Published:Updated:

`சோனியா முதல் கார்த்தி சிதம்பரம் வரை..!' - 2022-ல் அதிக கவனம் ஈர்த்த அமலாக்கத்துறை ரெய்டுகள்

அமலாக்கத்துறை

2014-ல் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் அமலாக்கத்துறை சுமார் 3,010 ரெய்டுகளை நடத்தியிருக்கிறது.

`சோனியா முதல் கார்த்தி சிதம்பரம் வரை..!' - 2022-ல் அதிக கவனம் ஈர்த்த அமலாக்கத்துறை ரெய்டுகள்

2014-ல் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் அமலாக்கத்துறை சுமார் 3,010 ரெய்டுகளை நடத்தியிருக்கிறது.

Published:Updated:
அமலாக்கத்துறை

தற்போதைய நிலவரப்படி, நாள்தோறும் ஏதாவதொரு அமைச்சர் அல்லது தொழிலதிபர் வீட்டில் ரெய்டு, இவ்வளவு கோடி ரூபாய் பறிமுதல் என்ற செய்திகளை நாம் பார்த்து வருகிறோம். மறுபுறம், எதிர்க்கட்சிகள் மீதான பழிவாங்கும் அரசியலை அமலாக்கத்துறை மூலம் மத்திய அரசு நடத்தி வருகிறது எனும் விமர்சனங்களையும் பார்க்கிறோம்.

மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி
மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி
ட்விட்டர்

இந்த நிலையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, ``2014-ல் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் அமலாக்கத்துறை சுமார் 3,010 ரெய்டுகளை நடத்தியிருக்கிறது. அது மட்டுமல்லாமல், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், ரூ.99,356 கோடி மதிப்பிலானவை (ரொக்கம், பொருள்) பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், இது தொடர்பாக பதியப்பட்ட 888 வழக்குகளில், 23 குற்றவாளிகளுக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது" என நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராகுல் காந்தி, சோனியா காந்தி
ராகுல் காந்தி, சோனியா காந்தி

அந்த வரிசையில், இந்த ஆண்டில் அதிகம் கவனிக்கப்பட்ட அமலாக்கத்துறையின் டாப் 10 ரெய்டுகள் குறித்த சிறிய பட்டியலைக் காண்போம்.

1. சோனியா காந்தி, ராகுல் காந்திமீதான நேஷனல் ஹெரால்டு வழக்கு:

நேஷனல் ஹெரால்டு நாளிதழ் விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாக, கடந்த 2013-ல் பா.ஜ.க தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடுத்த வழக்கில், சோனியா, ராகுலிடம் அமலாக்கத்துறை அண்மையில் விசாரணை நடத்தி முடித்தது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதியன்று டெல்லியில் நேஷனல் ஹெரால்டு அலுவலகம் உட்பட மொத்தம் 12 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. அதோடு நேஷனல் ஹெரால்டு கட்டடத்திலுள்ள யங் இந்தியா அலுவலகத்துக்கு அமலாக்கத்துறை சீல் வைத்தது.

பார்த்தா சாட்டர்ஜி
பார்த்தா சாட்டர்ஜி
ட்விட்டர்

2. மேற்கு வங்க திரிணாமுல் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி ஊழல்:

மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக, திரிணாமுல் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அவரின் உதவியாளர் அர்பிதா முகர்ஜி ஆகியோர், அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். அர்பிதா முகர்ஜிக்குச் சொந்தமான வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டுகளில் இதுவரை சுமார் 50 கோடி ரூபாய் ரொக்கமாக மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஊழல் காரணமாக பார்த்தா சாட்டர்ஜி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜார்கண்ட் முதல்வரின் உதவியாளர் பூஜா சிங்கால்(ஐ.ஏ.எஸ்)
ஜார்கண்ட் முதல்வரின் உதவியாளர் பூஜா சிங்கால்(ஐ.ஏ.எஸ்)
ட்விட்டர்

3. ஜார்கண்ட் முதல்வரின் உதவியாளர் பூஜா சிங்கால்(ஐ.ஏ.எஸ்) பண மோசடி:

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளரான ஐ.ஏ.எஸ் அதிகாரி பூஜா சிங்கால், மாநிலத்தின் குந்தி மற்றும் சத்ரா மாவட்டங்களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் திட்டத்தின் நிதியை மோசடி செய்ததாக அமலாக்கத்துறையால் ரெய்டுக்குள்ளானார். இதில், பூஜா சிங்கால், அவர் கணக்காளரிடமிருந்து ரூ.20 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

சத்தியேந்திர செயின்
சத்தியேந்திர செயின்
ட்விட்டர்

4. டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மீதான பண மோசடி வழக்கு:

ஆம் ஆத்மியைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின்மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக் குவித்தாக 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 24-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி இந்த வழக்கில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கடந்த மே மாதம் சத்யேந்தர் ஜெயின் கைதுசெய்யப்பட்டார். இதில், சத்யேந்தர் ஜெயின் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டில் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கம் மற்றும் 1.8 கிலோ எடையுள்ள தங்கத்தை அமலாக்கத்துறை கைப்பற்றியது. இந்த வழக்கின் காரணமாக சத்யேந்தர் ஜெயினின் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

5. காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் - சீனா விசா முறைகேடு வழக்கு:

பஞ்சாப்பில் ஒரு மின் திட்டத்துக்காக வேதாந்தா துணை நிறுவனத்துடன் இணைந்து பணிபுரியும் ஒரு நிறுவனத்தின் 300 சீனர்களுக்கு விசா வழங்குவதற்காக வேதாந்தா குழுமத்திடமிருந்து ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரத்தின்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த மே மாதம், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர் மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய பல்வேறு இடங்களில் சி.பி.ஐ ரெய்டு நடைபெற்றது.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

6. பத்ரா சால் நில மோசடி வழக்கு - சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்:

மகாராஷ்டிரா மாநிலத்தின் சிவசேனா கட்சிக்குள் நிகழ்ந்த உட்கட்சிப்பூசல் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, பத்ரா சால் நில மோசடி வழக்கு தொடர்பாக சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை கைதுசெய்தது. இதில், ராவத்துக்குச் சொந்தமான பங்களாவில் ரெய்டு நடத்திய அமலாக்கத்துறை ரூ.11.5 லட்சம் ரொக்கத்தை கைப்பற்றியது. மேலும் இந்த ரெய்டில், 3 கோடி ரூபாய் ரொக்கம் சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அமலாக்கத்துறை கூறியது.

யெஸ் பேங்க்
யெஸ் பேங்க்

7. யெஸ் பேங்க்-டி.எச்.எஃப்.எல் பண மோசடி வழக்கு:

யெஸ் பேங்க்-டி.எச்.எஃப்.எல் பண மோசடி வழக்கில் மொத்தம் ரூ.415 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருக்கிறது. இந்த மொத்த சொத்துகளில், ரூ.251 கோடி சஞ்சய் சாப்ரியாவுக்கும், ரூ.164 கோடி அவினாஷ் போசலேவுக்கும் சொந்தமானது என்று கூறப்படுகிறது. மேலும் அமலாக்கத்துறை இந்த வழக்கில், புனேவில் அவினாஷ் போசலேவுக்கு சொந்தமான வீட்டில் ஹெலிகாப்டர் ஒன்று பறிமுதல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சரண்ஜித் சிங் சன்னி - பூபிந்தர் சிங் ஹனி
சரண்ஜித் சிங் சன்னி - பூபிந்தர் சிங் ஹனி
ட்விட்டர்

8. பஞ்சாப் முன்னாள் முதல்வரின் மருமகன் பூபிந்தர் சிங் ஹனி மீதான மணல் கடத்தல் வழக்கு:

பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் பூபிந்தர் சிங் ஹனி, சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டதாக, பிப்ரவரி 3-ம் தேதி பூபிந்தர் சிங்கை அமலாக்கத்துறை கைதுசெய்தது. கைதுசெய்யப்படுவதற்கு முன்னதாக பூபிந்தர் சிங் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில், ரூ.21 லட்சத்துக்கும் அதிக மதிப்பிலான தங்கம், ரூ.12 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்ச் என மொத்தம் ரூ.10 கோடிக்கும் அதிகமாகப் பறிமுதல் செய்யப்பட்டது.

நவாப் மாலிக்
நவாப் மாலிக்

9. மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்:

மகாராஷ்டிர அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான நவாப் மாலிக், தாவூத் இப்ராஹிமின் டி-நிறுவனத்துடன் நீண்ட காலமாக தொடர்பு வைத்திருந்ததாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாக மும்பை நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், 1996-ல் குர்லா வெஸ்டில் உள்ள கோவாலா கட்டட வளாகத்தை அபகரிக்க சதி நடந்திருப்பதாக நவாப் மாலிக்மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் நவாப் மாலிக் தற்போது அமலாக்கத்துறை காவலில் இருக்கிறார்.

ஃபரூக் அப்துல்லா
ஃபரூக் அப்துல்லா

10. ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாமீதான பண மோசடி வழக்கு:

ஃபரூக் அப்துல்லா முதல்வராக இருந்த காலகட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்க நிதியில் மோசடி நடந்திருப்பதாகப் புகார் எழுந்தது. அது தொடர்பாக ஃபரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் இதுவரை ரூ.51.90 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதில் ரூ.21.55 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்திருக்கிறது.