Published:Updated:

சொகுசுக் கப்பல் சுற்றுலா... ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை... என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

சொகுசுக் கப்பல்
பிரீமியம் ஸ்டோரி
சொகுசுக் கப்பல்

இந்த விவகாரத்தில் எந்தச் சிக்கலும் இல்லை. ஏற்கெனவே மும்பையிலிருந்து கோவாவுக்கு, கேரளாவுக்கு என வெற்றிகரமாக இந்தக் கப்பல் போக்குவரத்து செயல்பட்டுவருகிறது.

சொகுசுக் கப்பல் சுற்றுலா... ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை... என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

இந்த விவகாரத்தில் எந்தச் சிக்கலும் இல்லை. ஏற்கெனவே மும்பையிலிருந்து கோவாவுக்கு, கேரளாவுக்கு என வெற்றிகரமாக இந்தக் கப்பல் போக்குவரத்து செயல்பட்டுவருகிறது.

Published:Updated:
சொகுசுக் கப்பல்
பிரீமியம் ஸ்டோரி
சொகுசுக் கப்பல்

சென்னை துறைமுகத்திலிருந்து புதுச்சேரிக்குத் தமிழக முதல்வரால் தொடங்கிவைக்கப்பட்ட பயணிகள் சொகுசுக் கப்பல் சேவைக்கு ஆரம்பத்திலேயே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ``தமிழ்நாடு அரசு இது குறித்து எங்களிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. நாங்கள் அனுமதி கொடுக்கப்போவதுமில்லை’’ என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்திருப்பதும், புதுச்சேரியில் கப்பல் வந்து நிற்க பலர் எதிர்ப்பு தெரிவித்திருப்பதும் இந்த விவகாரத்தைச் சூடாக்கியிருக்கின்றன.

சொகுசுக் கப்பல் சுற்றுலா... ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை... என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

‘கோர்டிலியா குரூஸ்’ (Cordelia Cruise) என்ற தனியார் நிறுவனத்தின் மூலம், சென்னையிலிருந்து விசாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் ஆழ்கடல் பகுதிகளுக்கு சொகுசுக் கப்பலில் பயணிக்கும் வகையிலான திட்டத்தின் தொடக்கவிழா சென்னை துறைமுகத்தில் கடந்த 4-ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சொகுசுக் கப்பல் சுற்றுலா சேவைத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். சுமார் 700 அடி நீளம்கொண்ட இந்தக் கப்பல், 11 தளங்களைக்கொண்டது. ஒரே நேரத்தில் 1,950 பயணிகள் உட்பட 2,500 பேர் வரை பயணிக்க முடியும். இதில் மொத்தம் 796 அறைகள் உள்ளன. இது தவிர கலையரங்கம், நான்கு பெரிய உணவகங்கள், மதுக்கூடம், உடற்பயிற்சி மையம், ஸ்பா, மசாஜ் நிலையம், நீச்சல்குளம், கேசினோ, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி எனப் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்திருக்கின்றன. மேலும், கப்பலில் விருந்துக் கொண்டாட்டங்கள், திருமணங்கள், அலுவல் கூட்டங்கள் நடத்தவும் அனுமதி வழங்கப்படும் எனக் கப்பல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையிலிருந்து புதுச்சேரிக்குச் சென்று மீண்டும் சென்னை வரும் இரண்டு நாள் சுற்றுலா திட்டமும், சென்னையிலிருந்து விசாகப்பட்டினம் சென்று, அங்கிருந்து புதுச்சேரி வழியாக மீண்டும் சென்னை திரும்பும் வகையில் ஐந்து நாள் திட்டம் உள்ளிட்ட ஐந்து வகையான திட்டங்கள் இந்தச் சொகுசுக் கப்பலில் உள்ளன. உணவு மற்றும் தங்குமிடத்தோடு இரண்டு நாள் சுற்றுலாத் திட்டத்துக்குக் குறைந்தபட்சம் இரண்டு நபர்களுக்கு ரூ.40,000, அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சொகுசுக் கப்பல் சுற்றுலா... ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை... என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

``தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கும், புதிய பல்வகை சுற்றுலா தமிழ்நாட்டில் உருவாகுவதற்கும் இந்த சொகுசுக் கப்பல் நிச்சயம் உதவும்” என நம்பிக்கை தெரிவித்திருந்தார் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன். ஆனால், ``புதுச்சேரி அரசுக்கு இது தொடர்பாக எந்தத் தகவலும் வரவில்லை. இது தொடர்பான கோப்புகளும் வரவில்லை. அப்படியே அந்தக் கப்பல் புதுச்சேரிக்கு வந்தாலும், கலாசாரச் சீர்கேடு தொடர்பான எந்த நடவடிக்கையையும் புதுச்சேரி அரசு அனுமதிக்காது” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கருத்து தெரிவிக்க, இந்தக் கப்பல் போக்குவரத்து செயல்படுமா, இல்லையா என்பது உட்பட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

முதலில் இந்தத் திட்டத்தை எதிர்ப்பது ஏன் என்பது குறித்து, தமிழிசையிடம் பேசினோம். ``அந்தக் கப்பலில் பார், கேசினோ உள்ளிட்ட கலாசாரத்தைச் சீரழிக்கும் பல விஷயங்கள் இருப்பதாகக் கேள்விப்படுகிறோம். தவிர, கப்பலின் கட்டணமும் மிக அதிகமாகச் சொன்னார்கள். கொள்கைரீதியாகவே இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவரைக்கும் எந்த அனுமதியும் கொடுக்கவில்லை. ஆனால், புதுச்சேரி கடற்பரப்பில் இருக்கும்போது கேசினோ ஆக்டிவிட்டீஸ் இருக்காது, நிறுத்திவிடுவோம் எனச் சொல்கிறார்கள். கோப்புகள் எனக்கு இன்னும் வரவில்லை. முழுமையான விவரங்களைப் பார்த்த பிறகே எதுவும் சொல்ல முடியும். மேலும், நாங்களே புதுச்சேரியின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த கப்பல் போக்குவரத்தைத் தொடங்கலாம் என்கிற யோசனையில் இருக்கிறோம். நம் கலாசார உணவுகள் பரிமாறி, ஆடல், பாடல் என நம் பாரம்பர்யத்தைப் பிரதிபலிக்கும் வகையில்தான் திட்டமிட்டுவருகிறோம்’’ என்றார்.

அன்பழகன்
அன்பழகன்
மதிவேந்தன்
மதிவேந்தன்

இந்த விவகாரத்தில், தமிழிசையின் கருத்தை வரவேற்றதோடு, ``தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் புதுச்சேரி மாநில விவகாரங்களுக்குள் தலையிடுகிறார்” என்கிற குற்றச்சாட்டை முன்வைக்கிறார், புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன். அவர் பேசும்போது, ``தமிழ்நாட்டு மக்களுக்காகச் செய்ய பல வேலைகள் இருந்தும், ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் சூதாட்ட கிளப் கப்பலை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். அந்த விழாவில், ‘இந்தக் கப்பல் புதுச்சேரியில் வந்து நிற்கும்’ என்கிறார். புதுச்சேரி அரசிடம் எந்த அனுமதியும் வாங்காமல் எப்படி அவர் இப்படியோர் அறிவிப்பை வெளியிட முடியும்... இது எங்கள் மாநில அதிகாரத்தில் தலையிடுவதற்கு ஒப்பான விஷயம். சூதாட்டக் கப்பலாக இருந்தால், நிச்சயமாக அதை இங்கே நிற்க அனுமதியளிக்கக் கூடாது என்பதே எங்களின் கருத்து’’ என்றார் அவர்.

சொகுசுக் கப்பல் சுற்றுலா... ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை... என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

இந்த விவகாரம் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம் பேசினோம். ``இந்த விவகாரத்தில் எந்தச் சிக்கலும் இல்லை. ஏற்கெனவே மும்பையிலிருந்து கோவாவுக்கு, கேரளாவுக்கு என வெற்றிகரமாக இந்தக் கப்பல் போக்குவரத்து செயல்பட்டுவருகிறது. பொதுவாகவே, சர்வதேச நீர்ப்பரப்பில்தான் கேசினோ, பார் போன்ற விஷயங்களுக்கு அனுமதி உண்டு. மாநில நீர்ப்பரப்பில் அனுமதி இல்லை. அதனால், இந்த விஷயத்தில் அச்சப்பட எதுவுமில்லை. விசாகப்பட்டினத்திலும் கப்பல் செல்ல எந்தப் பிரச்னையுமில்லை. தமிழிசை அவர்களும் இதைப் புரிந்துகொண்டு ஆதரவளித்தால் வெற்றிகரமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். மக்கள் மத்தியில் இதற்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது’’ என்றார் அவர்.

சொகுசுக் கப்பலைவிடப் பெரிதாக இருக்கின்றன அதைச் சுற்றிய சர்ச்சைகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism