Published:Updated:

முடக்கப்படுகிறதா திருமண உதவித் திட்டம்?

முடக்கப்படுகிறதா திருமண உதவித் திட்டம்?
பிரீமியம் ஸ்டோரி
முடக்கப்படுகிறதா திருமண உதவித் திட்டம்?

ஜெயலலிதா நிர்வாகத்தில் இருந்த காலம்வரை இந்தத் திட்டம் சிறப்பாகவே செயல்பட்டது. ஆண்டுக்கு ஒரு லட்சம் பெண்கள் தேர்வுசெய்யப்பட்டு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

முடக்கப்படுகிறதா திருமண உதவித் திட்டம்?

ஜெயலலிதா நிர்வாகத்தில் இருந்த காலம்வரை இந்தத் திட்டம் சிறப்பாகவே செயல்பட்டது. ஆண்டுக்கு ஒரு லட்சம் பெண்கள் தேர்வுசெய்யப்பட்டு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

Published:Updated:
முடக்கப்படுகிறதா திருமண உதவித் திட்டம்?
பிரீமியம் ஸ்டோரி
முடக்கப்படுகிறதா திருமண உதவித் திட்டம்?

`பெண்களின் படிப்பில் சமூகம் அக்கறை காட்டாத காலகட்டத்தில், 8-ம் வகுப்பு வரை படித்த பெண்களின் திருமணத்துக்கு 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார் கருணாநிதி. இந்தத் திட்டத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற விவாதம் வந்தபோது, கருணாநிதி இறுதி செய்தது, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பெயரை. இந்தத் திட்டம் ஏராளமான பெண்களைப் பள்ளிக்கூடத்துக்குக் கொண்டு வந்தது. 1996-ல் ஊக்கத்தொகை 10,000-மாக உயர்த்தப்பட்டது. 2002-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா இந்தத் திட்டத்தை முடக்கினார். 2006-ல் முதல்வரான கருணாநிதி மீண்டும் அதை உயிர்ப்பித்து ஊக்கத்தொகையை 15,000-மாக உயர்த்தினார். பிறகு இலங்கை அகதிகளையும் உள்ளடக்கி 25,000-மாக இந்தத் தொகை உயர்த்தப்பட்டது.

முடக்கப்படுகிறதா திருமண உதவித் திட்டம்?

2011-ல் முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா, 10-ம் வகுப்புவரை படித்த பெண்களுக்கு 25,000, பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு 50,000 ஊக்கத்தொகையோடு 4 கிராம் தங்கமும் சேர்த்து வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்பிறகு இந்தத் திட்டத்தின் பெயர் `தாலிக்குத் தங்கம் திட்டம்' என்று மருவியது. இந்தத் திட்டத்துக்குப் பெரும் வரவேற்புக் கிடைத்தது. பல சமூகங்களில் தாலியோடு சேர்த்து குண்டு உள்ளிட்ட வேறு சில அணிகலன்களையும் அணிவது மரபு என்று சுட்டிக்காட்டப்பட்டதால் 2016-ல் தங்கத்தின் அளவை 8 கிராமாக மாற்றினார் ஜெயலலிதா. இதற்கென அரசே நேரடியாகத் தங்கம் கொள்முதல் செய்தது.

ஜெயலலிதா நிர்வாகத்தில் இருந்த காலம்வரை இந்தத் திட்டம் சிறப்பாகவே செயல்பட்டது. ஆண்டுக்கு ஒரு லட்சம் பெண்கள் தேர்வுசெய்யப்பட்டு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ஜெயலலிதாவுக்குப் பிறகு பொறுப்புக்கு வந்த பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் இதில் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை. நிதி நெருக்கடியும் சேர்ந்துகொள்ள விண்ணப்பங்கள் குவிந்தன. இப்போதுவரை 3.35 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் இருக்கின்றன.

முடக்கப்படுகிறதா திருமண உதவித் திட்டம்?

சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு திருமண உதவித்திட்டம், கணவனை இழந்த பெண்களுக்கு டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், கணவனை இழந்த பெண்களின் பெண் பிள்ளைகளுக்கு ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், ஆதரவற்ற பெண்களுக்கு அன்னை தெரசா நினைவு திருமண உதவித் திட்டம் போன்ற திட்டங்களும் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கின்றன. கடந்த ஜனவரியில், புதிதாகப் பொறுப்பேற்ற ஸ்டாலின் அரசு, இந்தத் திட்டங்களுக்கு 762 கோடி ரூபாய் ஒதுக்கி சற்று உயிரூட்டியது.

இந்தச் சூழலில், தற்போதைய பட்ஜெட்டில் மூவலூர் இராமாமிர்தம் திருமண உதவித்திட்டம் பெண்களின் உயர்கல்வி உறுதித்திட்டமாக மாற்றப்படுவதாக அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

இத்திட்டத்தில் 6 முதல் +2 வரை அரசுப்பள்ளியில் படித்துப் பட்டப்படிப்பில் சேரும் பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். ஆண்டுக்கு 6 லட்சம் மாணவிகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்கென 698 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

முடக்கப்படுகிறதா திருமண உதவித் திட்டம்?

ஒரு பக்கம் இந்த அறிவிப்பு வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசுப்பள்ளிகளின் மீது மக்களின் கவனம் குவிய இந்தத் திட்டம் உதவும் என்கிறார்கள். இன்னொரு பக்கம், எளிய மக்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்த திருமண உதவித் திட்டத்தைச் சுருக்குவது சரியல்ல என்ற குரலும் ஒலிக்கிறது. மூவலூர் இராமாமிர்தம் திருமண உதவித் திட்டமும் பெண்களின் கல்வி மேம்பாட்டை இலக்கு வைத்துத் தொடங்கப்பட்டதுதான். கருணாநிதியும் ஜெயலலிதாவும் காலத்துக்கேற்றவாறு அதை மேம்படுத்தினார்கள். அந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு கல்விக்கூடங்களுக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. குறிப்பாக எளிய குடும்பத்துப் பெண்கள் கல்லூரிகளைத் தொட்டார்கள். ஆனால் கடந்த நான்காண்டுகளில் திருமண உதவிகோரி விண்ணப்பித்தவர்களில் 20% பேருக்குக்கூடப் பயன் கிடைக்கவில்லை. அந்த இடரைக் களைந்து தகுதியான அனைவருக்கும் உதவி கிடைக்கச் செய்ய வேண்டிய அரசு, மொத்தமாக அந்தத் திட்டத்தையே மூடுவது சரியல்ல என்கிறார்கள் இந்த அறிவிப்பை விமர்சிப்பவர்கள்.

`` `எப்படியாவது ஒரு டிகிரி முடிச்சிரு... அம்பதாயிரமும் தங்கமும் கிடைச்சிரும்'கிறது கிராமங்கள்ல எல்லா வீடுகளிலும் ஒலிக்கிற வார்த்தை. அதுக்காகவே பெரும்பாலும் பெண்கள் கல்லூரிக்குச் சென்றார்கள். டிகிரி வாங்கிவிட்டால் கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. இந்தக் கல்வி உறுதியளிப்புத் திட்டம் மூலம் இளநிலைப் பட்டம் பெறுகிறவருக்கு 36,000 ரூபாய்தான் கிடைக்கும். உயர்கல்வி செல்லும் பெண்களின் எண்ணிக்கையை உயர்த்துவதுதான் இரண்டு திட்டங்களின் நோக்கமும். ஆனால் கல்வி உறுதியளிப்புத் திட்டம் இதுவரை கிடைத்துவந்த பலன்களைக் குறைக்கிறது. இதுவரை ஆட்சியில் இருந்தவர்கள் இந்தத் திட்டத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்குக் கொண்டு வந்தார்கள். தற்போதைய அரசு முழுமையாகக் கைவிடுகிறது. கொரோனா ஊரடங்கால் பலர் வேலையிழந்துள்ளார்கள். தொழில்கள் நசிந்துள்ளன. இந்தச் சூழலில் திருமண உதவித் திட்டத்தைக் கைவிடுவது சரியல்ல...’’ என்கிறார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் கலைச்செல்வி.

முடக்கப்படுகிறதா திருமண உதவித் திட்டம்?

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திட்டம் தவிர, மற்ற நான்கு திருமண உதவித் திட்டங்களும் எப்போதும்போல நடைமுறையில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆயினும் அவையனைத்தும் சிறப்புத் திட்டங்கள். குறிப்பிட்ட பிரிவினரே பயன்பெறமுடியும். ஜாதி, மத வேறுபாடின்றி எல்லாத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் இருந்தது இந்தத் திட்டம்தான். அதை மாற்றியிருப்பதுதான் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

``மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திட்டத்தில் அம்மா ரொம்பவே ஆர்வமாக இருந்தார். அடிக்கடி அத்திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்வார். தங்கம் கொள்முதல் செய்யும்போது நேரடியாக அவரே தரத்தைப் பரிசோதிப்பார். ஏதேனும் புகார்கள் வந்தால் கடுமையாகக் கோபப்படுவார். அந்த அளவுக்கு அந்தத் திட்டத்தில் ஈடுபாட்டோடு இருந்தார். நேரடியாக பெண்களைச் சென்றடையும் அந்தத் திட்டத்தை மாற்றியிருப்பது வருத்தமளிக்கிறது. ஜெயலலிதா ஆர்வமாகச் செயல்படுத்திய திட்டம் என்பதற்காகவே இதை மாற்றியிருக்கிறார்கள்...’’ என்கிறார், ஜெயலலிதா அமைச்சரவையில் சமூகநலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதி.

தமிழக அரசின் நிதிநிலை மிகவும் மோசமாகவே இருக்கிறது. இன்னொரு பக்கம் தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே போகிறது. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தை மாற்றியதற்கு இதுவும் முக்கிய காரணம் என்கிறார்கள்.

``அரசுப்பள்ளியில் படித்த மாணவிகளுக்கு இப்படியொரு திட்டம் கொண்டு வருவது நல்ல விஷயம்தான். பட்டம் படிக்கும் பெண்களின் எண்ணிக்கை நிச்சயம் உயரும். அவர்களின் சமூகநிலை உயர்வதோடு, இளவயதுத் திருமணங்களும் தடுக்கப்படும். ஆனால், இந்தத் திட்டம் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு மட்டுமே என்பது நியாயமல்ல. அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பல ஆயிரம் ஏழைப் பிள்ளைகள் படித்துக் கொண்டி ருக்கிறார்கள். அவர்களையும் இந்தத் திட்டத்தில் இணைக்கவேண்டும்.

தாலிக்குத் தங்கம் திட்டம் லட்சக்கணக்கான குடும்பங்களின் நம்பிக்கையாக இருந்தது. அதை உடனடியாகக் கைவிடுவது மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திவிடும். விண்ணப்பித்துள்ளவர்களுக்கு மட்டுமன்றி, இதுவரை விண்ணப்பிக்காத, தகுதியுள்ள பெண்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட கால வரையறை வைத்து ஊக்கத்தொகையையும் தங்கத்தையும் வழங்கவேண்டும்...’’ என்கிறார், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

முடக்கப்படுகிறதா திருமண உதவித் திட்டம்?

இதுதொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்து சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ‘சமூகநீதி, பெண் கல்வி, வெளிப்படைத்தன்மை அடிப்படையிலேயே மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்திட்டம் மாற்றப்பட்ட’தாகத் தெரிவித்திருக்கிறார். ‘திருமணம் என்ற தகுதிக்கு முன் கல்வி என்ற நிரந்தரச் சொத்து வேண்டும்’ என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். ஆனாலும் சில கேள்விகளை முன்வைக்க வேண்டியுள்ளது. பெரும்பாலும் தேர்தல் வாக்குறுதிகளை நம்பியே மக்கள் வாக்களிக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதம்தோறும் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவோம் என்ற வாக்குறுதி நிதிநிலையைக் காரணம் காட்டி கிடப்பில் போடப்பட்டுள்ளது. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திட்டம் உட்பட அனைத்துத் திருமண உதவித்திட்டங்களிலும் 10-ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கான ஊக்கத்தொகை 25,000-த்திலிருந்து 30,000-மாகவும், பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கான ஊக்கத்தொகை 50,000-த்திலிருந்து 60,000-மாகவும் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இரண்டு நிதிநிலை அறிக்கைகள் வந்தபிறகும் ஊக்கத்தொகை உயர்த்தப்படவில்லை. இப்போது மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்திட்டம் கைவிடப்பட்டுள்ளது. ஏன் இந்தத் தடுமாற்றம்?

இதுநாள்வரை விண்ணப்பித்து என்றேனும் தங்கமும் ஊக்கத்தொகையும் கிடைக்கும் என்று காத்திருக்கிற 3.35 லட்சம் பேருக்கு அரசு சொல்லப்போகும் பதில் என்ன? தற்போது அரசு அறிவித்துள்ள மாதம் 1,000 ரூபாய் திட்டம், இளநிலைப் படிப்புகளுக்கு மட்டும் பொருந்துமா? தொடர்ந்து முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்புகளுக்கும் வழங்கப்படுமா?

தமிழக அரசு தெளிவாக விளக்க வேண்டும்!

*****

முடங்கிப்போன தாலிக்குத் தங்கம்?

2018 முதல் நாமக்கல் மாவட்டத்தில் 6,171 பேர் தாலிக்குத் தங்கம் திட்டத்துக்கு விண்ணப்பித்துக் காத்திருக்கிறார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் 2018-ல் விண்ணப்பித்த 9,500 பெண்களில் 3,500 பேருக்கு மட்டுமே கிடைத்தது. 2019 முதல் இப்போதுவரை 8,460 பேர் விண்ணப்பித்துள்ளனர். குமரி மாவட்டத்தில் 3,860 பேர், புதுக்கோட்டை மாவட்டத்தில் 13,809 பேர், சேலம் மாவட்டத்தில் 32,472 பேர், திருச்சி மாவட்டத்தில் 6,459 பேர், கரூர் மாவட்டத்தில் 2,585 பேர், விழுப்புரம் மாவட்டத்தில் 17,540 பேர், திருவாரூர் மாவட்டத்தில் 6,382 பேர் விண்ணப்பித்துவிட்டுக் காத்திருக்கிறார்கள்.
விகடன் டீம்