Published:Updated:

சென்னை வெள்ளம்: `ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு; நடவடிக்கை நிச்சயம்’ - முதல்வர் ஸ்டாலின்

கடந்த ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த 6-ம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் கடந்த மூன்று நாள்களாக இயல்பைவிட 40 சதவிகிதத்துக்கும் அதிகமான அளவு மழை பெய்துள்ளது. இதனால், சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

சென்னை கனமழை
சென்னை கனமழை

சென்னையில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக பல்வேறு குடியிருப்புப் பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. கடந்த மூன்று நாள்களாகத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுவருகிறார். இன்று, சென்னை போரூர் ஏரியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். ஏரியில் ஆய்வு முடித்து திரும்பும் வழியில் போரூர்- பூந்தமல்லி சாலை பகுதியிலிருந்த அம்மா உணவகத்தில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அந்த உணவகத்தில் தயார் செய்துவைக்கப்பட்டிருந்த உணவுகளை முதல்வர் ருசித்துப் பார்த்தார். அம்மா உணவகத்தில் உணவருந்த வரும் மக்களுக்குச் சுகாதாரமான மற்றும் சுவையான உணவு வழங்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறினார். பின்னர் அருகிலிருந்த குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். மழை பாதிப்பு சரியாகும் வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்க முதல்வர் உத்தரவும் பிறப்பித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை கொளத்தூரில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய முதல்வர், ``ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல கோடி ரூபாய் வாங்கி என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த நேரத்தில் முறையாகப் பணிகள் நடைபெறவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கமிஷன் பெற்றுள்ளார்கள். முறையாக எந்தப் பணியும் நடைபெறவில்லை. அதிமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் அமைப்பதிலும் முறைகேடு புகார் எழுந்துள்ளது. தற்போது நிலைமையைச் சமாளித்து பணிகளை மேற்கொண்டுவருகிறோம். நிலைமை சரியானதும் ஆணையம் அமைத்து, தவறு செய்தவர்கள்மீது நிச்சயமாக, உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆழ்வார்பேட்டை பகுதியில் ஆய்வு நடத்திய முதல்வர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கொள்ளை அடித்துள்ளார்கள். மழைநீர் வடிகால் அமைப்பதாக அந்தத் துறையின் முந்தைய அமைச்சர் சொல்ல முடியாத அளவுக்குக் கொள்ளை அடித்திருக்கிறார். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைப்பதற்காக 5,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளோம் என்று கூறினார்கள். ஆனால், எதுவும் செய்ததுபோலத் தெரியவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த இந்த ஐந்து மாத காலத்திலேயே 771 கிலோமீட்டர் தூரத்துக்கு மழைநீர் கால்வாய்களைத் தூர்வாரியுள்ளோம். அங்கிருந்த ஆகாயத்தாமரைகளை அகற்றியுள்ளோம். அதனால்தான் ஓரளவுக்காவது நிலைமை சீராக இருக்கிறது" என்றார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

மேலும், ``கடந்த முறை மழை பெய்த நேரத்தில் 10 முதல் 15 நாள்களுக்கு மழைநீர் தேங்கியிருந்தது. ஆனால், நேற்று தண்ணீர் தேங்கியிருந்த இடங்களிலெல்லாம் இன்று மழைநீர் வடிந்திருக்கிறது. மெட்ரோ பணிகள் நடைபெறும் இடங்களிலும், தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. அந்தத் தண்ணீரையும் 560 ராட்சத மோட்டார்களின் உதவியோடு அகற்றும் பணி நடைபெற்றுவருகிறது. இந்த மழை பாதிப்பு சீராவது வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்க உத்தரவிட்டிருக்கிறோம்" என்று கூறினார்.

ரெட் அலர்ட்: `தொடரும் கனமழை... திறக்கப்படும் ஏரிகள்!'- வானிலை மையம் எச்சரிக்கை!

தொடர்ந்து பேசிய முதல்வர், ``சென்னை மாநகராட்சி சார்பில் காலை, மதியம், இரவு நேரங்களில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ரெட் அலர்ட் கொடுத்திருப்பதையும் மனதில் கொண்டுதான், முதலமைச்சர் என்ற முறையில் நானே எல்லா இடங்களுக்கும் சென்று ஆய்வு நடத்திவருகிறேன். அதே போன்று, அமைச்சர்களும் ஆய்வு நடத்திவருகிறார்கள். மற்ற மாவட்டங்களிலும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகளோடு இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டுவருகிறார்கள்" என்றார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

`ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கு, ``அவர் பொய் சொல்லவே பிறந்திருக்கிறார். இப்படித்தான் தேர்தல் நேரத்திலும் பொய் சொல்லிக்கொண்டிருந்தார். தேர்தலுக்குப் பிறகு பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறார். அந்த வெறுப்பிலும், திமுக இவ்வளவு வேகமாக வேலைபார்க்கிறது என்ற கடுப்பிலும், திடீரென்று வந்து ஒரு ஷோ காண்பித்துக்கொண்டு இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறார்" என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி

தொடர்ந்து பேசியவர், ``அவர் அப்படித்தான் செய்வார். அவர் வேலை அவ்வளவுதான். அதைப் பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்பட மாட்டோம். எங்களின் வேலை மக்கள் பணி. நேரடியாக மக்களைச் சந்திக்கிறோம். மக்களின் குறைகளைக் கேட்டு அந்தக் குறைகளுக்கு உடனடித் தீர்வு ஏற்படுத்துகிறோம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள்மீது நிச்சயமாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு