Published:Updated:

`ரஜினிக்கு எப்படித் தெரியும்?' - ஒருநபர் ஆணையத்தில் சீமான் கேள்வி

``தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், சமூக விரோதிகள் ஊடுருவினார்கள் என ரஜினி எதை வைத்துச் சொன்னார்? அவரை அழைத்து விசாரணை செய்ய வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான்
சீமான்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம், இதுவரை 14 கட்ட விசாரணையில் 377 பேரிடம் விசாரணை நடத்தி முடித்துள்ளது. இன்று, முகாம் அலுவலகத்தில் தனது 15-வது கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஆணையத்தின் முன்பு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்கள் தொடர்பாக, நாம் தமிழர் கட்சியினர் மீதுதான் அதிக வழக்கு போடப்பட்டுள்ளது. அதனால் என்னை இன்று ஆணையம் விசாரணைக்காக அழைத்துள்ளது.

சீமான்
சீமான்
`பேச்சைத் திரும்பப் பெறப்போவதில்லை!'- கடுகடுக்கும் சீமான்; கொந்தளிக்கும் காங்கிரஸ்

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில், சமூக விரோதிகள் ஊடுருவியதாக ரஜினி கருத்துக் கூறியுள்ளது தொடர்பாக, அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்ய ஒரு நபர் ஆணையத்தில் வலியுறுத்தியுள்ளேன். போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவினார்கள் என்பது ரஜினிக்கு எப்படித் தெரியும்? போராட்டத்தில் கலந்துகொண்ட மக்களைப் பார்த்து, பொத்தாம் பொதுவாக சமூகவிரோதிகள் என அவர் எப்படிச் சொன்னார்? அவர் உளவுத்துறை ஏதும் வைத்துள்ளாரா? அவர் கூறுவதுபோல துப்பாக்கிச்சூட்டில் சமூக விரோதிகளைத்தானே சுட்டிருக்க வேண்டும்.

ஏன் மக்களைச் சுட்டார்கள்? அதனால், அவரையும் அழைத்து விசாரணை நடத்த வேண்டும். போராடிய மக்கள் சமூக விரோதிகள் என்றால், நச்சு ஆலைக்கு அனுமதி கொடுத்து போராடத் தூண்டியவர்களும் சமூக விரோதிகள்தான். மக்கள் மனு கொடுக்கத்தானே வந்தார்கள். கலவரம் வரும் என அரசுக்கு தெரிந்தது எப்படி? ஒலி பெருக்கியில் அறிவிப்பு இல்லை, கண்ணீர்ப்புகைக் குண்டு வீசப்படவில்லை. எடுத்தவுடன் துப்பாக்கிச்சூடு என்றால் என்ன இது, திட்டமிட்டப்பட்ட ஒன்றாகத்தானே உள்ளது?

சீமான்
சீமான்

ஸ்டெர்லைட் ஆலையை ஒருபோதும் திறக்க மாட்டோம். இது அரசின் கொள்கை முடிவு என்கிறார்கள். இதே கோரிக்கையை வலியுறுத்தியும் அரசின் கொள்கை முடிவுக்கு ஆதரவாகவும் தானே மக்கள் போராடினார்கள். அவர்கள்மீது தாக்குதல் நடத்தி, துப்பாக்கிச்சூடு நடத்தவேண்டிய அவசியம் என்ன? அப்படியென்றால், ஆலையைத் தற்போது மூடியதும் அரசின் நாடகம்தானா என்ற கேள்வியும் எழுகிறது.

``வீழ்வோம்... வெல்வோம்... அதற்காக ரஜினிகாந்தை அனுமதிக்க முடியாது!” - சீமான்

இப்போது ரவுடிகள் அமைச்சர்களாக இருக்கிறார்கள். அதனால் போராட்டம் செய்பவர்கள், அவர்கள் கண்களுக்கு ரவுடிகளாகவே தெரிகிறார்கள். எங்களிடம் அதிகாரம் வரும்பொழுது, இவர்களின் நிலை மாறும் காலம் வரும். என்னைப் பொறுத்தவரை அலிபாபாவும் 40 திருடர்களும் போலத்தான் அம்மாவும் 40 அமைச்சர்களும். அவர்கள் சொல்லும் அம்மா தற்போது இல்லை.

சீமான்
சீமான்

ஆனால், நாற்பது திருடர்கள் மட்டும் இருக்கின்றனர். வெளிநாடுகளிலிருந்து எனக்குப் பண உதவி வருகிறது எனக் கூறிவருகிறார்கள். அப்படியானால், அதைக் கண்டுபிடிக்க வேண்டியது வருமானவரித் துறையின் கடமை. அவர்கள் என் வீட்டில் ஒரு முறை வருமான வரிச் சோதனை செய்து பார்க்கட்டும்” என்றார்.