Published:Updated:

17 அடி உயர அய்யனார்.. ’ராணி கி வாவ்’- அணிவகுப்பில் கவனம் ஈர்த்த வாகனங்கள்!

அய்யனார்
அய்யனார்

குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி ராஜபாதையில் பல்வேறு மாநிலங்களின் சார்பில் 16 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புகள் நடந்தது.

நாடு முழுவதும் 71-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் இன்று காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் தேசியக்கொடியை ஏற்றினார். அதன்பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். குடியரசு தினவிழாவில் பிரேசில் அதிபர் போல்சனாரோ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். குடியரசு தினவிழாவில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.

 குடியரசு தினவிழா
குடியரசு தினவிழா

குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி ராஜபாதையில் பல்வேறு மாநிலங்களின் சார்பில் 16 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புகள் நடந்தது. இந்த அணிவகுப்பில் சமீபத்தில் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட ஜம்மு&காஷ்மீர் சார்பில் அலங்கார ஊர்திகள் இடம்பெற்றிருந்தது. ‘கிராமத்துக்கு திரும்புவோம்’ என்ற திட்டத்தை கருப்பொருளாக கொண்டு ஜம்மு& காஷ்மீர் அலங்கார ஊர்திகள் வடிவமைக்கப்பட்டிருந்தது. காஷ்மீரின் வளத்தையும் பாரம்பர்யத்தை பறைசாற்றும் விதமாக அமைக்கப்பட்டிருந்த வாகனத்தின் முன்பக்கம் சால்வை நெசவாளரின் பொம்மை இடம்பெற்றிருந்தது. காஷ்மீரின் தாவரங்கள் விலங்கினங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

தமிழக சார்பில் இடம்பெற்ற அணிவகுப்பு வாகனத்தில் தமிழர்களின் காவல்தெய்வமாக கருதப்படும் அய்யனார் சிலை காட்சிப்படுத்தப்பட்டது. குதிரையும், காவலாளிகளும் இருப்பது போல 17 அடி உயரம் கொண்ட பிரமாண்ட அய்யனார் சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் பாரம்பர்ய இசை, நடனம் என வண்ணமயமாக வந்தது. வாகனத்தை சுற்றி கலைஞர்கள் வாத்தியங்களை வாசித்தபடியும், நடனமாடியபடியும் சென்றனர்.

கோவா சார்பில் அணி வகுப்பு வாகனம்
கோவா சார்பில் அணி வகுப்பு வாகனம்

இயற்கை சமநிலையை வலியுறுத்தும் வகையில் தவளையை முன்னிறுத்தி கோவா சார்பில் அணி வகுப்பு வாகனம் இடம் பெற்றது. பஞ்சாப் அணி வகுப்பு வாகனம் சீக்கிய மதகுருவான குருநானக் தேவ் 550வது பிறந்தாளை கருப்பொருளாக கொண்டு வடிமைக்கப்பட்டிருந்தது. சீக்கிய குருவின் மதக் கொள்கைகளை எடுத்துக்காட்டியது. சிக்கியர்களின் கட்டடக்கலை மற்றும் பாரம்பர்யத்தை பறைசாற்றும் விதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ராஜஸ்தான் அணிவகுப்பு வாகனம் 2019ம் ஆண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய குறிச்சொல்லை பெற்ற வால்ட் சிட்டி போல் வடிவமைக்கப்பட்டிருந்தது. மேகாலயா அணிவகுப்பு வாகனத்தில் அம்மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத்தளமான டபுள் டக்கர் லிவ்விங் பிரிட்ஜ் (Double Decker Living Root Bridge) வடிவமைக்கப்பட்டது. குஜராத் மாநிலத்தின் வாகனத்தில் 11-ம் நூற்றாண்டில் முதலாம் பீம்தேவ் மன்னரின் நினைவாக படானில் ராணி உதயமதி கட்டிய ‘ராணி கி வாவ்’ சிலை காட்சிப்படுத்தப்பட்டது. அம்மாநில கலாச்சாரத்தை உணர்த்தும் விதமாக கலைஞர்களின் நடனம் இடம்பெற்றிருந்தது.

அசாமின் அலங்கார வாகனம்
அசாமின் அலங்கார வாகனம்

அசாமின் அலங்கார வாகனத்தில் கருப்பெருளாக மூங்கிலை கொண்டிருந்தனர். அசாம் மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போன மூங்கிலையும் அதனைக்கொண்டு செய்யப்படும் கைவினைப்பொருள்களை அலங்கார ஊர்தியில் காட்சிப்படுத்தியிருந்தனர். அதேபோல் தெலங்கானா, உத்தரபிரதேசம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநில ஊர்திகளும் பங்கேற்றன. இதில் தமிழகத்தை சேர்ந்த அலங்கார ஊர்த்தி கவனத்தை ஈர்த்தது.

அடுத்த கட்டுரைக்கு