Published:Updated:

சட்டவிரோதமாக அள்ளப்பட்ட தாது மணல்... அரசுக்கு வரவேண்டிய ராயல்டி ரூ.5,832 கோடி!

தாது மணல்
பிரீமியம் ஸ்டோரி
News
தாது மணல்

- வசூலிக்குமா தமிழக அரசு?

தென்மாவட்டங்களில் சட்டவிரோதமாக தாது மணல் எடுக்கப்பட்ட விவகாரத்தில் அரசு எடுத்துள்ள நடவடிக்கையை அறிக்கையாகத் தாக்கல் செய்யும்படி சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது சென்னை உயர் நீதிமன்றம். இதைத் தொடர்ந்து, அரசுக் குழுக்கள் அமைக்கப்பட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தாது மணல் குடோன்களை ஆய்வு செய்யும் பணிகள் தடதடக்கின்றன. இந்தச் சூழலில், சட்டவிரோதமாக அள்ளப்பட்ட தாது மணல் குறித்து நீதிமன்ற அறிவுரையாளரான வழக்கறிஞர் சுரேஷ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் அறிக்கையில், ‘தடை செய்யப்பட்ட காலத்தில் சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட தாது மணலால் அரசுக்கு ராயல்டியாக மட்டுமே 5,832.44 கோடி ரூபாய் வரவேண்டியிருக்கிறது’ என்று சொல்லியிருக்கும் தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

‘தாது மணல் ஏற்றுமதியில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றிச் சிறப்புப் புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விக்டர் ராஜமாணிக்கம் என்பவர் 2015-ல் வழக்கு தொடர்ந்தார். அவர் பாதியிலேயே வழக்கிலிருந்து விலகிக்கொள்ள... 2016, ஜனவரி 28 அன்று சென்னை உயர் நீதிமன்றம் வழக்கைத் தாமாக முன்வந்து விசாரிக்கத் தொடங்கியது. இந்த விசாரணையில் உயர் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக, வழக்கறிஞர் வீ.சுரேஷ் நீதிமன்ற அறிவுரையாளராக நியமிக்கப்பட்டார். இவர் தனது விசாரணையை முடித்து கடந்த நவம்பர் 12-ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், தாது மணல் ஏற்றுமதி மூலமாகப் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதை அம்பலப்படுத்தியிருக்கிறார். “சுரேஷ் தாக்கல் செய்திருக்கும் அறிக்கையில் என்ன இருக்கிறது... சட்டவிரோதமாக தாது மணல் கடத்தப்பட்ட விவகாரத்தின் பின்னணி என்ன?” என்பது குறித்து விசாரணையில் இறங்கினோம்.

சட்டவிரோதமாக அள்ளப்பட்ட தாது மணல்... அரசுக்கு வரவேண்டிய ராயல்டி ரூ.5,832 கோடி!

சுட்டிக்காட்டிய ககன்தீப் சிங்!

நம்மிடம் பேசிய கனிமவளத்துறை உயரதிகாரிகள் சிலர், “இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் கிடைக்கும் மணலில்தான் தரமான கார்னெட், மோனசைட் உள்ளிட்ட கனிமங்கள் இருக்கின்றன. தாது மணலைச் சுத்திகரித்து, கனிமங்களைப் பிரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். இப்படித் தாது மணலைச் சுத்திகரிக்கும்போது, அதில் கதிர்வீச்சை உமிழக்கூடிய மோனசைட் கனிமமும் கிடைக்கும். அணு ஆயுதத் தயாரிப்பின் மூலக்கூறான தோரியம் தயாரிக்க ‘யுரேனியம் 233’ அவசியம். அந்த யுரேனியத்தைத் தயாரிக்க இந்த மோனசைட் பயன்படுகிறது. இதனால், மோனசைட் கனிமத்தைச் சுத்திகரிக்க, பதுக்க, விற்பனை செய்ய தடை விதித்திருக்கிறது மத்திய அரசு. இந்தநிலையில்தான், மோனசைட் கனிமத்துடன் சேர்த்துப் பல கோடி மெட்ரிக் டன் தாது மணல் சட்டவிரோதமாக அள்ளப்பட்டு விற்பனை செய்யப்பட்டிருப்பதாகத் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் சுரேஷ்.

தாது மணல் முறைகேடு புகார் நேற்று, இன்று முளைத்ததல்ல... 2013 செப்டம்பர் மாதமே தமிழகத்தில் தாது மணல் அள்ளவும், எடுத்துச் செல்லவும் தடைவிதித்தார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. இது பற்றி விசாரிக்க, அப்போதைய வருவாய்த்துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் சிறப்புக்குழுவையும் அவர் அமைத்தார். 2013 வரை தாது மணல் எடுக்க அனுமதி இருந்த காலகட்டத்திலேயே, அனுமதிக்கப்பட்ட அளவையும் தாண்டி சில நிறுவனங்கள் தாது மணலைச் சுரண்டியிருப்பதைக் கண்டுபிடித்தது ககன்தீப் சிங் பேடியின் குழு. இதையேதான் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சுரேஷும் கண்டறிந்திருக்கிறார். தாது மணலை எடுப்பதற்கு 10 முதல் 30 ஆண்டுகள் வரை அனுமதி வழங்கப்படுகிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை இந்த அனுமதியைப் புதுப்பிக்க வேண்டும். தவிர, ஒவ்வொரு வருடமும் எவ்வளவு மணல் எடுக்க வேண்டும், எந்தக் கனிமத்தை மட்டும் சுத்திகரிக்க வேண்டும் என்பதையெல்லாம் வரையறுத்துக் கொடுக்கிறது அரசு. ஆனால், யாரும் அந்த விதிகளைக் கடைப்பிடிப்பதில்லை.

தற்போது சுரேஷ் அளித்திருக்கும் அறிக்கையில், ‘2000 முதல் 2013 வரை தாது மணல் எடுக்க அனுமதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் மட்டும் வி.வி.மினரல்ஸ் அள்ளிய 97.71 லட்சம் மெட்ரிக் டன் செறிவூட்டப்படாத மணலில், 45.77 லட்சம் மெட்ரிக் டன் மணல் முறைகேடாக எடுக்கப்பட்டு, கொண்டு செல்லப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அதாவது, 46.84 சதவிகிதம் முறைகேடாக அள்ளப்பட்டிருக்கிறது. இவர்கள் தவிர ஆறு தனியார் நிறுவனங்களும் முறைகேடாக செறிவூட்டப்படாத மணலை அள்ளிச் சென்றிருக்கிறார்கள். அரசு அனுமதித்த அளவையும் தாண்டி கனிமங்கள் சுரண்டப்பட்டிருக்கின்றன.

சுரேஷ் - ககன்தீப் சிங்
சுரேஷ் - ககன்தீப் சிங்

கேள்விக்குறியான தேசப் பாதுகாப்பு!

இதற்கிடையே 2017, ஏப்ரல் 7 அன்று தாது மணல் குடோன்களில் இருந்த தாது மணல் இருப்பைப் பற்றி விசாரித்து அறிக்கை அளிக்க சத்யபிரதா சாகு ஐ.ஏ.எஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 2018, ஏப்ரல் 24 அன்று அந்தக்குழு தாக்கல் செய்த அறிக்கையில், ‘வி.வி. மினரல் நிறுவனம் 38.77 லட்சம் டன்னும், டிரான்ஸ்வேர்ல்டு கார்னெட் நிறுவனம் 16.31 லட்சம் டன்னும், பி.எம்.சி நிறுவனம் 64.4 லட்சம் டன்னும், ஐ.எம்.சி நிறுவனம் 25.58 லட்சம் டன்னும், ஐ.ஓ.சி.எஸ் நிறுவனம் 4.2 லட்சம் டன்னும் முழுவதுமாக, அரை சதமாக பதப்படுத்தப்பட்ட, செறிவூட்டப்பட்ட தாது மணலைச் சேமித்துவைத்துள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளது. இதையே சட்டவிரோதம் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் சுரேஷ். ‘2013-க்குப் பிறகு தாது மணல் எடுக்கத் தடை இருக்கும் பட்சத்தில், இத்தனை லட்சம் டன் மணலை எப்படி அள்ளினார்கள், அள்ளப்பட்ட மணல் எங்கே விற்கப்பட்டது என்பதை விசாரிக்க வேண்டும்’ என்றும் பரிந்துரைத்துள்ளார் சுரேஷ்.

சத்யபிரதா சாகு ஒருபக்கம் ஆய்வு செய்துகொண்டிருந்தபோதே, இந்த குடோன்களிலிருந்து எடுக்கப்பட்ட தாது மணல் மாதிரிகளை இந்திய அணுசக்தித்துறையின் ஆய்வகத்துக்கு ஆய்வுக்காக அனுப்பியது அணு கனிம இயக்குநரகம். இதில், அந்தத் தாது மணலில் மோனசைட் சதவிகிதம் அதிகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் சுரேஷ், ‘அணு ஆயுதம் தயாரிக்கவல்ல கனிமத்தை விற்றிருக்கிறார்கள். தேசப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட துறைகள் விசாரிக்க வேண்டும்’ என்றிருக்கிறார்.

ராயல்டி பாக்கி ரூ.5,832 கோடி!

மேலும், ‘தாது மணல் அள்ளுவதற்கு ஒரு டன்னுக்கு குறிப்பிட்ட தொகையை அரசுக்கு ராயல்டியாக நிறுவனங்கள் செலுத்த வேண்டும். இதில் விலையுயர்ந்த தாதுக்கள் குறைந்த அளவு விற்கப்பட்டதாகவும், விற்கப்படவில்லை என்றும் பல நிறுவனங்கள் முறைகேடாகக் கணக்கு காட்டியுள்ளன. 2013-ல் தாது மணல் எடுக்கத் தடை இல்லாத காலகட்டத்திலும், அதன் பிறகு தடை விதிக்கப்பட்ட காலகட்டத்திலும், ராயல்டியாக அரசுக்கு வரவேண்டிய தொகை மட்டும் 5,832.44 கோடி ரூபாய். இதை இன்னும் வசூலிக்கவில்லை’ என்று தனது அறிக்கையில் கூறியிருக்கிறார் சுரேஷ்.

இப்படி, அரசை ஏமாற்றி அதிகாரிகள் துணையுடன் சில நிறுவனங்கள் குவித்து வைத்திருக்கும் தாது மணல்தான், சத்யபிரதா சாகுவின் ஆய்வுக்குப் பிறகு சீல் வைக்கப்பட்டது. இந்த குடோன்களிலிருந்து அவ்வப்போது மணல் திருடப்படுவது தொடர்ந்துகொண்டிருந்தது. இதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கத்தான், சமீபத்தில் குழுவை அமைத்திருக்கிறது தமிழக அரசு. இந்தக் குழு அறிக்கையைத் தாக்கல் செய்யும்போது, உண்மையிலேயே எவ்வளவு களவு போயிருக்கிறது என்கிற விவரமும் முழுமையாகத் தெரியவரும்” என்றனர்.

குற்றச்சாட்டுகள் குறித்து வி.வி.மினரல்ஸ் நிறுவனத்திடம் அலைபேசியில் விளக்கம் கேட்டோம். தொடர்ந்து அவர்கள் மின்னஞ்சல் மூலம் அளித்த பதிலின் சுருக்கம் இது... “நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ‘அமிக்கஸ் கியூரி’ வீ.சுரேஷ் எங்களது போட்டி நிறுவனமான டிரான்ஸ்வேர்ல்டுக்கு வழக்கறிஞராகச் செயல்பட்டவர். அந்த நிறுவனத்தை 2008-ல் நாங்கள் வாங்கிய பிறகு அவர் வழக்கறிஞராகத் தொடரவில்லை. 2007-ல் தயாதேவதாஸ் என்பவர் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் தயாதேவதாஸ் அவரது ஏஜென்ட்டான வி.சுந்தரம் மூலம் ஒரு இம்ப்ளீடு மனுவும் தாக்கல் செய்திருந்தார். சுந்தரத்தின் சார்பில் முந்தைய பொது நல வழக்கில் எங்களுக்கு எதிராக ஆஜரானவர் வீ.சுரேஷ். பி.யூ.சி.எல் என்ற அமைப்பு 1995 முதல் தாது மணல் தொழிலுக்கு எதிராகப் போராட்டங்களையும் அறிக்கைகளையும் வெளியிட்டுவருகிறது. அந்த அமைப்பின் பொதுச்செயலாளரே வீ.சுரேஷ்தான். எனவே, அவருக்கு இயல்பிலேயே தாது மணல் தொழில்மீது எதிர் மனநிலை இருக்கிறது.

சத்யபிரதா சாகு
சத்யபிரதா சாகு

பேடி கமிட்டி, மாவட்ட கமிட்டி ஆகியவை கொடுத்த அறிக்கைகளின் அடிப்படையிலேயே சுரேஷ் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார். கனிமச் சட்டப்படி இவ்வாறான கமிட்டிகள் அமைப்பதாக இருந்தால், சட்டப்பிரிவு 26(2) மற்றும் 28(3)-ன்படி அரசிதழில் அறிக்கை வெளியிட வேண்டும். ஆறு மாதங்களுக்குள் அது சட்டமன்ற பரிசீலனைக்கும் வைக்கப்பட வேண்டும். ‘அரசிதழில் அறிவிக்கை செய்யப்படாத கமிட்டி, சட்ட விரோத கமிட்டி; அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள்காட்டி மைன்ஸ் டிரிப்யூனல் தனது இறுதி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தமிழக அரசு நியமித்த பேடி கமிட்டி மேற்கண்ட சட்ட நடைமுறையை நிறைவு செய்யவில்லை என்பதைத் தமிழக அரசே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவித்துள்ளது. மாவட்ட கமிட்டி நியமித்த குழுவும் இந்தச் சட்டத் தேவையைப் பூர்த்தி செய்யவில்லை. மேலும், மேற்கண்ட உத்தரவுப்படி மேல்முறையீடு செய்யாமல் மாவட்ட கமிட்டி எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. தாலுகா கமிட்டியின் அறிக்கையை எதிர்த்து எந்த மேல்முறையீடும் செய்யப்படவில்லை என்பதை மேற்கண்ட கமிட்டியின் செயலாளரான உதவி இயக்குநர் (பொது தகவல் அலுவலர்) உறுதி செய்திருக்கிறார். எனவே, சுரேஷின் அறிக்கைக்கு ஆதாரமான இரண்டு கமிட்டி அறிக்கைகளுமே சட்ட விரோதமானவை.”

நீண்ட ஆண்டுகளாக இழுத்துக்கொண்டே போகும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு நேர்மையாக விசாரணை நடத்தித் தீர்வுகாண வேண்டும்.