Published:Updated:

அப்போது பணத்தைவைத்து விளையாடினார்கள்... இப்போது மக்களைவைத்து விளையாடுகின்றனர்!

அதிரடிக்கும் சசிகாந்த் செந்தில் ஐ.ஏ.எஸ்

பிரீமியம் ஸ்டோரி

‘மத்திய அரசின் பாசிசப் போக்குக்கு எதிராக எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என்று கூறி கலெக்டர் பதவியை உதறி, இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியவர் சசிகாந்த் செந்தில். சென்னையைச் சேர்ந்த இவர், சி.ஏ.ஏ, என்.ஆர்.சி ஆகியவற்றுக்கு எதிராகவும் தற்போது தீவிரமாகக் குரல்கொடுத்துவருகிறார். சென்னை வந்திருந்த சசிகாந்த் செந்திலைச் சந்தித்தோம்...

“சென்னை பெரம்பூர்தான் என் சொந்த ஊர். அப்பா-அம்மா இருவருமே அரசு ஊழியர்கள். 2008-ம் ஆண்டு நான் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சிபெற்றேன். கர்நாடக மாநில கேடர் என்பதால், பெங்களூரில் செட்டிலானேன். கர்நாடக மாநிலத்தில் மூன்று அரசுகளின்கீழ் பணிபுரிந்திருக்கிறேன். இறுதியாக மங்களூர் மாவட்டத்தில் பணியாற்றினேன்” என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘கலெக்டர் பதவியை சர்வசாதாரணமாகத் துறந்து விட்டீர்களே என்ன காரணம்?’’

‘‘2014-ம் ஆண்டிலிருந்து நாடு புதுவித இக்கட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் பா.ஜ.க ஆட்சியில் இருந்திருக்கிறது. ஆனால் அப்போது, இந்தளவுக்கு மோசம் கிடையாது. மோடி, அமித் ஷா காலத்தில் பா.ஜ.க அரசு முழுக்க முழுக்க பாசிச அரசாகவே மாறிவிட்டது. 2019-ம் ஆண்டு அசுரபலத்துடன் வெற்றிபெற்று ஆட்சியமைத்ததால், மக்கள் விரோதச் செயல்களை துணிச்சலுடன் செயல்படுத்த ஆரம்பித்தது. என்னால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சிஸ்டத்துக்குள் இருந்துகொண்டு எதுவும் செய்ய முடியாது. அதனாலேயே கலெக்டர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த களத்தில் இறங்கிவிட்டேன்.’’

‘‘நீங்கள் ஊழலில் ஈடுபட்டதாக மங்களூர் மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் ஜெயராஜ் ஷெட்டி குற்றம்சாட்டினாரே?’’

‘‘நான் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பா.ஜ.க-வுக்கும் சி.ஏ.ஏ-வுக்கும் எதிராகப் பேசியதும்தான் இந்தப் புகாரைக் கிளப்பினர். மங்களூரில் நான் ஆட்சியராக இருந்தபோது, அங்கே முறைகேடாக நடந்து கொண்டிருந்த மணல் விற்பனையைத் தடுத்தேன். மணல் வேண்டுமென்றால், ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே மணல் வந்துவிடும்படி நடைமுறையைக் கொண்டுவந்தேன். இதனால், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் என்மீது கோபத்தில் இருந்தனர். பதவியைவிட்டு நான் விலகியதும், பா.ஜ.க-வினர் தூண்டுதலின்பேரில் இந்தக் குற்றச்சாட்டைக் கிளப்பினர்.’’

சசிகாந்த் செந்தில் ஐ.ஏ.எஸ்
சசிகாந்த் செந்தில் ஐ.ஏ.எஸ்

‘‘என்.ஆர்.சி-யை நீங்கள் இவ்வளவு தீவிரமாக எதிர்ப்பதற்கு என்ன காரணம்?’’

‘‘40 ஆண்டுகளுக்கு முன் பிறப்புச் சான்றிதழ் வாங்கும் வழக்கமெல்லாம் இல்லை. இன்றைய தலைமுறை இளைஞர்கள், பிறப்புச் சான்றிதழ் வைத்திருப்பதால் என்.ஆர்.சி-யால் தங்களுக்கு ஆபத்து இல்லை என நினைக்கின்றனர். அது தவறு.

என்.ஆர்.சி அமலுக்கு வந்தால், 1986-ம் ஆண்டுக்கு முன்னர் பிறந்தவர்கள் மட்டும்தான், அவர்களுடைய பிறப்புச் சான்றிதழை சமர்ப்பித்தாலே போதுமானது. 1986-ம் ஆண்டிலிருந்து 2004-ம் ஆண்டுக்குள் பிறந்திருந்தால், பிறப்புச் சான்றிதழ் மட்டுமல்லாது அவருடைய தாய் அல்லது தந்தை யாரேனும் ஒருவர் இந்தியர் என்பதற்கான ஆதாரத்தையும் காட்ட வேண்டும். 2004-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் என்றால், பெற்றோரில் ஒருவர் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியவர் இல்லை என்பதையும் நிரூபிக்க வேண்டும். அது சாத்தியமானதா என்று சொல்லுங்கள். எத்தனை பேரிடம் அந்த ஆவணங்கள் இருக்கின்றன? என்.ஆர்.சி-யால் பெரியளவில் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக, இன்றைய தலைமுறையினரும் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள். அதனால்தான் இதை கடுமையாக எதிர்க்கிறேன்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘குடியுரிமை திருத்த சட்டத்தால் மக்களுக்குள் பிளவு வரும் என நினைக்கிறீர்களா?’’

‘‘மக்களைப் பிரிப்பதுதான் இந்த அரசின் வேலை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப்போல்தான் இதுவும். `பணமதிப்பிழப்பு நடவடிக்கை பலன் தராது’ என்று பலர் சொல்லியும் மத்திய அரசு கேட்கவில்லை. அப்போது பணத்தைவைத்து விளையாடினார்கள்... இப்போது மக்களை வைத்து விளையாடுகின்றனர்.’’

சசிகாந்த் செந்தில் ஐ.ஏ.எஸ்
சசிகாந்த் செந்தில் ஐ.ஏ.எஸ்

‘‘அரசியலுக்கு ரஜினிகாந்த் வருவது பற்றி உங்கள் கருத்து என்ன?’’

‘‘யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், தவறு கிடையாது. ஆனால், சுயபுத்தி இல்லாமல் மக்களைப் பற்றிய கவலை இல்லாமல் யாரோ சொல்வதை மட்டும் கேட்டுக் கொண்டு, அவர்களின் அஜெண்டாவைப் பற்றி மட்டுமே பேசுவது சரியல்ல. ஒருவர்மீது தமிழக மக்கள் அன்பு வைத்துவிட்டால் அவருக்காக எதுவும் செய்வார்கள். அந்த அன்பைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது.’’

‘‘எடப்பாடி பழனிசாமி ஆட்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’

‘‘கர்நாடகத்தில் தேசிய கட்சிகளுக்குத்தான் முக்கியத்துவம் கிடைக்கும். ஆனால், தேசிய கட்சிகளைக் கரைந்துபோகச் செய்த பெருமை தமிழகத்துக்கு உண்டு. பகுத்தறிவு நிறைந்த தமிழக மக்களின் சிந்தனையை மழுங்கடிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி அரசு செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. சட்டம் - ஒழுங்கு, பொருளா தாரத்தில் எல்லாம் தமிழ்நாடு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், குடியுரிமை திருத்த சட்டத்தைப் பற்றி எடப்பாடி பழனிசாமி அரசு சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். நாட்டில் 11 மாநிலங்கள் என்.ஆர்.சி சட்டத்தை அமல்படுத்த மறுத்துள்ளன. அந்த அரசுகளுக்கு மக்கள்மீது அக்கறை இருக்கிறது. ஆனால், எடப்பாடி அரசுக்கு மக்கள்மீது அக்கறை இருக்கிறதா?’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு