Published:Updated:

2G vs 5G - ஊழல் குற்றச்சாட்டும்... பி.எஸ்.என்.எல் புறக்கணிப்பும்...

5G
பிரீமியம் ஸ்டோரி
5G

அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் மட்டுமே 5ஜி சேவை வழங்கப்பட்டுவரும் நிலையில், இந்தியாவிலும் 5ஜி சேவை வழங்கப்படவிருப்பது வரவேற்கத்தக்கது.

2G vs 5G - ஊழல் குற்றச்சாட்டும்... பி.எஸ்.என்.எல் புறக்கணிப்பும்...

அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் மட்டுமே 5ஜி சேவை வழங்கப்பட்டுவரும் நிலையில், இந்தியாவிலும் 5ஜி சேவை வழங்கப்படவிருப்பது வரவேற்கத்தக்கது.

Published:Updated:
5G
பிரீமியம் ஸ்டோரி
5G

ஐ.பி.எல் ஏலத்துக்கு இணையான பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது 5ஜி அலைக்கற்றை ஏலம். ரூ.4.3 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் ரூ.1.5 லட்சம் கோடிக்கு ஏலம்போயிருப்பது ஊழல் புகாருக்கு வழிவகுத்திருக்கிறது. ஜியோ உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்ற இந்த ஏலத்தில், பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் ஏன் புறக்கணிக்கப்பட்டது என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

கேள்விகளும் குற்றச்சாட்டுகளும்!

அடுத்த சில மாதங்களில் தொலைத் தொடர்பு சேவையில் மிகப்பெரிய மாற்றங்களைக் காணவிருக்கிறது இந்தியா. 4ஜி-யைக் காட்டிலும் பத்து மடங்கு வேகம்கொண்ட 5ஜி சேவையால் தொலைத் தொடர்பில் பல மாற்றங்களும் முன்னேற்றங்களும் சாத்தியமாகப்போகின்றன. அதற்கான ஆரம்பம்தான், கடந்த ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 1-ம் தேதிவரை நடைபெற்ற 5ஜி அலைக்கற்றை ஏலம். டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உட்பட 13 நகரங்களில் வரும் செப்டம்பர் மாதம் 5ஜி சேவை வழங்கப்படும் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

2G vs 5G - ஊழல் குற்றச்சாட்டும்... பி.எஸ்.என்.எல் புறக்கணிப்பும்...

அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் மட்டுமே 5ஜி சேவை வழங்கப்பட்டுவரும் நிலையில், இந்தியாவிலும் 5ஜி சேவை வழங்கப்படவிருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில், 5ஜி அலைக்கற்றை ஏலம் குறித்து பல்வேறு கேள்விகளும் குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கின்றன. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, சுனில் பார்த்தி மிட்டலின் ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ஆகிய நான்கு தனியார் பெரு நிறுவனங்கள் மட்டுமே 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்றன. அந்த ஏலத்தில், 10 பேண்ட்களில் 72,098 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை 20 ஆண்டுகளுக்கு ஏலம்விட தொலைத் தொடர்புத்துறை முடிவுசெய்தது. அதன் அடிப்படை மதிப்பு ரூ.4.3 லட்சம் கோடி என்று சொல்லப்பட்டது. ஆனால், 51,236 மெகாஹெர்ட்ஸ் மட்டுமே விற்பனையானதாக வும், அதிலும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடிக்கு மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டதாகவும் மத்திய தொலைத் தொடர்புத்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார். முதல் நாள் ஏலத்தில் ரூ.1.45 லட்சம் கோடி வரை ஏலம் கேட்கப்பட்டது. அடுத்த ஆறு நாள்களில் கூடுதலாக ரூ. 5,173 கோடி மட்டுமே ஏலத்தொகை உயர்ந்தது. இந்த நிலையில்தான், இந்த ஏலத்தில் பெரு நிறுவனங்களுக்குச் சாதகமாக மத்திய அரசு செயல்பட்டதாகவும், இதில் ஊழல் நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக் கின்றன. ட்விட்டரில் #5G_Scam_Bjp என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆனது.

அஷ்வினி வைஷ்ணவ்
அஷ்வினி வைஷ்ணவ்

இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சரும், தி.மு.க-வின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, “வெறும் 30 மெகாஹெர்ட்ஸ் 2ஜி அலைக்கற்றையை, ட்ராயின் பரிந்துரைப்படி கொடுத்தபோது, ரூ.1.76 லட்சம் கோடி நஷ்டம் என்று அன்றைக்கு இருந்த தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ராய் அறிக்கை அளித்தார். அது, ஆட்சியைக் கவிழ்க்க நடந்த சதி. இன்றைக்கு இவர்கள் ஏலம்விட்டிருப்பது 51 ஜிகாஹெர்ட்ஸ். அதாவது, மெகாஹெர்ட்ஸைவிட, ஜிகா ஹெர்ட்ஸின் திறனும் அளவும் 20 மடங்கு அதிகம். அதன்படி பார்த்தால், 5ஜி ஏலம், ஐந்து அல்லது ஆறு லட்சம் கோடி ரூபாய்க்குப் போயிருக்க வேண்டும். திட்டமிடுதல் மோசமா அல்லது நான்கைந்து கம்பெனிகளுடன் இணைந்து மத்திய அரசு மோசடி செய்ததா என்பதை விசாரணை செய்ய வேண்டும். இது, மிகப்பெரும் மோசடி” என்று கூறியிருக்கிறார். அதை மறுத்துள்ள அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், “முன்னாள் அமைச்சரின் குற்றச்சாட்டு அதிர்ச்சி அளிக்கிறது. இன்னும் விற்பனையாகாத அலைவரிசைகள் அரசிடமே இருப்பதைக் கருத்தில் கொள்ளாமல், குற்றம் சாட்டியிருக்கிறார் அவர்” என்றிருக்கிறார்.

அழியும் நிலையில் பி.எஸ்.என்.எல்!

இந்த விவகாரம் குறித்து பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்கத்தின் அகில இந்திய உதவிப் பொதுச்செயலாளர் எஸ்.செல்லப்பாவிடம் பேசினோம். “5ஜி ஏலத்தில் முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றிருப்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது. இன்னமும் 4ஜி சேவையை முழுமையாக வழங்க முடியாமல் பி.எஸ்.என்.எல் தவித்து வரும் நிலையில், தொலைத் தொடர்புத் துறையில் எந்த அனுபவமும் இல்லாத அதானி குழுமம், நேரடியாக 5ஜி சேவைக்கு வருகிறது. இதற்கு முன்பு நடந்த அலைக்கற்றை ஏலத்தின்போது, பெயருக்காவது பி.எஸ்.என்.எல் பெயரைக் குறிப்பிடுவார்கள். இந்த முறை அதுவும் இல்லை. தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் மத்திய அரசு, தன் சொந்த நிறுவனமான பி.எஸ்.என்.எல்-ஐ கொஞ்சம் கொஞ்சமாகச் சாகடித்துவருகிறது.

செல்லப்பா
செல்லப்பா

4ஜி, 5ஜி சேவைகளை வழங்குவதற்கு அலைக்கற்றை, டவர்கள், உபகரணங்கள் ஆகியவை அவசியம். அலைக்கற்றையை அரசு கொடுக்கும். டவர்கள், உபகரணங்களை அந்தந்த நிறுவனங்கள்தான் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். தனியார் நிறுவனங்களுக்கெல்லாம் 4ஜி சேவைக்கான அனுமதியை வழங்கிய அரசு, பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு அந்த அனுமதி யையே வழங்கவில்லை. நாங்கள் பல போராட்டங் களை நடத்திய பிறகு, 2019-ம் ஆண்டுதான் 4ஜி-க்கான அனுமதி கொடுத்தார்கள். அதற்கு அமைக்கப்படவேண்டிய ஒரு லட்சம் டவர்களை இன்னும் அமைக்கவில்லை. மேலும், 4ஜி-க்குத் தேவையான உபகரணங்களை வெளிநாடுகளி லிருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டும். தனியார் நிறுவனங்களெல்லாம் வெளிநாடுகளி லிருந்து இறக்குமதி செய்து 4ஜி சேவையை வழங்கிவிட்டன. ஆனால், அதேபோல உபகர ணங்களை வாங்க பி.எஸ்.என்.எல் டெண்டர் வெளியிட்டபோது, ‘உள்நாட்டில்தான் உபகரணங்களை வாங்க வேண்டும்’ என்று சொல்லி அதை மத்திய அரசு தடுத்துவிட்டது. உண்மையில், அந்த உபகரணங்களை உற்பத்தி செய்யும் கம்பெனி ஒன்றுகூட இந்தியாவில் இல்லை. இந்த முட்டுக்கட்டையால், இன்னமும் பி.எஸ்.என்.எல் நிறுவனத் தால் 4ஜி சேவையை முழுமையாக வழங்க முடியவில்லை. தனியார் நிறுவனங்களெல்லாம் 5ஜி-க்குப் போகும் நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கதி என்னவாகும் என்று தெரியவில்லை” என்றார் செல்லப்பா.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை ரூ.1.64 லட்சம் கோடியில் மறுசீரமைப்பு செய்யும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்திருப்பது பற்றி அவரிடம் கேட்டபோது, “இவை எல்லாமே வெறும் பேப்பர் கணக்கு. உதாரணமாக, 4ஜி அலைக்கற்றைக்கான செலவு என்ற வகையில் ரூ.45 ஆயிரம் கோடி கணக்கு காட்டுகிறார்கள். ஆனால், அலைக்கற்றைக்கு ஒரு ரூபாய்கூட செலவு செய்யவேண்டியதில்லை. பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடி கடன் பத்திரம் தருவதாகச் சொல்கிறார்கள். அதை வைத்து வங்கியில் பி.எஸ்.என்.எல் கடன் வாங்கலாம். அந்தக் கடனை பி.எஸ்.என்.எல்- தான் கட்ட வேண்டும். இதையெல்லாம் சேர்த்துத்தான் ரூ.1.64 லட்சம் கோடி என்கிறார்கள்” என்றார் எஸ்.செல்லப்பா.

ஷியாம் சேகர்
ஷியாம் சேகர்

ஊழல் நடந்திருக்கிறதா?

5ஜி ஏலத்தில் ஊழல் நடந்திருப்பதாக எழுந் திருக்கும் குற்றச்சாட்டு குறித்து பொருளாதார நிபுணர் ஷியாம் சேகரிடம் பேசினோம்.

“2ஜி-க்கும் 5ஜி-க்கும் இடையிலான வித்தியாசங்களைத் தெரிந்துகொண்டால், இதில் தெளிவு பெறலாம். 2ஜி-யில் யார் பணம் கொடுத்தார்களோ, அவர்களுக்கு அலைக்கற்றையை விற்கத் தயாராக இருந்தார்கள். தொழில்நுட்பத்தை எங்கிருந்து வேண்டுமானாலும் கொண்டுவரலாம் என்ற நிலை அப்போது இருந்தது. அதனால், சீனாவின் தொழில்நுட்பம் நிறைய வந்தது. 5ஜி-யில் அப்படி கிடையாது. உள்நாட்டு தொழில்நுட்பத்தைவைத்து டேட்டாக்களைக் கையாள வேண்டும் என்பதில் அரசு கவனமாக இருக்கிறது. அன்றைக்கு இருந்த விலை, வாடிக்கை யாளர் எண்ணிக்கை அதிகரிப்பைப் பொறுத்து இருந்தது. இன்றைக்கு நுகர்வோர் எண்ணிக்கை அதிகரிக் கப்போவதில்லை. எல்லோருடைய கைகளிலும் ஏற்கெனவே ஸ்மார்ட் போன்கள் இருக்கின்றன. நுகர்வின் அளவைத்தான் அதிகரிக்கப் போகிறார்கள். எனவே, நுகர்வுக்கான விலையைத்தான் கொடுக்கப்போகிறார் கள். ஒப்பீட்டளவில் அப்போது இருந்ததைவிட இன்றைக்கு அழைப்புகளுக்கான கட்டணம் வெகுவாகக் குறைந்துவிட்டதால், அலைக்கற்றையின் மதிப்பும் குறையத்தான் செய்யும். அந்த வகையில், ரூ.1.5 லட்சம் கோடிகூட வராது என்பதுதான் பொதுவான கணிப்பாக இருந்தது. எனவே, இதில் ஊழல் நடந்திருப்பதற்கு முகாந்திரம் இல்லை” என்றார்.

2ஜி ஊழல் குற்றச்சாட்டை ஆட்சி மாற்றத்துக்கான கருவியாகப் பயன்படுத்திய பா.ஜ.க-வுக்கு, 5ஜி ஏலம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு முறையான பதிலும், விளக்கமும் சொல்லவேண்டிய தார்மிகப் பொறுப்பிருக்கிறது!