவும் இரு சக்கர வாகனங்களில் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்தக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஆபத்தான நிலையில் ரயில் பாதையைக் கடந்து சென்று வரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், தண்டவாளத்தின் வழியாக இரு சக்கர வாகனங்களை எடுத்துச் செல்ல வசதியாக தண்டவாளம் இடையே கற்களை வைத்து பாதை அமைத்துள்ளனர். இதனால் ரயில் விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் லாந்தை பகுதி மக்கள் தங்கள் கிராமத்துக்குச் செல்லும் தரைப்பாலத்தில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றக் கோரியும், தற்காலிக மாற்று வழி ஏற்படுத்தக் கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாதை கேட்டு போராட்டம்
பாதை கேட்டு போராட்டம்

தகவலறிந்து வந்த அதிகாரிகள் மற்றும் போலீஸார் மழைநீரை வெளியேற்ற விரைவாக நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லி மறியலில் ஈடுபட்ட கிராம மக்களை சமாதானம் செய்தனர். ஆனாலும் இனி தொடர்ந்து 2 மாதங்களுக்கு வடகிழக்குப் பருவ மழை பெய்யும் நிலை உள்ளதால் தங்கள் கிராமத்துக்குச் செல்ல ரயில்பாதை இடையே தற்காலிக கேட் அமைத்து தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.