Election bannerElection banner
Published:Updated:

மதுரை ஸ்மார்ட் சிட்டி: தெரு விளக்கு ஒன்றின் விலை ரூ. 21,666? -அதிர்ச்சி தரும் ஆர்.டி.ஐ தகவல்

மதுரை மீனாட்சியமன் கோயில்
மதுரை மீனாட்சியமன் கோயில்

சுமார் 12,000 விளக்குகளுக்கு அவர்கள் கணக்கின்படி ரூ 26 கோடியை செலவிட்டிருக்கிறார்களா? அப்படிப் பார்த்தால் ஒரு தெரு விளக்கின் விலை சராசரியாக ரூ 21,666 ரூபாய் வருகிறது.

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடப்பதாக மதுரை எம்.பி.சு.வெங்கடேசன், மதுரை மத்தியத் தொகுதி எம்.எல்.ஏ பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், தற்போது இத்திட்டத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்ட தெருவிளக்கு ஒன்றின் விலை ரூ. 21,666 என்ற தகவல் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

மதுரை மாநகராட்சி
மதுரை மாநகராட்சி

மத்திய அரசின் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் மதுரையில் ரூ 1000 கோடி மதிப்பில் 13 வகையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், இந்த பணிகளைப் பற்றி தொகுதி எம்.பி, திட்டம் நடைபெறும் தொகுதி எம்.எல்.ஏக்களிடம் தகவல் தெரிவிப்பதில்லை, ஆலோசனை கேட்பதில்லை, விடப்படும் டெண்டர்களில் வெளிப்படைத்தன்மையும் இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் அமைச்சர்கள், ஆளும்கட்சி எம்.எல்.ஏக்கள், அரசு அதிகாரிகள் கூட்டு சேர்ந்து கொள்ளையடிப்பதாக மதுரை வந்திருந்த மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி பேசினார்.

மதுரை
மதுரை

இந்த நிலையில் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ 30 கோடி ரூபாய் செலவில் அமைக்கபட்டதாக சொல்லப்படும் தெரு விளக்குகளில் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பதாக, ஆர்.டி.ஐ மூலம் அம்பலப்படுத்தியுள்ளது இந்திய ஜனநயக வாலிபர் சங்கம்.

அந்த அமைப்பின் மாவட்ட நிர்வாகி இது குறித்து கார்த்திக்கிடம் பேசினோம். ``மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெறும் தெருவிளக்கு மாற்றும் பணிகள் குறித்து நானும் தோழர் பாலகிருஷ்ணனும் சில கேள்விகளை ஆர்.டி.ஐ மூலம் கடந்த டிசம்பர் 21- ம் தேதி கேட்டிருந்தோம்.

71 நாட்களுக்குப் பிறகு மதுரை மாநகராட்சி அளித்திருந்த பதில் பெரும் அதிர்ச்சியை உருவாக்குவதாக இருந்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மதிப்பீடு செலவு சுமார் ரூ 1000 கோடி. அதில் 30.25 கோடியை தெருவிளக்குகளை மாற்ற ஒதுக்கியுள்ளார்கள். அதில் சுமார் 30,377 தெருவிளக்குகள் பொருத்தப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர். அதில் எத்தனை எரியும் நிலையில் உள்ளது என்பது வேறு விஷயம்.

கார்த்திக்
கார்த்திக்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தெருவிளக்கு பொருத்தும் பணிக்கு மதுரையிலுள்ள 78 வார்டுகளை மட்டும் எடுத்துக்கொண்டு இந்த விளக்குகளை பொருத்தியுள்ளோம் என கூறுகிறார்கள். இதில் கூட புதியதாக மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட எந்த வசதியும் இல்லாத விரிவாக்கப் பகுதிகளுக்கு, ஒரு தெரு விளக்கினைக் கூட இவர்கள் பொருத்தவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

இந்த பணிக்காக சென்னை அம்பத்தூர் சபரி எலக்ட்ரிக்கல்ஸ் என்ற நிறுவனத்துக்கு டெண்டர் கொடுத்துள்ளனர். ஒவ்வொரு விளக்கின் விலை குறித்து கேட்டிருந்த கேள்விக்கு அவர்கள் அளித்த பதில் அதிர்ச்சியை கொடுக்கிறது.

20,40,60,90,120,200 ஆகிய 6 வகையான வாட்ஸ்களில் விளக்குகளை வாங்கியிருக்கிறார்கள். ஆனால் 20 வாட்ஸ் விளக்கு ஒன்றுக்கு மட்டும் நமக்கு விலை அனுப்பியுள்ளனர். ஒரு விளக்கு பொருத்த ஆகும் மொத்த செலவு ரூ 2304.50 என்று பதில் கொடுத்துள்ளனர். இந்த விலை, சந்தையில் உள்ள விலை உயர்ந்த விளக்கு, அதை பொருத்தும் செலவை விட பல மடங்கு அதிகமாக உள்ளது.

மதுரை
மதுரை

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் இவர்கள் சொல்லும் மொத்தமுள்ள 30,000 விளக்குகளில், 18,380 விளக்குகள் 20 வாட்ஸ் விளக்குகள்தான். அவர்கள் பதில் அளித்துள்ள விலையின் அடிப்படையில் கணக்கிட்டால் ரூ 4.23 கோடிதான் வருகிறது .

மீதம் உள்ள சுமார் 12,000 விளக்குகளுக்கு அவர்கள் கணக்கின்படி ரூ 26 கோடியை செலவிட்டிருக்கிறார்களா?

அப்படி பார்த்தால் ஒரு தெரு விளக்கின் விலை சராசரியாக ரூ 21,666 ரூபாய் வருகிறது.

நினைத்துப் பார்த்தாலே மயக்கம் வருகிறது.

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட மக்கள் வரிப்பணம் ரூ 1000 கோடியில் 3 சதவிகிதமான 30 கோடி ரூபாயிலேயே ஆட்சியாளர்கள் இவ்வளவு முறைகேடு செய்திருக்கிறார்கள் என்றால் மொத்த தொகையில் எவ்வளவு செய்திருப்பார்கள்?" என்கிறார் அதிர்ச்சியோடு.

மதுரை ஸ்மார்ட் சிட்டி குறித்த ஆலோசனை; ரத்தான அமைச்சரின் ஆய்வுக் கூட்டம்! - அப்செட்டில் செல்லூர் ராஜூ

இது சம்பந்தமாக இத்திட்டப்பணிகளை கண்காணிக்கும் மாநகராட்சி கமிஷனர் விசாகன் ஐ.ஏ.எஸ்ஸிடம் விளக்கம் கேட்டோம், "20 வாட்ஸ் விளக்கின் விலையை மட்டும் கேட்டு ஒட்டடுமொத்த விளக்குகளுக்குமான விலை என்று கற்பனையாக ஒரு தொகையை தெரிவிக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் 20 வாட்ஸ் விளக்குக்கு கொடுத்துள்ள விலையானது விளக்குக்கு மட்டும் அல்ல, அதை பொருத்தும் பணி, மற்ற உபகரணங்கள், தொடர்ந்து பராமாரிக்கும் செலவு என அனைத்தையும் உள்ளடக்கியது. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது. இவை அனைத்தையும் மத்திய அரசின் பல துறைகள் கண்காணிக்கின்றன். அதனால், இதில் எந்த முறைகேடும் நடக்க வாய்பில்லை. இது மிகைப்படுத்தப்படுகிறது" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு