Published:Updated:

`பி.ஜே.பி-ல சேராம ஏன் ம.நீ.ம-ல சேர்ந்தேன்னா..!' - மோடியின் ட்விட்டர் பக்கத்தை நிர்வகித்த சினேகா

கமல்ஹாசன் மற்றும் சினேகா மோகன்தாஸ்
கமல்ஹாசன் மற்றும் சினேகா மோகன்தாஸ்

``மக்கள் நீதி மய்யம் கட்சியில் நான் இணைந்துவிட்டதாக அறிவித்ததும், `நீங்கள் பா.ஜ.க-வில்தான் சேர்வீர்கள் என நினைத்தோம்' என்று எனக்கு பலர் மெசேஜ் அனுப்பியிருந்தார்கள்." - சினேகா மோகன்தாஸ்

சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ம்தேதி, இந்தியா முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு சாதனைப் பெண்கள் பிரதமர் மோடியின் சமூக வலைதளப் பக்கங்களை நிர்வகித்ததையும் அதில் தமிழகத்தைச் சேர்ந்த சினேகா மோகன்தாஸும் ஒருவர் என்பதையும் நாம் மறந்திருக்க மாட்டோம். ஆதரவற்றோர் மற்றும் வீடில்லாமல் சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவளிப்பதற்காக `FOOD BANK-India' என்ற அமைப்பைத் தொடங்கி நிர்வகித்து வரும் சினேகா மோகன்தாஸின் சேவையைப் பாராட்டி பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை ஒருநாள் நிர்வகிக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அப்போது அரசியல் மற்றும் சமூக தளங்களில் கூர்ந்து கவனிக்கப்பட்ட சினேகா மோகன்தாஸ் தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார். அவருக்கு மக்கள் நீதி மய்யத்தின் சென்னை மண்டல மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணியின் துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசியல் பயணத்துக்கு வாழ்த்துச் சொல்லி சினேகா மோகன்தாஸிடம் உரையாடினோம்...

``திடீர் அரசியல் பயணம்... என்ன காரணம்?"

``திடீர் பயணம் என்று சொல்ல முடியாது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எனபதற்காகத்தானே எல்லோரும் அரசியலுக்கு வருகிறார்கள். கடந்த ஆறு வருடங்களாக `ஃபுட் பேங்க்' (FOOD BANK-India) மூலமா அதைத்தான் நான் செய்துகொண்டிருந்தேன். `அடுத்து என்ன?' என்று எனக்குள் கேள்வியெழுந்த நேரத்தில் மக்கள் நீதி மய்யத்திலிருந்து இப்படியொரு வாய்ப்பு தேடி வந்தது. அதை மறுப்பதற்கு மனம் வரவில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சியின்மீதும் கொள்கைகள் மீதும் எனக்கு ஆரம்பத்திலிருந்தே நல்ல அபிப்ராயம் உண்டு. என்னுடைய சமூகப்பணியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கும் என்னுடைய பங்களிப்பை நல்ல முறையில் இந்தச் சமூகத்துக்கு வழங்குவதற்கும் மக்கள் நீதி மய்யம் சிறந்த தளமாக இருக்கும்."

``ஏழைகளுக்கு உணவு வழங்கும் பணிதான் உங்களை இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கிறது. அந்தப் பணி ஆரம்பித்த கதையைச் சொல்லுங்களேன்..."

கமலுடனான சந்திப்பின்போது...
கமலுடனான சந்திப்பின்போது...

``அதற்குக் காரணம் என் பெற்றோர்தான். வருடத்தில் இரண்டு நாள்கள் பத்து பதினைந்து ஆசிரமங்களிலிருந்து குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து வந்து சாப்பாடு போடுவார்கள். அதற்காக எங்கள் தெருவில் பந்தல் அமைத்து ஏதோ விசேஷம் போலச் செய்வார்கள். சாப்பாடு மட்டுமல்லாமல் அந்தக் குழந்தைகளுக்கு தேவையான உடைகள், பொம்மைகள் எல்லாம் வாங்கித் தந்து அனுப்புவார்கள். அதைப் பார்த்து வளர்ந்ததால் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற விதை சிறு வயதிலேயே எனக்குள் விழுந்துவிட்டது. ஒவ்வொரு வியாழக்கிழமையும் சாய்பாபா கோயிலுக்குச் சென்று, உணவு பொட்டலங்கள் வழங்க ஆரம்பித்தேன். ஒருகட்டத்தில் நாம் கொடுப்பது போதாது... இன்னும் நிறைய பேருக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. ஃபேஸ்புக்கில் FOOD BANK-India என்று ஒரு பக்கம் ஆரம்பித்தேன். நிறைய பேர் ஆதரவு தந்தார்கள். இப்போது இந்தியா முழுக்க 18 இடங்களில் எங்களுடைய சேவை தொடர்கிறது. தென் ஆப்பிரிக்காவிலும் எங்கள் குழு செயல்பட ஆரம்பித்துள்ளது. என்னுடைய அரசியல் பயணம் தனி... FOOD BANK-India-வின் பணி தனி. ஒருபோதும் இரண்டையும் கலக்க மாட்டேன்."

``உங்களுக்கும் மக்கள் நீதி மய்யத்துக்கும் எப்படி அறிமுகம் ஏற்பட்டது.?"

``கொரோனா ஆரம்பித்த புதிதில் மன அழுத்தம் தாங்காமல் நிறைய பேர் தற்கொலை செய்துகொண்டனர். அதைத் தொடர்ந்து, மன அழுத்தம் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த எங்கள் அமைப்பு சார்பாக ஒரு விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுத்தோம். அந்த நிகழ்வை ட்விட்டரில் கமல் சார் தொடங்கி வைக்க வேண்டி அணுகி இருந்தோம். அப்போது என்னுடைய புரொஃபைலை அனுப்பியிருந்தேன். அதுமட்டுமல்லாது பிரதமரின் ட்விட்டர் கணக்கை ஒருநாள் நிர்வகிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்த செய்தி மூலமாகவும் என்னை கமல் சாருக்கு தெரிந்திருக்கிறது. அவற்றையெல்லாம் பார்த்துவிட்டுத்தான் இதுபோன்ற தலைவர்கள்தாம் நம் கட்சிக்குத் தேவை என்று என்னை அழைத்திருந்தார்கள்."

சினேகா மோகன்தாஸ்
சினேகா மோகன்தாஸ்

``கமல்ஹாசனை நேரில் சந்திக்கும்போது எப்படி இருந்தது... என்ன சொன்னார்?"

``கடந்த வாரத்தில் 20 நிமிடங்கள் அந்தச் சந்திப்பு நடந்தது. அப்போது, சமூகப் பிரச்னைகள் குறித்துதான் கமல் சார் அதிகம் விவாதித்தார். ஆறுகளை அழிவிலிருந்து எப்படி மீட்பது என்பது குறித்து நிறைய பேசினார். அவரைப் பற்றியோ அவர் செய்த சாதனைகளைப் பற்றியோ மறந்தும் ஒரு வார்த்தைகூட அவர் பேசவில்லை. அது எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யமாக இருந்தது. பொதுவாக ஒரு கட்சிக்கு ஒருவரை அழைக்கும்போது கட்சியின் அருமை பெருமைகளைச் சொல்வார்கள். தங்களுடைய அனுபவங்களைப் பகிரும் வகையிலாவது அதை வெளிப்படுத்துவார்கள். ஆனால், கமல் சார் ஒரு வார்த்தைகூட அப்படிப் பேசவில்லை. அவருடைய சிந்தனை முழுக்க முழுக்க சமூக மாற்றம் குறித்தும் வளர்ச்சி குறித்தும்தான் இருந்தது. மிகவும் இன்ஸ்பயரிங்கான உரையாடல் அது. மிகவும் எளிமையாக இருந்தார். என் ஐடியாக்களை காதுகொடுத்துக் கேட்டார். அவருடனான சந்திப்பு முடிந்ததும் மக்கள் நீதி மய்யத்தில் இணைவதற்கு நான் எடுத்த முடிவு மிகச் சரியானது என உணர்ந்தேன்."

``பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை ஒருநாள் நிர்வகித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்ட நீங்கள், பா.ஜ.க-வில்தான் இணைவீர்கள் என்று பலரும் எதிர்பார்த்தார்கள் எனச் சொல்லப்படுகிறதே?"

``நிச்சயமாக. மக்கள் நீதி மய்யம் கட்சியில் நான் இணைந்துவிட்டதாக அறிவித்ததும், `நீங்கள் பா.ஜ.க-வில்தான் சேர்வீர்கள் என நினைத்தோம்' என்று எனக்கு பலர் மெசேஜ் அனுப்பியிருந்தார்கள். அவர்களுக்கும் அவர்களைப் போல கேள்வி உள்ள பலருக்கும் விகடன் மூலமாக ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துகிறேன். அந்த வாய்ப்பை இந்தியாவின் பிரதமரிடமிருந்து கிடைத்த வாய்ப்பாகத்தான் நான் நினைத்தேனே ஒழிய பி.ஜே.பி என்ற அரசியல் கட்சியிடமிருந்து கிடைத்த வாய்ப்பாகக் கருதவில்லை. எங்கள் என்.ஜி.ஓ-வின் நோக்கத்தை பிரதமர் மூலமாக மக்களிடம் போய்ச் சேர்த்ததில் மிகவும் சந்தோஷம். இப்போதும் அதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். ஆனால், நான் பா.ஜ.க ஆதரவாளர் என்றோ அந்தக் கட்சியில் சேர விரும்புவதாகவோ எந்த இடத்திலும் பதிவு செய்தது கிடையாது."

`வெற்றியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்’ - பிரதமரின் ட்விட்டரை நிர்வகித்த தமிழக பெண்
அடுத்த கட்டுரைக்கு