Published:Updated:

மொத்தக் கடன் ரூ.2,592 கோடி... வர வேண்டிய சொத்துவரி ரூ.400 கோடி... முறைகேடுகள் ஏராளம்...

சென்னை மாநகராட்சி
பிரீமியம் ஸ்டோரி
சென்னை மாநகராட்சி

அபாய கட்டத்தில் சென்னை மாநகராட்சி!

மொத்தக் கடன் ரூ.2,592 கோடி... வர வேண்டிய சொத்துவரி ரூ.400 கோடி... முறைகேடுகள் ஏராளம்...

அபாய கட்டத்தில் சென்னை மாநகராட்சி!

Published:Updated:
சென்னை மாநகராட்சி
பிரீமியம் ஸ்டோரி
சென்னை மாநகராட்சி

உலகில் முதன்முதலில் உருவான நகராட்சி லண்டன். அதற்கு அடுத்து உருவான நகராட்சி தமிழ்நாட்டின் சென்னைதான்! கிழக்கிந்திய நிறுவனத்தின் பரிந்துரையில், 1688, செப்டம்பர் 29 அன்று ஆரம்பிக்கப்பட்ட சென்னை மாநகராட்சியின் நிர்வாகம் இன்று பெரும் கடனில் சிக்கி, நிதி நெருக்கடியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. காரணம், சொத்து வரி பாக்கி, சொத்து வரியை நிர்ணயிப்பதில் நடைபெற்ற முறைகேடுகள். இவற்றைப் பற்றி விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை.

அபாயகட்டத்துக்கான அறிகுறி!

சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளை உள்ளடக்கிய 15 மண்டலங்களில், சுமார் ஒரு கோடிப் பேர் வசிக்கிறார்கள். பெருநகரம் என்பதால் இங்கு மாநகராட்சி சார்பில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுவருகின்றன. பராமரிப்புச் செலவுகளும் இதர நகரங்களைவிட அதிகம். கடந்த சில ஆண்டுகளைவிட இந்த ஆண்டு நிதிப்பற்றாக்குறை அதிகரிப்பு, கடன் சுமை உள்ளிட்ட விவகாரங்களால் தத்தளித்துவருகிறது சென்னை மாநகராட்சி. அதிகரித்துவரும் கடன் சுமையால் கூட்டுறவுச் சங்கம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் பல கோடி ரூபாய் பாக்கி தரவேண்டியிருக்கிறது. 2022, ஏப்ரல் மாத நிலவரப்படி, சென்னை மாநகராட்சி 2,592 கோடி ரூபாய் கடனில் இருக்கிறது. கடந்த ஆண்டைவிட இது 500 கோடி ரூபாய்க்கும் அதிகம். சொல்லப்போனால், இது அபாயகட்டத்துக்கான அறிகுறி என்கிறார்கள் மாநகராட்சியின் சீனியர் அதிகாரிகள் சிலர்!

கடந்த ஆறு ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால், சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை மாநகராட்சி ஆணையர்தான் தாக்கல் செய்துவந்தார். 2022-2023 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டைக் கடந்த மார்ச் 9-ம் தேதி புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட மேயர் பிரியா தாக்கல் செய்தார். இதில் வரவு 2,824.77 கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்ட நிலையில், செலவு 3,613.35 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, வரவைவிட செலவு 788.58 கோடி ரூபாய் அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மொத்தக் கடன் ரூ.2,592 கோடி... வர வேண்டிய சொத்துவரி ரூ.400 கோடி... முறைகேடுகள் ஏராளம்...

வரவு, செலவுகள் என்னென்ன?

சொத்து வரிதான் சென்னை மாநகராட்சியின் பிரதான வருவாய். கடந்த ஆண்டு சுமார் 700 கோடி ரூபாய் சொத்து வரி வசூலான நிலையில், இந்த ஆண்டு உயர்த்தப்பட்ட சொத்துவரியின் மூலம் மொத்தம் 800 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக, தொழில் வரி மூலம் 475 கோடி ரூபாயும், முத்திரைத்தாள் மீதான கூடுதல் வரியின் மூலம் 170 கோடி ரூபாயும், கட்டடங்களின் வாடகை உள்ளிட்ட இதர வருவாய் மூலம் 879 கோடி ரூபாயும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இவை தவிர, மாநில நிதிக்குழு மானியமாக 500 கோடி ரூபாய் வரும் என்கிறார்கள் அதிகாரிகள்.

அடுத்து செலவுகள்... சென்னை மாநகராட்சியில் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் 37,500-க்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துக்கு மட்டும் ஆண்டுக்கு 1,836 கோடி ரூபாய் செலவாகிறது. பராமரித்தல் மற்றும் பழுது பார்ப்பதற்காக 1,079 கோடி ரூபாயும், நிர்வாகச் செலவுக்காக 121 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மைக்கு 424 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை தவிர, சென்னை மாநகராட்சி பல்வேறு வங்கிகளிடமிருந்து பெற்றுள்ள 2,592 கோடி ரூபாய் கடனுக்கு ஆண்டுக்கு 148 கோடி ரூபாய் வட்டி செலுத்திவருகிறது. ஒப்பந்ததாரர்களுக்கு 279 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை பாக்கி வைத்திருக்கிறது மாநகராட்சி. அதேபோல, கூட்டுறவுச் சங்கம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு 373 கோடி ரூபாய் பாக்கி வைத்திருக்கிறது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக சென்னை மாநகராட்சிக்கு வரவேண்டிய சொத்து வரியில் மட்டுமே 400 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை நிலுவையில் உள்ளது. இந்தத் தொகையில் அரசு நிறுவனங்கள் செலுத்தவேண்டிய தொகை மட்டும் 24 கோடி ரூபாய். இதில் பல்வேறு முறைகேடுகளும் நடைபெற்றிருப்பதால் பாக்கி மட்டுமின்றி, மாநகராட்சிக்குப் பல ஆண்டுகளாக, பல கோடி ரூபாய் வரி இழப்பும் ஏற்பட்டுள்ளது.

சொத்து வரி மோசடி... இழப்பு பல கோடி ரூபாய்!

உதாரணமாக, சென்னை கோயம்பேடு பகுதியிலிருக்கும் பிரபல ஹோட்டல் ஒன்று, தங்களிடமிருக்கும் 30 அறைகளுக்கு அரையாண்டுக்கு 6.5 லட்சம் ரூபாய் சொத்து வரியைச் செலுத்திவந்தது. இதுவே மிகக் குறைந்த தொகையாக நிர்ணயிக்கப்பட்டது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இந்த நிலையில், 2019 மார்ச் மாதத்துக்குப் பிறகு அந்த ஹோட்டலில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 30 அறைகள், 75 அறைகளாக அதிகரிக்கப்பட்டன. ஆனால், அரையாண்டு சொத்து வரி 5.18 லட்சம் ரூபாயாகக் குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, குறைந்தபட்ச வாடகையாக இருந்த 2,350 ரூபாயை 700 ரூபாயாகக் குறைத்தும், 40 அறைகளை சிங்கிள் ரூம்களாக மாற்றியும் மாநகராட்சி அதிகாரிகளின் உதவியோடு போலிக் கணக்கு காட்டி சொத்து வரி குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் ஆலந்தூர் அருகில் இருக்கும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் 101 அறைகள் இருக்கின்றன. ஆனால், அங்கு 75 அறைகள் மட்டுமே இருப்பதாக போலிக் கணக்கு காட்டியும், வாடகையைக் குறைத்தும் கணக்கு எழுதி 37 லட்சத்து 98 ஆயிரத்து 385 ரூபாய் வரிச்சலுகை கொடுத்துள்ளனர் மாநகராட்சி அதிகாரிகள். இதேபோல சென்னை ஓ.எம்.ஆர் சாலையிலிருக்கும் மற்றொரு நட்சத்திர ஹோட்டலில் 129 அறைகளை ‘சிங்கிள்’ ரூம்களாக மாற்றி 30 லட்சத்து 75 ஆயிரத்து, 400 ரூபாய் வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையின் மிகப் பிரபலமான ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்று 16.9 கோடி ரூபாய் சொத்து வரி பாக்கி வைத்திருக்கிறது.

மேற்கண்ட முறைகேடுகள் குறித்து நம்மிடம் பேசிய நேர்மையான அதிகாரி ஒருவர், “கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 2019 மார்ச் மாதத்துக்குப் பிறகு மட்டுமே சென்னையில் 185 நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் திருமண மண்டபங்களிடம் பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு சொத்து வரியைப் பல மடங்கு குறைத்துப் போட்டுள்ளனர். சென்னை ரிப்பன் மாளிகையின் வருவாய்ப் பிரிவில் இருக்கும் ஐந்து அதிகாரிகள்தான் இவற்றை ஸ்பெஷல் கட்டடங்கள் என்று கணக்கு காட்டி சுமார் 40 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியிருக்கிறார்கள். இந்தத் தொகை அப்போதைய துறையின் மேலிடப்புள்ளி வரை கைமாறியது. தற்போது இந்த விவகாரம் மேலிடம் வரை சென்று, மாநகராட்சி நிர்வாகம் தீவிர விசாரணை நடத்திவருகிறது” என்றார்.

ககன்தீப் சிங் பேடி
ககன்தீப் சிங் பேடி

இதற்கிடையே கடந்த சில வாரங்களாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் சொத்து வரியை வசூலிப்பதில் தீவிரம் காட்டிவருகிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னையின் பழைமையான தியேட்டர் ஒன்று, 51.27 லட்சம் ரூபாய் சொத்து வரியும், 14 லட்சம் ரூபாய் கேளிக்கை வரியும் பாக்கி வைத்திருந்தது. அந்த தியேட்டருக்கு அதிகாரிகள் சீல் வைத்த ஓரிரு நாள்களிலேயே தியேட்டர் நிர்வாகம் மொத்த வரியையும் செலுத்திவிட்டது. சென்னை தி.நகரில் இருக்கும் பெனின்சுலா ஹோட்டல் நிர்வாகம் 15.45 லட்சம் ரூபாய் சொத்து வரி பாக்கி வைத்திருந்த நிலையில், ஏப்ரல் 21 அன்று அந்த ஹோட்டலுக்கு சீல் வைத்தது மாநகராட்சி. சமீபத்தில் ஆளுங்கட்சிக்கு நெருக்கமான கவிஞர் ஒருவர் தனது திருமண மண்டபத்துக்கு 7.93 லட்சம் ரூபாய் சொத்து வரி பாக்கி வைத்திருந்த நிலையில், அந்த மண்டபத்துக்கு சீல் வைக்க அதிகாரிகள் விரைந்தனர். ஆனால், உடனடியாக ஆன்லைனில் தொகையைச் செலுத்துவதாக கவிஞர் தரப்பிலிருந்து கூறப்பட்ட நிலையில் அந்த நடவடிக்கை தவிர்க்கப்பட்டது.

இது குறித்தெல்லாம் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் பேசினோம். ``மாநகராட்சியின் வருவாயைப் பெருக்க இயற்கை உரம், எரிவாயு தயாரிப்பது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. சொத்து வரி நிர்ணயத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளைச் சரி செய்ய டிரோன் உதவியுடன் கட்டடங்களின் அளவுகளைச் சரிபார்த்து, பெரிய கட்டடங்களுக்குக் குறைந்த சொத்து வரி நிர்ணயிக்கப்பட்டிருந்தால், அதைச் சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறோம். வரி நிலுவைகளை வசூலிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு சொத்து வரி அதிக அளவில் வசூல் செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் மாநகராட்சியின் வருவாய் அதிகரிக்கப்பட்டு நிதிநிலை சீராக்கப்படும்” என்றார் நம்பிக்கையுடன்.

சென்னையில் சொத்து வரி நிர்ணயிப்பதில் நடந்த முறைகேடுகள் பற்றி ‘பெயர் வேண்டாம்’ என்ற நிபந்தனையுடன் பேசிய உயரதிகாரி ஒருவர், “ஹோட்டல்களில் சொத்து வரி குறைத்து நிர்ணயிக்கப்பட்ட விவகாரம் உண்மைதான். அது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. மேலும், அந்தச் சொத்து வரிகளை மறு நிர்ணயம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாமல் இருப்பதற்கான வழிமுறைகளையும் ஏற்படுத்தவிருக்கிறோம்” என்றார்.

இந்தியாவின் மெட்ரோபாலிடன் நகரங்களில் முக்கியமானது சென்னை. பெருமைமிக்க அந்த நகரின் நிதிநிலையை அபாயகட்டத்திலிருந்து மீட்கவேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism