Published:Updated:

ரூ.700 கோடி லஞ்சம்... அம்பலத்துக்கு வரும் அடுத்த ஊழல்!

சென்னையில் கடற்கரையோரம் இருக்கும் அரசு கலைக்கல்லூரி ஒன்றில் வர்மத்தைப் பெயராகக்கொண்டவர் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

பிரீமியம் ஸ்டோரி

‘‘உயர்கல்வித் துறையில் அதீத ஒழுக்கம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். பணி நியமனங்கள், ஊழலற்றதாகவும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும்’’ - கடந்த டிசம்பர் 19-ம் தேதி ஊட்டியில் நடைபெற்ற உயர்கல்வி மாநாட்டில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசிய வார்த்தைகள் இவை. கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அவருடைய ஆளுகையின்கீழ் உள்ள தமிழக அரசின் உயர்கல்வித் துறையில் உச்சக்கட்டமாக ஓர் ஊழல் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

தமிழக அரசுக்குச் சொந்தமான கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர்கள் நியமனம், 2015-ம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறவேயில்லை. 2019, ஆகஸ்ட் 28-ம் தேதி, உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் வரும் இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்கிறது.

ஊழல்
ஊழல்

இதன்படி ` ‘செட்’, ‘நெட்’, ‘ஸ்லெட்’ தேர்வுகளில் தேறியவர்கள், 2,340 பணியிடங்களுக்கு விண்ணப்பிக் கலாம்’ என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. உதவிப் பேராசிரியர்களின் ஆரம்ப மாதச் சம்பளமே 87,700 ரூபாய் என்பதுடன் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஊதியம் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிவிடும் என்பதால், ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்கள் மத்தியில் இந்தப் பணிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இதைப் பயன்படுத்திக்கொண்ட இடைத் தரகர்கள், ஆளுங்கட்சியினர், துறையில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தீவிர வசூல் வேட்டையில் இறங்கியுள்ளனர். உதவிப் பேராசிரியர் பணிக்கு 30 லட்சம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நியமனத்தில் 700 கோடி ரூபாய்க்கும் அதிகமாக லஞ்சம் புரள்வதாக நமக்கு ‘எக்ஸ்க்ளூசிவ்’ தகவல் கிடைக்கவே விசாரணையில் இறங்கினோம்.

இதுகுறித்த உள்விவரங்களை அறிந்தவர்கள் நம்மிடம் பேசினார்கள். ‘‘உதவிப் பேராசிரியர் பணி நியமனம், மொத்தம் 36 மதிப்பெண் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ‘நெட்’, ‘செட்’, ‘ஸ்லெட்’ தேர்வுகளில் தேறியதற்காக 6 மதிப்பெண்ணும், முனைவர் பட்டம் பெற்றதற்காக 6 மதிப்பெண்ணும், அரசு அல்லது தனியார் கல்லூரிகளில் தற்காலிக உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்ததற்காக வருடத்துக்கு 2 மதிப்பெண்வீதம் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகளுக்கு 14 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது (6+6+14=26). மீதமுள்ள பத்து மதிப்பெண்ணுக்கு நேர்காணல் நடைபெறுகிறது. இதில், ‘எட்டு மதிப்பெண்ணுக்குமேல் வாங்கித் தருகிறோம்’ என்ற உத்தரவாதத்துடன் இந்த வசூல் வேட்டை அரங்கேறுகிறது. இதற்காக ஒரு பணியிடத்துக்கு மொத்தம் 30 லட்சம் ரூபாய் லஞ்சத்தொகையை கறாராக நிர்ணயம் செய்துள்ளார்கள், உயர்கல்வித் துறை மாஃபியாக்கள்!

ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் சில பெண் பணியாளர்கள்தான், இந்த வசூலுக்கு முதல் அடுக்கு ஏஜென்ட்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். உதவிப் பேராசிரியர் பணியிடம் வேண்டுவோர், முதலில் இவர்களைத்தான் தொடர்புகொள்ள வேண்டும். இவர்களிடம் மூன்று லட்சம் ரூபாய் கமிஷனாகச் செலுத்திய பிறகு, ஒரு கடிதம் கொடுக்கப்படுகிறது. அதை சென்னையில் இருக்கும் இரண்டாம் அடுக்கு ஏஜென்ட் ஒருவரிடம் கொடுக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்னையில் கடற்கரையோரம் இருக்கும் அரசு கலைக்கல்லூரி ஒன்றில் வர்மத்தைப் பெயராகக்கொண்டவர் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இவர்தான் அந்த இரண்டாம் அடுக்கு ஏஜென்ட். தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் கறாராக கட்டிங் வாங்கிக் கொடுப்பதில் இவர் கில்லாடி என்பதால், உயர்கல்வித் துறையில் எப்போதுமே இவரது கொடி உயரப் பறக்கும். இவரைச் சந்தித்து, முதல் ஏஜென்ட் கொடுத்த கடிதத்துடன் ஐந்து லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். தொடர்ந்து உயர்கல்வித் துறையில் கோலோச்சும் ஒரு டஜன் ‘உதவியாளர்கள்’ மூன்றாம் அடுக்கு ஏஜென்ட்டுகளாகச் செயல்படுகின்றனர்.

ஊழல்
ஊழல்

இந்த உதவியாளர்களில் சிலரை குறிப்பிட்டுச் சொல்லும் அந்த ‘வர்ம’ பேராசிரியர், கையோடு ஒரு துண்டுச்சீட்டையும் கொடுத்து அனுப்புவார். ‘எங்கே சந்திக்க வேண்டும்’ என்பதையும் வாட்ஸப் அழைப்பு மூலம் பகிர்ந்துகொள்வார். பெரும்பாலும் நந்தனத்தில் உள்ள நட்சத்திர விடுதி, ஆழ்வார்பேட்டை மேம்பாலம் அருகில் உள்ள வெளி மாநில உணவு விடுதி, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பார் உள்ளிட்ட இடங்களில்தான் சந்திப்பு நடைபெறும்.

அங்கு வரும் பார்ட்டிகளிடம் ‘உதவியாளர்கள்’ தரப்பு ஏழு லட்சம் ரூபாய் பெற்றுக்கொள்கிறது. கூடவே பயோடேட்டா, சான்றிதழ்களின் நகல்களைப் பெற்றுக்கொள்பவர்கள், துறையின் ‘உச்சத்துக்கு’க் கொடுக்க வேண்டும் என்று சொல்லி மேற்கொண்டு 15 லட்சம் ரூபாய் பெற்றுக்கொள்கிறார்கள். ஆக, இடைத் தரகர்களுக்கு லஞ்சமாக 15 லட்சம் ரூபாய், துறையின் ‘உச்சத்துக்கு’ 15 லட்சம் ரூபாய் என ஒரு பணியிடத்துக்கு 30 லட்சம் ரூபாய் வசூலிக்கப் படுகிறது. இப்படி 2,340 பணியிடங்களுக்கும் கணக்கிட்டால் 702 கோடி ரூபாய் தமிழகம் முழுவதும் லஞ்சமாக வசூலிக்கப்படுகிறது.

நயா பைசா லாபம்கூட இல்லாமல் ஒரு பணியிடம்கூட வழங்கக் கூடாது என்பதில், இந்த ‘மாஃபியா’ கும்பல் தெளிவாக இருக்கிறது. அதனால்தான் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிப்பாணை வெளியிடப்பட்டு செப்டம்பர் மாதமே விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்தபோதும், இன்று வரை நியமனங்கள் மேற்கொள்ளப்படவில்லை. இன்னும் ஆறு மாவட்டங்களில் வசூல் வேட்டை முடியாததால் நியமனத்தைத் தாமதப்படுத்துகின்றனர்’’ என்று சொல்லி அதிரவைத்தார்கள்.

உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களுக்காக வசூலித்த லஞ்சப்பணத்தில், சென்னை அவ்வை சண்முகம் சாலையில் இரண்டு கோடி ரூபாய்க்கு வீடு ஒன்றை வாங்கிவிட்டாராம் இளம் ‘உதவியாளர்’ ஒருவர். மற்றோர் ‘உதவியாளர்’ மயிலாப்பூரைச் சேர்ந்த இடைத்தரகரிடம் ஒரு கோடி ரூபாய் கொடுத்து வட்டிக்கு விடச்சொல்லி யிருக்கிறாராம். இப்படியொரு மெகா வசூல் வேட்டைக்குச் சரிப்பட்டு வர மாட்டார் என்ற காரணத்தால்தான் துறையின் முதன்மைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா சமீபத்தில் மாற்றப்பட்டிருப்பதாகவும் தகவல் பரவியுள்ளது.

பள்ளிக்கல்வித் துறையிலிருந்து மாற்றப்பட்ட உதயச்சந்திரன், ஐ.டி துறையிலிருந்து மாற்றப்பட்டு விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ள சந்தோஷ் பாபு வரிசையில் மங்கத்ராம் சர்மாவும் சேர்ந்துள்ளார் என்பதே கோட்டை வட்டாரத்தின் இப்போதைய ஹாட் டாபிக்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு