Published:Updated:

நிவாரணப் பிரச்னையில் நீதி கிடைக்குமா?

பல மாநிலங்களில் அரசு கொடுத்த மரணப் புள்ளிவிவரங்களுக்கும் மயானங்களில் எடுக்கப்பட்ட கணக்குகளுக்கும் முரண்பாடு நிறையவே இருந்தது.

பிரீமியம் ஸ்டோரி

50,000 ரூபாய்... இந்தியாவில் கொரோனாவால் இறந்த ஒவ்வொருவருக்கும் இழப்பீட்டுத் தொகையாக இவ்வளவு வழங்க உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ‘இது போதுமான நிவாரணத் தொகையா’ என்ற விவாதமும், இன்னொரு பக்கம், ‘கொரோனா மரணங்களுக்கு இழப்பீடு வழங்கும் சுமையை மாநில அரசுகளின் தலையில் மத்திய அரசு கட்டுகிறது’ என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது.

இந்தியாவில் கொரோனாவால் முதல் மரணம் 2020-ம் ஆண்டு மார்ச் 10 அன்று நிகழ்ந்தது. அன்று தொடங்கி செப்டம்பர் 30 வரை இந்தியாவில் கொரோனாவால் இழந்த உயிர்களின் எண்ணிக்கை 4,48,339. உலக நாடுகளில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு, மிக அதிக மரணங்கள் நிகழ்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் இருக்கிறது. இது ‘கொரோனாவால் நிகழ்ந்த மரணம்’ என அதிகாரபூர்வமாக மருத்துவர்களால் சான்றளிக்கப்பட்ட பட்டியல். ‘உண்மையான உயிரிழப்பு இன்னும் பல மடங்கு இருக்கலாம்’ என்கிறார்கள்.

குறிப்பாக ஒரு சூறாவளி போல உலுக்கியெடுத்த கொரோனா இரண்டாவது அலையில் நாளொன்றுக்கு சுமார் 4 லட்சம் புதிய தொற்றுகள், ஏறக்குறைய 4,000 மரணங்கள் என இந்தியாவில் பாதிப்பு உச்சத்தை அடைந்தது. படுக்கைகள் கிடைக்காமல் மருத்துவமனை வாசல்களில் ஆம்புலன்ஸ்கள் வரிசை கட்டி நின்றன. தங்கள் அன்புக்குரியவர்களின் உயிரைக் காப்பாற்ற என்ன விலை கொடுத்தேனும் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்க நகரமெங்கும் அலைந்தனர் மக்கள். மயானங்களில் பிணங்களை எரிப்பதற்கு இடமில்லாத நிலையில், இந்தியாவே ஒரு திறந்தவெளி மயானமாக மாறியது.

பதிவாகிக்கொண்டிருந்த மரணங்களின் எண்ணிக்கையே அதிர்ச்சியில் ஆழ்த்திக் கொண்டிருக்க, இந்தியா கொரோனா மரணங்களின் எண்ணிக்கையைக் குறைத்து மதிப்பிடுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பல மாநிலங்களில் அரசு கொடுத்த மரணப் புள்ளிவிவரங்களுக்கும் மயானங்களில் எடுக்கப்பட்ட கணக்குகளுக்கும் முரண்பாடு நிறையவே இருந்தது.

நிவாரணப் பிரச்னையில் நீதி கிடைக்குமா?

இந்தப் பின்னணியில், ‘கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’ என வழக்கறிஞர்கள் கௌரவ் குமார் பன்சால், ரீபக் கன்சல் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியே தாக்கல் செய்திருந்த பொதுநல மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ஏ.எஸ்.போபண்ணா அமர்வு, ‘கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க எளிமையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு’ தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, ‘கொரோனாவால் இறந்தவர்கள், கொரோனாத் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு கொரோனாவால் இறந்தவர்கள் ஆகியோரின் குடும்பங்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இந்த இழப்பீட்டுத் தொகையை மாநிலங்கள் மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து வழங்கும். இனி ஏற்படும் கொரோனா பாதிப்புகளுக்கும் இந்த இழப்பீட்டுத் தொகை பொருந்தும்’ என்று நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

ஆனால், ‘கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு காரணங்களால் இறப்பவர்கள், தற்கொலை செய்துகொண்டவர்கள் ஆகியோரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க முடியாது’ என மத்திய அரசு கூறியிருந்தது. ஆனால், கொரோனாவால் ஏற்படும் மன உளைச்சலே நோயாளிகளைத் தற்கொலைக்குத் தூண்டுவதாகத் தெரிவித்த நீதிபதிகள், அதற்கும் இழப்பீடு வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். இதையும் மத்திய அரசு ஏற்றது.

எனவே, ‘கொரோனா பாசிட்டிவ்’ எனப் பரிசோதனை முடிவு வந்து, 30 நாள்களுக்குள் ஒருவர் எப்படி இறந்திருந்தாலும், அவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்படும். அந்த 30 நாள்களுக்குள் தற்கொலை செய்திருந்தாலும் இழப்பீடு கிடைக்கும். மருத்துவமனையில் இறந்தாலும் வீட்டில் இறந்தாலும் இழப்பீடு உண்டு. கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதனால் வேறுவித உபாதைகளுக்கு உள்ளாகி, நீண்ட காலம் சிகிச்சை பெற்று மரணமடைந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும். அவர்களுக்கு இந்த 30 நாள் காலக்கெடு பொருந்தாது.

இதற்காக ஒவ்வொரு மாவட்ட அளவிலும் கமிட்டிகள் அமைக்கப்படும். கொரோனா இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் இங்கு விண்ணப்பித்தால், 30 நாள்களுக்குள் இழப்பீட்டுத் தொகை, விண்ணப்பிக்கும் நபர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் வழங்கப்படும்.

‘கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு, பேரிடர் மேலாண்மைச் சட்டம் (2005) பகுதி 12 (iii)-ன் படி, ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்ற அடிப்படையிலேயே உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால், ‘மத்திய அரசு இழப்பீட்டையும் குறைத்துவிட்டது. நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, மாநிலங்களின் தலையில் சுமையைக் கூட்டுகிறது’ என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

இந்தியா முழுக்க இதுவரை கொரோனாவால் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு சுமார் 2,240 கோடி ரூபாய் தேவைப்படும். இது மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்தே வழங்கப்படும். மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதிக்கு 75 சதவிகிதத் தொகையை மத்திய அரசு வழங்குகிறது. (வடகிழக்கு மாநிலங்களுக்கு 90 சதவிகிதம் வழங்குகிறது மத்திய அரசு!) இப்படிப் பெரும் பங்கு மத்திய அரசிடமிருந்து வந்தாலும், கொரோனாத் தடுப்பு நடவடிக்கைக்காக மாநிலங்கள் ஏற்கெனவே மிகப் பெரும் தொகையை இதிலிருந்து செலவிட்டிருக்கும் சூழலில், கொரோனா உயிரிழப்புக்கான இழப்பீட்டுத் தொகையையும் இதிலிருந்து வழங்குவது என்பது மிகப் பெரிய நிதிச் சுமையை மாநிலங்களுக்கு ஏற்படுத்தும். பல மாநிலங்களில் இது புயல், வெள்ளக்காலம், அதுபோன்ற இயற்கைச் சீற்றங்களுக்கும் இந்த நிதியிலிருந்தே இழப்பீடு தர வேண்டியிருக்கும்.

“கொரோனாப் பெருந்தொற்று ஓர் உலகளாவியப் பேரிடர் என்று இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தும் அறிவித்திருக்கின்றன. அந்த வகையில், கொரோனாப் பேரிடரால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது முக்கியம். ஆனால், ரூ. 50,000 எந்த வகையிலும் போதாது. இழப்பீட்டுத் தொகையை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். கொரோனாப் பெருந்தொற்று என்பது எதிர்பாராதவிதமாக வந்த இடர். இந்தியா மட்டுமல்ல, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளிலிருந்த சுணக்கம் காரணமாகவே தொற்று அதிகமாகப் பரவியது. நோய் வந்தபிறகு செலவிடும் பணத்துக்குப் பதிலாக, நோய் வராமல் தடுப்பதற்குப் பணத்தைச் செலவிட்டுப் பொதுச் சுகாதாரத்தைக் கட்டமைப்பை உறுதிப்படுத்த வேண்டும்” என்கிறார் சென்னை மாநகராட்சியின் முன்னாள் சுகாதார அலுவலரும், பொதுச் சுகாதார வல்லுநர் குழுவின் உறுப்பினருமான மருத்துவர் குகானந்தம்.

குகானந்தம், ஜி.ஆர்.ரவீந்திரநாத்
குகானந்தம், ஜி.ஆர்.ரவீந்திரநாத்

“கொரோனா நிவாரண நிதியாக ரூ. 6 லட்சம் வழங்கப்படும் என்று தொடக்கத்தில் அமித் ஷா அறிவித்தார்; பிறகு அந்த அறிவிப்பை வாபஸ் வாங்கிவிட்டார். இப்போது ரூ. 50,000 வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இது மிகவும் குறைவு. குறைந்தபட்சம் ரூ. 3 லட்சமாவது வழங்க வேண்டும். கொரோனாவால் தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளின் சமூக-பொருளாதாரப் பாதுகாப்பினை அரசு உறுதிசெய்ய வேண்டும்; அரசு வேலையில் இருக்கும் கணவன் அல்லது மனைவி கொரோனாவால் உயிரிழந்திருந்தால், மற்றொருவருக்கு அரசு வேலையை உறுதி செய்ய வேண்டும். இதுபோன்ற சுகாதாரப் பேரிடர்களுக்கு நிவாரணமாக பட்ஜெட்டில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்கிறார் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்.

இந்தியாவில் கொரோனாவுக்குப் பலியானவர்களில் பெரும்பான்மையானோர் நடுத்தர வர்க்கத்தினர்; மத்திய வயதினர். இவர்கள் வருமானத்தைச் சார்ந்தே இயங்கிவந்த குடும்பங்கள் இன்று நிர்க்கதியாக நிற்கின்றன. கொரோனா பொது முடக்கம் கொண்டுவந்த வேலையிழப்புகள், பொருளாதாரப் பின்னடைவுகளுக்கு மத்தியில், குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கும் சோகத்துக்கு நாட்டில் பலரும் ஆட்பட்டிருக்கின்றனர். இந்த நிலைமையில் ரூ. 50,000 என்பது மிகக் குறைவான தொகையே. பல குடும்பங்களில் பேரிழப்பை இது ஈடுசெய்யாது என்றாலும், இப்படி ஒரு முன்முயற்சியை பெருந்தொற்றுக் காலத்தில் நீதிமன்றம் எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு