அரசியல்
அலசல்
Published:Updated:

ஸ்கேன் ரிப்போர்ட்: பிறப்பு சான்றிதழ் முதல் கட்டட வரி வரை... லஞ்சத்தில் புரளும் கோவை மாநகராட்சி

கோவை மாநகராட்சி...
பிரீமியம் ஸ்டோரி
News
கோவை மாநகராட்சி...

கோவை மாநகராட்சி...

ஏராளமான தொழில் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், மால்கள், 30 லட்சம் மக்கள்தொகை... என்று விஸ்வரூப வளர்ச்சி காட்டுகிறது கோவை மாநகராட்சி. பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடங்கி குடிநீர் இணைப்பு, கட்டட அனுமதி உள்ளிட்ட அத்தனைக்கும் மாநகராட்சியை மக்கள் நாட வேண்டும். ஆனால், மாநகராட்சி நிர்வாகத்தில் தங்கு தடையின்றி புகுந்து விளையாடுகிறது லஞ்சம். கொரோனா காலகட்டத்தில் மக்கள் ஏகப்பட்ட பொருளாதார இழப்புகளைச் சந்தித்துவரும் நிலையிலும் வயிற்றில் அடித்து லஞ்சம் பிடுங்குகிறார்கள் சில அதிகாரிகள்... “இந்த நெட்வொர்க் எப்படி இயங்குகிறது... எந்தெந்த விஷயங்களுக்கு, எவ்வளவு லஞ்சம் வாங்குகிறார்கள்?” என்பதைக் கண்டறிய, களமிறங்கினோம்...

ஸ்கேன் ரிப்போர்ட்: பிறப்பு சான்றிதழ் முதல் கட்டட வரி வரை... லஞ்சத்தில் புரளும் கோவை மாநகராட்சி

கோவை மாநகராட்சியின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, மத்தி ஆகிய ஐந்து மண்டலங்களில் மொத்தம் 100 வார்டுகள் இருக்கின்றன. மக்களின் தேவைகள் ஒவ்வொன்றுக்கும் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறைகள் மண்டல அலுவலகங்களிலும், மாநகராட்சி இணையதளத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன. இது பற்றிக் கேட்டால், ‘‘அதெல்லாம் சும்மா சம்பிரதாயத்துக்காகத்தான். அதன்படி போனால், அலைக்கழிப்புதான் மிஞ்சும். புரோக்கர்கள் மூலமாக கவனிக்கவேண்டியவர்களை கவனித்தால்தான் வேலையே நடக்கும்’’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

ஆர்.எஸ்.புரத்தில் மேற்கு மண்டல அலுவலகம் அமைந்துள்ள பகுதியைச் சுற்றி வலம்வந்தோம். அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க முன்னாள் கவுன்சிலரும், ரியல் எஸ்டேட் பிரமுகருமான ஒருவர், தன் பெயரிட்ட காலண்டரில் ‘மாநகராட்சி சம்பந்தப்பட்ட அனைத்து ஆலோசனைகளுக்கும் அணுகவும்’ என்று தனது தொடர்பு எண்ணுடன் அச்சடித்து விநியோகித்திருக்கிறார். அவரின் அலுவலகத்துக்குச் சென்று, ‘‘புதிய கட்டடம் ஒன்றுக்கு வரி மதிப்பீடு செய்ய வேண்டும்’’ என்று கேட்டோம். ‘‘பண்ணிக்கலாம்’’ என்றவரிடம், ‘‘எவ்வளவு ஆகும்?’’ என்று கேட்டோம். நம்மை மேலும் கீழும் நோட்டமிட்டவர், ‘‘அதெல்லாம் டாக்குமென்ட்ஸ் பார்த்துத்தான் பேச முடியும். நீங்க எல்லாத்தையும் எடுத்துட்டு வாங்க... பார்த்துப் பண்ணிக்கலாம்’’ என்றார்.

ஸ்கேன் ரிப்போர்ட்: பிறப்பு சான்றிதழ் முதல் கட்டட வரி வரை... லஞ்சத்தில் புரளும் கோவை மாநகராட்சி

இந்த நெட்வொர்க்கை நன்கறிந்த புரோக்கர் ஒருவரிடம் பேச்சுக் கொடுத்தோம்... ‘‘10 சென்ட் இடத்துக்கு வரி மதிப்பீடு செய்யறதுக்கு ஃபீஸ் 30 ஆயிரம் ரூபாய். தனியா 10 ஆயிரம் ரூபாய் உள்ளே கொடுக்கணும். 1,500 சதுர அடி வீட்டுக்குக் கட்டட வரி மதிப்பீடு செய்யறதுக்கு 15 ஆயிரம் ரூபாய் உள்ளே தரணும். அளந்து பார்த்துட்டு வீட்டு அமைப்புக்கேத்த மாதிரி கட்டணம் விதிப்பாங்க. புது வீடு கட்டுறதுக்கு அனுமதி வாங்க 13 ஆயிரம் ரூபாய் உள்ளே கொடுக்கணும். எப்படியும் நீங்க விதிப்படி பில்டிங் கட்டியிருக்க மாட்டீங்க. அதுக்குத் தனியா பெனால்டி கட்டணும். காலியிட வரி, கட்டட வரி தனி’’ என்றார் கறாராக.

கோவை மாநகராட்சியின் உள்விவரங்களை அறிந்த சிலர் நம்மிடம், ‘‘2016 வரை இதில் கவுன்சிலர்களின் கைதான் ஓங்கியிருந்தது. தேர்தல் நடக்காததால், இப்போது அதிகாரிகள், புரோக்கர்களின் ஆதிக்கம் தலைதூக்கியிருக்கிறது. கட்டட வரி மதிப்பீட்டுக்கு ஒரு சதுர அடிக்கு 10 ரூபாய் லஞ்சம் வாங்குகிறார்கள். அதாவது, ஆயிரம் சதுர அடி கட்டடத்துக்கு பத்தாயிரம் ரூபாய் லஞ்சம். அதில் புரோக்கர் மூவாயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு, ஏழாயிரத்தை பில் கலெக்டரிடம் கொடுத்துவிடுவார். பில் கலெக்டர் அதில் மூவாயிரம் ரூபாய் வரை அதிகாரிகளுக்குப் பிரித்துக்கொடுத்துவிட்டு மீதித் தொகையை எடுத்துக்கொள்வார்.

குடிநீர் இணைப்புக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பார்த்துவிடுவார்கள். தவிர, குழி தோண்டுவது தொடங்கி இணைப்பு கொடுப்பதுவரை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக ‘மீட்டர்’ போட்டுவிடுவார்கள். டவுன் பிளானிங்கில்தான் பணம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டுகிறது. கடந்த ஆட்சியில் கட்டட அனுமதிக்கு சதுர அடிக்கு 15 முதல் 25 ரூபாய் வரை லஞ்சம் வாங்கிக்கொண்டிருந்தார்கள். இப்போது அதுவே 25 முதல் 35 ரூபாயாகிவிட்டது. பிறப்பு சான்றிதழை இணையதளத்தில் இலவசமாக வாங்கிக்கொள்ளலாம். அதேநேரத்தில் அவசரத் தேவை, பெயர் மாற்றம் உள்ளிட்ட தேவைகளுக்கு வரும் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி ஒரு தொகையைக் கறந்துவிடுகிறார்கள். மேற்கு மண்டலத்திலுள்ள ஒரு பில் கலெக்டர் கடந்த ஆட்சியிலிருந்து அ.தி.மு.க வி.ஐ.பி-களின் ஆசியுடன் இரண்டு முக்கிய வார்டுகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு பணத்தில் புரள்கிறார். அவரைப் பிடித்தாலே இந்த நெட்வொர்க் முழுவதுமாக சிக்கிவிடும்” என்கிறார்கள்.

ராஜகோபால்
ராஜகோபால்

கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கராவிடம் இது பற்றியெல்லாம் விளக்கம் கேட்டோம்... ‘‘சமீபத்தில்கூட லஞ்சம் வாங்கிய ஒரு பில் கலெக்டரை சஸ்பெண்ட் செய்துள்ளோம். கட்டட அனுமதி, காலியிட வரி, கட்டட வரி மதிப்பீடு போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து கண்காணித்துவருகிறோம். தவறு எங்கு நடந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

ஆட்சி மாறினால் ‘கட்டிங்’ தொகைகள்தான் உயர்கின்றன... மக்கள் பாடு எப்போதும் திண்டாட்டம்தான்போல!