அலசல்
அரசியல்
கார்ட்டூன்
Published:Updated:

ஆற்றுமணலுக்குப் பதிலாக எம்.சாண்ட்... சென்னை மாநகராட்சியில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்?

ஊழல்
பிரீமியம் ஸ்டோரி
News
ஊழல்

அதிரடி கிளப்பும் அறப்போர் இயக்கம்

சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற கட்டுமானப் பணிகளில் 1,000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அதிரடியைக் கிளப்புகிறார்கள் அறப்போர் இயக்கத்தினர். இதுதொடர்பாக அந்த இயக்கத்தின் சார்பில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ, கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

‘எம்.சாண்ட் எனப்படும் செயற்கை மணலை கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்திவிட்டு, ஆற்றுமணலுக்குரிய விலையை கான்ட்ராக்டர் களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். இதன்மூலம் 1,000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. ஊழலில், மாநகராட்சி அதிகாரிகளுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது’ என்பதுதான் அந்த வீடியோவின் சாரம்.

கருங்கல்ஜல்லியை உடைத்து நொறுக்கி அதிலிருந்து தயாரிக்கப்படுவதுதான் எம்.சாண்ட் எனப்படும் செயற்கை மணல். 2017-ம் ஆண்டு தமிழகத்தில் பல மணல் குவாரிகள் மூடப்பட்ட பிறகு, எம்.சாண்ட் தயாரிக்கும் நிறுவனங்கள் பெருகின. ஆற்றுமணலைவிட 30 முதல் 40 சதவிகிதம் விலை குறைவு என்பதால், பில்டர்களும் இந்த மணலை வரவேற்கின்றனர்.

சரி, இதைப் பயன்படுத்தியதில் என்ன ஊழல்? அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசனிடம் பேசினோம்.

ஜெயராம் வெங்கடேசன், பிரகாஷ்
ஜெயராம் வெங்கடேசன், பிரகாஷ்

‘‘கடந்த 2017-ம் ஆண்டு வரை ஆற்றுமணலும் எம்.சாண்ட் மணலும் ஒரே விலைதான். ஆற்றுப்படுகைகளைப் பாதுகாப்பதற்காக 2017-ம் ஆண்டில் தமிழகத்தில் பல மணல் குவாரிகள் மூடப்பட்டன. இதையடுத்து, ஆற்றுமணலின் விலை மூன்று மடங்கு அதிகரித்தது. அதனால், பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள்

எம்.சாண்ட்டைப் பயன்படுத்த ஆரம்பித்தன. அந்த நேரத்தில், சென்னை மாநகராட்சியும் தங்கள் கட்டுமானப் பணிகளுக்கு எம்.சாண்டைப் பயன்படுத்த முடிவுசெய்தது. அப்போதிருந்து ஒப்பந்ததாரர்களும் எம்.சாண்ட் பயன்படுத்தப் பட்ட ரெடிமிக்ஸ் கான்கிரீட்டைத்தான் மாநகராட்சியின் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்துகின்றனர். ஆனால், கன அடிக்கு 50 ரூபாய் மதிப்புள்ள எம்.சாண்டைப் பயன்படுத்திவிட்டு, ஆற்றுமணலுக்குரிய விலையான 120 ரூபாயை ஒப்பந்ததாரர்களுக்குக் கொடுக்கிறது சென்னை மாநகராட்சி நிர்வாகம். அவ்வளவு ஏன்... ஆற்றுமணலுக்குரிய விலையில்தான் டெண்டரே கோருகிறது.

மாநகராட்சியின் சமீபத்திய கட்டுமானங்கள் பலவற்றில் எம்.சாண்ட்தான் பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்பதை நாங்கள் லேப் டெஸ்ட்டில் கண்டுபிடித்தோம். எம்.சாண்ட் பயன்படுத்துவதை மாநகராட்சியும் ஒப்புக்கொள்கிறது. ஆறு மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி கமிஷனரின் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டுசென்றோம். ஒரு கியூபிக் மீட்டர் ரெடிமிக்ஸ் கான்கிரீட் விலை 9,000 ரூபாய் என மாநகராட்சிப் பொறியாளர் சொல்கிறார். மாநகராட்சி கட்டுமானத் துறையிடம் ரெடிமிக்ஸ் கான்கிரீட்டின் சந்தை மதிப்பு எவ்வளவு என ஆர்.டி.ஐ-யில் தகவல் கேட்டபோது, ஜி.எஸ்.டி-யுடன் சேர்த்து 6,900 ரூபாய் எனத் தகவல் கிடைத்தது. ஆனால், கான்ட்ராக்டர்கள் கிட்டத்தட்ட 10,000 முதல் 11,000 ரூபாய் வரையில் கொட்டேஷன் கொடுத்திருக்கின்றனர். அதற்கான ஆவணங்கள் எங்களிடம் இருக்கின்றன.

ஊழல்
ஊழல்

கடந்த மூன்று ஆண்டுகளில் சென்னை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், கான்கிரீட் ரோடு போடுவது, நடைபாதை போடுவது, மழைநீர் வடிகால் கட்டுவது போன்ற 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டுமானப் பணிகள் நடைபெற்றுள்ளன. இதன்மூலம், 1,000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. நாங்கள் மாநகராட்சி கமிஷனரிடம் இதுகுறித்து விளக்கினோம். அவரும் புரிந்துகொண்டார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஆவணங்களுடன் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்து முறையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்’’ என்றார்.

சென்னை மாநகர ஆணையர் பிரகாஷிடம் பேசினோம். ‘‘கட்டுமான விஷயங்களில் அரசின் விதிமுறைகளை சென்னை மாநகராட்சி சரியாகப் பின்பற்றுகிறது. ஆற்றுமணல், எம்.சாண்ட் இரண்டில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என பொதுப்பணித் துறையின் தலைமைப் பொறியாளர் 2017-ம் ஆண்டே சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். ஆற்றுமணலுக்கு கொட்டேஷன் கொடுத்துவிட்டு, எம்.சாண்டைப் பயன்படுத்தியிருக்கின்றனர். அதை மாநகராட்சி பார்க்கத் தவறிவிட்டது என்பதுதான் அறப்போர் இயக்கத்தினரின் குற்றச்சாட்டு. ஆனால், ஆற்றுமணலைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் கான்கிரீட்டைவிட, எம்.சாண்ட் பயன்படுத்தி உருவாக்கப்படும் கான்கிரீட் விலை அதிகம் என்பதுதான் உண்மை. அதுகுறித்த தகவல்கள் எங்கள் இணையதளத்திலேயே இருக்கின்றன. அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை’’ என்றார்.

ஆனால், சென்னை மாநகராட்சி இணையதளத்தில் தேடியபோது ஆணையர் சொல்வதுபோல் எம்.சாண்ட் விலை விவரங்கள் எதுவும் இல்லை. மேலும், சென்னையில் இருக்கும் சில பில்டர்களிடம் பேசியபோது, “எம்.சாண்ட் ரெடிமிக்ஸ் கான்கிரீட்டைவிட ஆற்றுமணல் ரெடிமிக்ஸ் கான்கிரீட் விலை அதிகம். ஒரு கியூபிக் மீட்டர் எம்.சாண்ட் ரெடிமிக்ஸ் கான்கிரீட் ரூ.5,250-க்கும், ஒரு கியூபிக் மீட்டர் ஆற்றுமணல் ரெடிமிக்ஸ் ரூ.6,750-க்கும் விற்பனை செய்கிறோம்” என்றார்கள்.

எல்லாவற்றையும் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.