Published:Updated:

உச்சத்தில் கனிம வளக் கடத்தல்... மௌனம் கலைப்பாரா துரைமுருகன்?

கனிம வளக் கடத்தல்.
பிரீமியம் ஸ்டோரி
கனிம வளக் கடத்தல்.

கனிமங்களைக் கொண்டு செல்ல சாதாரண லாரி முதல் 22 டயர் கொண்ட ராட்சத லாரிகள் வரை பயன்படுத்தப்படுகின்றன.

உச்சத்தில் கனிம வளக் கடத்தல்... மௌனம் கலைப்பாரா துரைமுருகன்?

கனிமங்களைக் கொண்டு செல்ல சாதாரண லாரி முதல் 22 டயர் கொண்ட ராட்சத லாரிகள் வரை பயன்படுத்தப்படுகின்றன.

Published:Updated:
கனிம வளக் கடத்தல்.
பிரீமியம் ஸ்டோரி
கனிம வளக் கடத்தல்.

450 கி.மீ தொலைவுக்கு மேற்குத் தொடர்ச்சி மலைகள் நீண்டு பரவியிருக்கும் கேரளாவில், சிறு பாறையை உடைப்பதற்கே அங்கிருப்பவர்கள் அஞ்சுகிறார்கள். ஆனால், தமிழகத்திலிருந்து நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமான லாரிகளில் ஜல்லிக்கற்கள், பாறாங்கற்கள் எனக் கனிமங்கள் தடையின்றி கேரளாவுக்குக் கடத்தப்படுகின்றன. திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை ஆகிய மாவட்ட எல்லைப் பகுதிகளில் நடந்துவரும் இந்தக் கனிம வளக் கொள்ளை குறித்து அறிய களத்தில் இறங்கினோம்...

உச்சத்தில் கனிம வளக் கடத்தல்... மௌனம் கலைப்பாரா துரைமுருகன்?
உச்சத்தில் கனிம வளக் கடத்தல்... மௌனம் கலைப்பாரா துரைமுருகன்?

திருநெல்வேலி திருட்டு... கொள்ளைபோகும் கனிம வளம்!

நெல்லை மாவட்டத்தில் 55 குவாரிகளும், 46 எம்.சாண்ட் ஆலைகளும், தென்காசி மாவட்டத்தில் 23 குவாரிகளும் செயல்படுகின்றன. இங்கே எடுக்கப்படும் கனிமத்தில் பாதிக்கும் மேல் கேரளாவுக்கே கடத்தப்படுகிறது. இது குறித்து நம்மிடம் பேசிய கனிம வளத்துறை அதிகாரிகள் சிலர், ‘‘தமிழகத்தைவிட கேரளாவில் அதிகமான எண்ணிக்கையில் மலைகளும் ஆறுகளும் இருந்தபோதிலும், மலையை உடைத்து செயற்கை மணலான எம்.சாண்ட் தயாரிக்க அந்த மாநில அரசு அனுமதிப்பதில்லை. அதனால், இங்கிருப்பதைவிட மூன்று மடங்கு கூடுதல் விலைக்கு கேரளாவில் கனிமங்கள் விற்பனையாவதால், தமிழகத்திலிருந்து பல தடைகளைத் தாண்டி கேரளாவுக்குக் கனிமங்கள் கடத்தப்படுகின்றன” என்றனர்.

கனிமக் கடத்தலுக்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் முன்னாள் எம்.எல்.ஏ ரவி அருணன் நம்மிடம் பேசுகையில், “கனிமங்களைக் கொண்டு செல்ல சாதாரண லாரி முதல் 22 டயர் கொண்ட ராட்சத லாரிகள் வரை பயன்படுத்தப்படுகின்றன. அனுமதிக்கப்பட்டதைவிடவும் இரு மடங்கு பாரம் ஏற்றப்படுவதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்கவேண்டிய செக் போஸ்ட் பணியாளர்கள் ஆயிரம், இரண்டாயிரம் என லஞ்சம் வாங்கிக்கொண்டு விட்டுவிடுகிறார்கள். அதிக பாரத்துடன் செல்லும் லாரிகளால், தமிழகச் சாலைகள் சேதமடைகின்றன. நம்முடைய அதிகாரிகள் கனிமக் கடத்தலையும் தடுப்பதில்லை, அங்கிருந்து இறைச்சி, பிளாஸ்டிக், மருத்துவக்கழிவுகளைக் கொண்டுவந்து இங்கே கொட்டுவதையும் தடுப்பதில்லை” என்று வருத்தப்பட்டார்.

உச்சத்தில் கனிம வளக் கடத்தல்... மௌனம் கலைப்பாரா துரைமுருகன்?
உச்சத்தில் கனிம வளக் கடத்தல்... மௌனம் கலைப்பாரா துரைமுருகன்?

ஒரே நாளில் 318 லாரிகள்... பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயிகள்!

தென்காசி மாவட்டம், புளியரை செக் போஸ்ட்டில் நாம் ஒரு நாள் முழுவதும் காத்திருந்து கண்காணித்தோம். அப்போது 318 லாரிகள் கேரளாவுக்குச் சென்றன. இதே வேகத்தில் கற்கள் கடத்தப்பட்டால், இங்கே மாதத்துக்கு ஒரு மலையே மாயமாகிவிடும்போல் தோன்றியது.

இது குறித்து சமூக ஆர்வலரான ஜமீன் கூறுகையில், “கேரளாவுக்குள் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மட்டுமே கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலோ இது போன்று எந்தத் தடையும் கிடையாது. எந்த விதியும் இங்கே பின்பற்றப்படாமல் குவாரிகளில் சக்திவாய்ந்த வெடிகளை வெடிக்கவைப்பதால், அருகிலிருக்கும் குடியிருப்புகளிலுள்ள வீடுகளில் விரிசல் விழுந்து மக்கள் உயிருக்கு அஞ்சி வாழ்கிறார்கள். விவசாயக் கிணறுகள் 40 அடி ஆழம் மட்டுமே இருக்கும் நிலையில், அருகிலேயே 300 அடி ஆழத்துக்கு பாறைகளை வெட்டி எடுப்பதால் கிணறுகள் வறண்டுபோய் விவசாயம் செய்ய முடியாத நிலைமை உருவாகிவிட்டது” என்று கொந்தளித்தார்.

ஜமீன்
ஜமீன்

‘கேரளத்தில் துறைமுகம் கட்ட குமரிமலையை வெட்டுகிறார்கள்!’

செப்டம்பர் 19, 2021-ல் கேரள துறைமுகத்துறை அமைச்சர் அகமது தேவர்கோவில், தமிழகத்துக்கு வந்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவைச் சந்தித்தார். அப்போது ‘கேரளாவின் விழிஞ்ஞம் துறைமுகப் பணிக்குத் தேவையான பாறைகளை குமரி மாவட்டத்திலிருந்து கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு பாறைகள், எம்.சாண்ட் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. அது கொள்ளை யாக மாறியிருப்பதுதான், இப்போது பிரச்னை.

கன்னியாகுமரி மாவட்டம் வழியே கேரளாவுக்குச் செல்வதற்கு 37 வழித்தடங்கள் இருப்பதால், இரவு பகலாக ராட்சத லாரிகளில் கருங்கல், ஜல்லி, எம்.சாண்ட் கொண்டு செல்லப் படுகின்றன. மக்கள் எதிர்ப்பு அதிகரிக்கும்போது கண்துடைப்புக்காக ஓரிரு லாரிகளுக்கு ‘ஓவர் லோடு’ அபராதம் விதிக்கின்றனர்.

உச்சத்தில் கனிம வளக் கடத்தல்... மௌனம் கலைப்பாரா துரைமுருகன்?
உச்சத்தில் கனிம வளக் கடத்தல்... மௌனம் கலைப்பாரா துரைமுருகன்?

இது பற்றி நம்மிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் பத்மநாபபுரம் தொகுதிச் செயலாள ரான சீலன், “கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் ஐந்து குவாரிகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அனுமதி இல்லாமல் மேலும் இரு குவாரிகள் செயல்படுகின்றன. விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு என பாஸ் வாங்கிக்கொண்டு கேரளா முழுவதும் கட்டுமானப் பணிகளுக்கு ஜல்லி, எம்.சாண்ட் சப்ளை செய்யப்படுகின்றன. அனுமதிச்சீட்டு இல்லாமலேயே நிறைய லாரிகள் செக்போஸ்ட் வழியாகப் போகின்றன. சித்திரங்கோடு பகுதியிலிருந்து மட்டும் நாளொன்றுக்கு 700-க்கும் அதிகமான லாரிகளில் நம் மலைகளை வெட்டியெடுத்து கேரளாவுக்குக் கொண்டு செல்கிறார்கள். தரைமட்டத்துக்குக் கீழ் உள்ள பாறைகளை உடைக்க அனுமதி பெற்றுவிட்டு, மலையை உடைக்கிறார்கள். இதே வேகத்தில் போனால், குமரி மாவட்டத்தில் மலையே இல்லாமல் போய்விடும்” என்றார் ஆதங்கத்துடன்.

கொள்ளைபோகும் கோவையின் இயற்கை வளம்!

கோவை மாவட்டத்தைச் சுற்றிலுமுள்ள மயிலேறிபாளையம், தேகானி, காரச்சேரி, பெரியகுயிலி, கள்ளப்பாளையம், பச்சாபாளையம், செட்டிப்பாளையம் எனப் பல்வேறு இடங்களிலும் புற்றீசல்போல கல்குவாரிகள் முளைத்துள்ளன. பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள் முதல் லோக்கல் தாதாக்கள் வரை இந்தத் தொழிலில் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள், “கோவை மாவட்டத்தில் 100 குவாரிகளுக்குத்தான் உரிமம் கொடுக்கப்பட்டி ருப்பதாக அரசு கூறுகிறது. ஆனால், அதைப்போல இரு மடங்கு குவாரிகள் உரிமம் இல்லாமல் இயங்குகின்றன. எந்தக் குவாரியிலும் அரசின் விதிகள் பின்பற்றப்படுவதில்லை. குவாரியில் ஒரு நாளில் எடுக்கும் கனிம அளவில் 30 சதவிகிதத்தை மட்டுமே கணக்கில் காட்டுவதால், அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. கொள்ளைக்கு ஏற்ப, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, உதிரிக் கட்சிகள், அதிகாரிகள் என்று மாமூலாக மட்டுமே ஒரு மாதத்துக்கு 5 கோடி ரூபாய் செல்கிறது” என்றார்கள்.

கோவை மாவட்டத்தில் வாளையாறு, வேளந்தாவளம், ஆனைக்கட்டி, பொள்ளாச்சியில் உள்ள கோபாலபுரம், மீனாட்சிபுரம் ஆகிய வழிகளில் இரவு 11 மணி முதல் அதிகாலை 4:30 மணி வரை கனிமங்கள் கடத்தப்படுகின்றன. வாளையாறு, வேளந்தாவளம் எல்லையில் அரசியல் செல்வாக்குகொண்டவர்களால் நியமிக்கப்பட்ட ஆட்கள், அச்சடிக்கப்பட்ட ஒரு காகிதத்தை லாரி ஓட்டுநரிடம் கொடுக்கிறார்கள். அந்தச் சீட்டைக் காட்டினால், செக் போஸ்ட்டுகளில் யாரும் கண்டுகொள்ளாமல் லாரியை அனுப்பிவைக்கிறார்கள். வாளையாரில் மட்டும் ஐந்து நிமிடங்களில் சராசரியாக எட்டு லாரிகள் வரை கேரளாவுக்குக் கனிமங்களைக் கொண்டுசெல்கின்றன. சில லாரிகள் ஒரே நாளில் இரண்டு ட்ரிப்கூட அடிக்கின்றன. 20 டன் ஏற்றவேண்டிய லாரிகளில், சட்டவிரோதமாக 60 டன் வரை ஏற்றிச் செல்கிறார்கள்.

உச்சத்தில் கனிம வளக் கடத்தல்... மௌனம் கலைப்பாரா துரைமுருகன்?

துறையை ஆட்டிப்படைக்கும் ‘சோழ அரசர்’... பதில் சொல்வாரா துரைமுருகன்?

தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, கனிமக் கொள்ளை அதிகரித்திருப்பதாகக் கூறுகிறது அதிகாரிகள் வட்டாரம். கனிம வளத்துறையின் உதவி இயக்குநர்கள் சிலரிடம் பேசினோம். “சோழ அரசர் பெயர் கொண்டவர்தான் இப்போது துறையில் ‘ஆல் இன் ஆலாக’ வலம் வருகிறார். துறை மேலிடத்துடன் இருக்கும் நெருக்கத்தால், கன்னியாகுமரியில் தொடங்கி திருவள்ளூர் வரை அவர் வைப்பதுதான் சட்டமென்றாகிவிட்டது. கேரளாவுக்குக் கடத்தப்படும் கனிமங்களில், ஒரு யூனிட்டுக்கு 300 ரூபாய் வசூலித்துவிடுகிறார் அவர். துறை மேலிடத்தின் பெயரில் நடக்கும் இந்த வசூலில், கோவையிலிருந்து மட்டுமே தினசரி சில லட்சங்கள் அவருக்குச் செல்கின்றன.

திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களி லிருந்து மாதம் 10 கோடி ரூபாய் மாமூல் கொட்டுகிறது. தினசரி ரூபாய் நோட்டு புழங்கும் தொழில் என்பதால், பணத்தைப் பதுக்கி வைப்பதற்கென சில பங்களாக்களை ஈ.சி.ஆரில் வாடகைக்கு எடுத்திருக்கிறார் ‘சோழ அரசர்.’ மேலிடத்தின் ஆசியுடன் நடக்கும் இந்தக் கனிமக் கொள்ளையில் பிரச்னை எழுந்தால், உதவி இயக்குநர்களை பலிகொடுத்து பிரச்னையை முடித்துவிடுவார்கள். சோழ அரசரோ, அவருடைய அடிப்பொடிகளோ மாட்டுவதில்லை. சமீபத்தில் தி.மு.க நிர்வாகிகள் சிலர் சட்டவிரோதமாகக் கனிமங்களை ஏற்றிச் சென்ற லாரிகளைத் தடுத்து நிறுத்தினர். இதைக் கேள்விப்பட்ட அந்த சோழ அரசர் பிரமுகர், அந்த நிர்வாகிகளை செல்போனில் தொடர்பு கொண்டு, ‘என்னய்யா... ஊருக்குள்ள லாரியை யெல்லாம் நிறுத்தி, ரவுடியிசம் பண்றீங்களா?’ என்று எச்சரித்துள்ளார். அதன் பிறகு யாருமே தலையிடுவதில்லை. அவருடைய ஆட்டத்தை ஆட்சி மேலிடம்தான் தட்டிவைக்க வேண்டும்” என்று நொந்துகொண்டனர்.

கேரளாவுக்கு, கனிமங்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவது தொடர்பாக விளக்கமறிய, கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகனைத் தொடர்புகொண்டோம். அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை. குறுந்தகவல் அனுப்பியும், இந்தச் செய்தி அச்சுக்குச் செல்லும் வரை அவரிடமிருந்து பதிலில்லை.

இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

உச்சத்தில் கனிம வளக் கடத்தல்... மௌனம் கலைப்பாரா துரைமுருகன்?

“புளியரை செக்போஸ்ட்டில் கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதிக பாரம் ஏற்றிச் செல்வதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறோம். கேரளாவிலிருந்து கழிவுகள் ஏற்றிவரும் லாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” - ஆகாஷ், தென்காசி மாவட்ட ஆட்சியர்

உச்சத்தில் கனிம வளக் கடத்தல்... மௌனம் கலைப்பாரா துரைமுருகன்?

“அனுமதியில்லாமல் குவாரிகள் செயல்படுகின்றனவா என்பதையும், இரவு நேரங்களில் கனிமங்கள் கொண்டு செல்லப்படுவதையும் கண்காணிக்க உத்தரவிட்டிருக்கிறேன். குமரி மாவட்டத்தில் தரைமட்டத்துக்கு கீழேயுள்ள பாறைகளை மட்டுமல்லாமல், மலைகளையும் அனுமதி பெற்றே உடைக்கிறார்கள்.” - அரவிந்த், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்

உச்சத்தில் கனிம வளக் கடத்தல்... மௌனம் கலைப்பாரா துரைமுருகன்?

“சட்டவிரோத கனிம வளச் சுரண்டலைத் தடுக்க, தாலுகா அளவில் சிறப்பு டீம் போட்டிருக்கிறோம். காவல்துறையுடன் இணைந்து அவர்கள் அந்தந்தப் பகுதிகளில், இரவு நேரங்களில்கூட கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். தவறு செய்வது தெரியவரும்பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.” - சமீரன், கோவை மாவட்ட ஆட்சியர்