அரசியல்
அலசல்
Published:Updated:

ரயில் பயணச் சலுகை ரத்து... பரிதவிக்கும் 12 கோடி முதியவர்கள்!

மூத்த குடிமக்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
மூத்த குடிமக்கள்

மீண்டும் சலுகை வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். ஆனால், ரயில்வே அமைச்சகம் இது சாத்தியமில்லை என்கிறது.

இந்திய ரயில்வே மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு பயணக் கட்டணத்தில் சலுகை வழங்கிவந்தது. 58 வயது நிரம்பிய பெண்களுக்கு 50 சதவிகித கட்டணச் சலுகையும், 60 வயது நிரம்பிய ஆண்களுக்கு 40 சதவிகிதக் கட்டணச் சலுகையும் வழங்கப்பட்டுவந்தது. இந்த நிலையில் 2020-ம் ஆண்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, இந்தச் சலுகைகள் ரத்துசெய்யப்படுவதாக அறிவித்தது மத்திய அரசு. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் இந்த அறிவிப்பைத் திரும்பப் பெறாததால் 12 கோடிக்கும் அதிகமான முதியோர், மாற்றுத்திறனாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

மூத்த குடிமக்கள்
மூத்த குடிமக்கள்

இது குறித்து சமூக ஆர்வலர் சிவக்குமாரிடம் பேசினோம். “200 கோடிக்கும் மேல் தடுப்பூசி போடப்பட்டு தற்போது கொரோனா பரவல் தடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இன்னமும் கட்டணச் சலுகை திரும்ப வழங்கப்படவில்லை. மேலும், முன்பு முதியோர்களுக்கு வழங்கப்படும் சலுகையைப் பயன்படுத்தி முன்பதிவு செய்யும்போது சௌகரியமாக பயணிக்கும் வகையில் இருக்கை வசதி இருக்கும். ஆனால், தற்போது 70 வயது முதியவர் முன்பதிவு செய்யும்போதும் அவருக்கு மேல் படுக்கை வழங்கப்படுகிறது. `சிறப்பு ரயில்’ என்கிற போர்வையில் கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது” என்றார் வேதனையோடு.

இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி-யிடம் பேசினோம். “மீண்டும் சலுகை வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். ஆனால், ரயில்வே அமைச்சகம் இது சாத்தியமில்லை என்கிறது. நாடாளுமன்றத்தில் என் கேள்விக்கு பதில் அளிக்கும்போது, ‘பயணிகள் போக்குவரத்து இன்னும் பழைய நிலைமைக்குத் திரும்பவில்லை’ என்று காரணம் கூறப்பட்டது. ஆனால், கடந்த 2019-20-ம் வருட காலகட்டத்தில் பயணிகள் வருமானம் ரூ.45,000 கோடியாக இருந்த நிலையில், 2021-22-ம் ஆண்டில் மீண்டும் அதே அளவை எட்டியிருக்கிறது என பட்ஜெட் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, இந்தக் காரணம் நியாயமானது அல்ல.

சு.வெங்கடேசன் எம்.பி
சு.வெங்கடேசன் எம்.பி

கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி நாடாளுமன்றத்தில் ரயில்வே நிலைக்குழு, தனது அறிக்கையில், ‘தொற்றுநோயின் காரணமாக முதியோர் பயணச் சலுகை நிறுத்தப்பட்டது. இந்த கமிட்டி, ரயில்வே சாதாரண நிலைமையை மீண்டும் எட்டுவதைக் கருத்தில்கொண்டு சலுகையைத் திருப்பி வழங்கலாம்’ என்று சுட்டிக்காட்டியிருக்கிறது. சில நாடுகளில் முதியோர்களின் நிலையைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கு இலவசப் பயணம் அனுமதிக்கப்படுகிறது. ஆனால், இந்திய ரயில்வேயில் ஏற்கெனவே வழங்கப்பட்டுவந்த சலுகையைப் பறிப்பது வேதனைக்குரியது” என்றார்.

 சிவக்குமார்
சிவக்குமார்

தீபாவளியையொட்டி நாடு முழுவதும் கூட்ட நெரிசலைச் சமாளிக்க 2,614 சிறப்பு ரயில்களை இயக்கியிருப்பதாகப் பெருமைப்பட்டிருக்கிறது ரயில்வே அமைச்சகம். முதியோர் சலுகை விஷயத்தில் மட்டும் இன்னும் எத்தனை காலம்தான் கொரோனாவைக் காரணம் காட்டப்போகிறார்கள்?!