Published:Updated:

சாஸ்த்ரா-வுக்கு எதிராக சாட்டையை சுழற்றத் தயங்குகிறாரா ஸ்டாலின்?

சாஸ்த்ரா பல்கலைக்கழகம்
பிரீமியம் ஸ்டோரி
சாஸ்த்ரா பல்கலைக்கழகம்

31 ஏக்கர் அரசு நிலம்... 35 வருட ஆக்கிரமிப்பு...

சாஸ்த்ரா-வுக்கு எதிராக சாட்டையை சுழற்றத் தயங்குகிறாரா ஸ்டாலின்?

31 ஏக்கர் அரசு நிலம்... 35 வருட ஆக்கிரமிப்பு...

Published:Updated:
சாஸ்த்ரா பல்கலைக்கழகம்
பிரீமியம் ஸ்டோரி
சாஸ்த்ரா பல்கலைக்கழகம்

“தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு செய்துவைத்திருக்கும் அரசு நிலம் 31 ஏக்கரையும் மீட்போம்” என்று எதிர்க்கட்சித் தலைவ ராக இருந்தபோது முழக்கமிட்டவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால், இப்போது சாஸ்த்ரா பல்கலைக் கழகத்துக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்” என்று பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் தஞ்சாவூர்வாசிகள்.

தஞ்சாவூர் மாவட்டம், திருமலை சமுத்திரத்தில் அமைந்துள்ளது சாஸ்த்ரா பல்கலைக்கழகம். நாடு முழுவதும் அறியப்பட்ட இந்தத் தனியார் பல்கலைக்கழகத்தில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் படித்துவருகிறார்கள். பல்கலைக்கழகம் 35 வருடங்களுக்கு முன்பே அரசுக்குச் சொந்தமான, இன்றைய மதிப்பில் சுமார் 60 கோடி ரூபாய் பெறுமானமுள்ள நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததும், அது இதுவரையில் மீட்கப்படாததும் தொடர் பேசுபொருளாக இருக்கிறது.

சாஸ்த்ரா-வுக்கு எதிராக சாட்டையை சுழற்றத் தயங்குகிறாரா ஸ்டாலின்?

இது குறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலரான வழக்கறிஞர் ஜீவக்குமார், ‘‘1985-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துக்கு அருகிலிருந்த 31 ஏக்கர் அரசு நிலத்தை, திறந்தவெளி சிறைச்சாலை அமைப்பதற்காக ஒதுக்கித்தந்தார். ஆனால், அந்த 31 ஏக்கர் நிலத்தையும் மறு வருடமே ஆக்கிரமிப்பு செய்த சாஸ்த்ரா நிர்வாகம், விடுதி, நூலகம், சட்டக் கல்லூரி, அலுவலகம், வகுப்பறை என அதில் 28 கட்டடங்களைக் கட்டி முடித்தது. இதையடுத்து ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக் கோரி பல்வேறு அமைப்புகளும் தொடர்ச்சியாகப் போராடிவருகின்றன.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளிலும், ‘ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்றே தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனாலும்கூட அன்றைய அ.தி.மு.க அரசு, தீர்ப்பை நிறைவேற்ற எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இதையடுத்து அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘சாஸ்த்ரா நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை அரசு கைப்பற்ற வேண்டும். தவறினால் தி.மு.க போராட்டம் நடத்தும். தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதும் இடத்தை மீட்க நடவடிக்கை எடுப்போம்’ என்று முழக்கமிட்டார். சொன்னதுபோலவே, தி.மு.க ஆட்சியமைந்ததும், ‘2022 மார்ச் மாதத்துக்குள் ஆக்கிரமிப்பு இடங்களில் உள்ள கட்டடங்களை இடித்து காலி செய்து, இடத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் சாஸ்த்ரா பல்கலைக்கழக நுழைவு வாயிலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

சாஸ்த்ரா-வுக்கு எதிராக சாட்டையை சுழற்றத் தயங்குகிறாரா ஸ்டாலின்?

பிறகு என்ன நடந்ததோ... இடத்தை மீட்பதில் தமிழ்நாடு அரசு சுணக்கம் காட்டத் தொடங்கிவிட்டது. ‘சிறைச்சாலைக்கு ஒதுக்கப்பட்ட இடம்’ என அரசு சார்பில் வைக்கப்பட்டிருந்த போர்டு சில மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டுவிட்டது. அது பற்றிய புகாரைக்கூட அரசு கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட இடத்துக்கு பதிலாக வேறு இடத்தைத் தருவதாக சாஸ்த்ரா நிர்வாகத்தினர் மீண்டும் இப்போது உயர் நீதிமன்றம் போயிருக்கிறார்கள்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை சார்பாக புதிய சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதன்படி, ‘நிலப் பரிவர்த்தனைகளில் பிரச்னை இல்லாமல் முடித்துக்கொள்ளும் வகையில், ஆக்கிரமிப்பு இடத்தில் நடத்தப்படும் கல்வி நிலையங்கள் உள்ளிட்டவை அரசு இடத்தை எடுத்துக்கொண்டு மாற்று இடம் தருவதாகச் சொன்னால், அதை அரசு ஏற்றுக்கொள்ளலாம்’ என்று விதியை மாற்றியமைத்துள்ளனர்.

‘சாஸ்த்ராவிடமிருந்து இடத்தை மீட்போம்’ என்று சொன்ன தி.மு.க., அதைக் காப்பாற்றும் வகையிலான இந்தச் சட்டத் திருத்தை அவசரமாகக் கொண்டு வரவேண்டிய அவசியம் என்ன என்பது புரியவில்லை. முதல்வர் சொன்னபடி ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்காவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்” என்று படபடத்தார்.

சாஸ்த்ரா-வுக்கு எதிராக சாட்டையை சுழற்றத் தயங்குகிறாரா ஸ்டாலின்?

திருமலை சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ராஜகுமாரன், ‘‘திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்குள் அரசு கலைக் கல்லூரி தொடங்குவதற்கு இடம் இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே சாஸ்த்ரா ஆக்கிரமிப்பு நிலத்தையும், அங்குள்ள கட்டடங்களையும் கைப்பற்றி, அரசுக் கல்லூரி தொடங்கப்பட வேண்டும். அதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்கள் பயனடைவார்கள். ‘சொல்வதைச் செய்வோம்’ என்று முழங்கும் முதல்வர் ஸ்டாலின், இந்த விஷயத்தில் பம்முவது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.

ஜீவக்குமார்
ஜீவக்குமார்

சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் நிர்வாகத் தரப்பில் பேசினோம். ‘‘இது வெறும் நிலப் பிரச்னை மட்டுமல்ல. மாணவர்களின் கல்வியும் இதில் அடங்கியிருக்கிறது. எனவேதான் இந்த விவகாரத்தில், ‘அரசு இடத்துக்கு பதிலாக மாற்று இடம் தருகிறோம்’ என ஆரம்பத்திலிருந்தே கூறிவருகிறோம். இடம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இது பற்றி விரிவாகப் பேச முடியாது” என்று முடித்துக்கொண்டார்கள்.

ராஜகுமாரன்
ராஜகுமாரன்

இந்த ஆக்கிரமிப்பு விவகாரம் பற்றியும், அரசின் சட்டத் திருத்தம் பற்றியும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் கேட்டபோது, ‘‘தற்போது சாஸ்த்ரா நிர்வாகத்தின் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். நிலுவையில் இருக்கும் அந்த வழக்கு முடிவுக்கு வந்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துத் தெரியவரும்” என்றார்.

அறம் கற்றுக்கொடுக்கவேண்டிய கல்விக்கூடமே, அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதும், அதை மீட்கச் சொல்லி நீதித்துறை மன்றாடுவதும், மீட்பதாக அரசியல் கட்சிகள் நாடகம் நடத்துவதும்... இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் தொடரும்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism