Published:Updated:

ரஜினிக்கு விருது; கமலுக்கு..? - சரத்குமார் சொல்லும் புதுத் தகவல்

Sarathkumar
Sarathkumar

`ஸ்டாலின் செயல்பாடு சிறப்பாக இல்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுமைமிக்க தலைவராகத் திகழ்கிறார். அதனால்தான், அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தோம்’’ என்று சரத்குமார் கூறினார்.

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசுகையில், ``வரும் 10-ம் தேதி என் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது, உள்ளாட்சித் தேர்தலுக்கான கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிப்போம். இப்போது வரை, அ.தி.மு.க கூட்டணியில்தான் இருந்துவருகிறோம். தொடர்ந்து நீடிக்க, தொண்டர்களிடம் கருத்துகேட்க வேண்டும்.

Sarathkumar Press Confrence
Sarathkumar Press Confrence

தி.மு.க குடும்ப அரசியல் செய்கிறது. ஸ்டாலினுக்குப் பிறகு, அவரின் மகன் உதயநிதி வந்துள்ளார். உதயநிதியைத் தொடர்ந்து அவரின் மகன் வருவார். தி.மு.க-வில் அவர்களின் குடும்பம் மட்டுமே இருக்கும். பாவம் தி.மு.க சகோதரர்களுக்குக் கடைசி வரை எந்த வாய்ப்பும் கிடைக்காது. 234 தொகுதிகளிலும் அவர்களின் குடும்பத்தினரையே வேட்பாளர்களாக அறிவிப்பார்கள். கருணாநிதியுடன் ஒப்பிடுகையில் ஸ்டாலின் செயல்பாடு சிறப்பானதாக இல்லை. 

அதே சமயம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுமைமிக்க தலைவராகத் தெரிகிறார். அதனடிப்படையில்தான், அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்தோம். சமத்துவ மக்கள் கட்சித் தொடங்கி 12 ஆண்டுகள் ஆகின்றன. தொண்டர்கள் தயாராக இருந்தால், நான் தனித்துப் போட்டியிடுவேன். ரஜினிக்கு சிறப்பு விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது, அவரைப் பா.ஜ.க-வில் இழுப்பதற்கான முயற்சி எனச் சிலர் கூறுகிறார்கள். அது, அவர்களின் தனிப்பட்ட கருத்து. 

Rajini
Rajini

ரஜினி, கமல் இரண்டு பேரையும் ஒப்பிடும்போது, `ரஜினி சிறப்பான நடிகர்’ என மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. கமலுக்கு அடுத்த ஆண்டு விருது கொடுக்கலாம். நடிகர் விஜய் உட்பட யார் அரசியலுக்கு வந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம். ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்து குழந்தை சுஜித் உயிரிழந்த சம்பவம் மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. பயன்பாடற்ற அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் உடனே மூட வேண்டும். 

சுஜித் பலியான சம்பவத்துக்கு, அரசு ஒரு கோடி ரூபாய் பணம், அரசு வேலை வழங்க வேண்டும் என்று சிலர் கூறி வருகிறார்கள். கும்பகோணம் தீ விபத்தில் பலியான குழந்தைகளின் குடும்பங்களுக்கு பலர் பண உதவி செய்தனர். `தீ விபத்தில் இன்னொரு குழந்தை இறந்திருந்தால் அதிக பணம் கிடைத்திருக்கும்’ என்று சிலர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சிக்குள்ளானேன். இப்படியும் மனிதர்கள் வாழ்கிறார்கள். 

கேக் வெட்டிய சரத்குமார்
கேக் வெட்டிய சரத்குமார்

அரசு மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து மருத்துவர்களும், `நாங்கள் தனியாக கிளினிக் நடத்த மாட்டோம்’ என்று அரசிடம் உத்தரவாதம் அளித்து போராட்டம் நடத்தினால், அவர்களுடன் நாங்களும் இணைந்து போராடுவோம். 7 பேரை விடுதலை செய்யும் நேரத்தில், சீமான் போன்றோர் `நாங்கள்தான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம்’ என்று பேசியிருப்பது வேதனையளிக்கிறது’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு