தொடர்கள்
சினிமா
Published:Updated:

முதல்வர்களை உருவாக்க இதுவா வழி?

நான் முதல்வன் திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
நான் முதல்வன் திட்டம்

வறுமை சூழ்ந்த குடும்பத்திலிருந்து செல்லும் ஒரு மாணவர், சம்பாதிக்கத் தொடங்கிய பிறகு படிப்பில் கவனம் செலுத்துவாரா? +2-வோடு பணிக்கு வருகிற அந்த மாணவனின் எதிர்காலத்துக்கு யார் பொறுப்பு?

ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களை படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்கும் நல்நோக்கோடு ‘நான் முதல்வன்' திட்டத்தை அறிவித்தார் முதல்வர். ‘இது என் கனவுத்திட்டம்' என்றும் சொன்னார். மிகவும் ஆக்கபூர்வமான திட்டமென கல்வியாளர்களும் இந்தத் திட்டத்தை வரவேற்றார்கள்.

இப்போது ‘நான் முதல்வன்' திட்டத்தின் அங்கமாக HCL Technologies நிறுவனத்துடன் இணைந்து ‘Early career program' ஒன்றை அறிவித்துள்ளது அரசு. +2வில் 60% மதிப்பெண்களோடு தேர்ச்சிபெறும் மாணவர்கள் HCL நிறுவனத்தில் இணைந்து பயிற்சி பெறலாம். பயிற்சியின்போது மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். பயிற்சி முடித்ததும் பணி வழங்கப்படும். தொடக்க நிலை ஊதியமாக ஆண்டுக்கு ரூ.1.7 லட்சம் முதல் 2.2 லட்சம் வரை தரப்படும். பணிபுரிந்துகொண்டே மாணவர்கள் படிக்கவும் முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வியில் தனியார் ஆதிக்கம் தலைதூக்கியுள்ள இந்தத் தருணத்திலும் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்னும் அரசுப் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். இவர்களில் பலர் கடும் வறுமையைக் கடந்து பள்ளிக்கூடம் வருபவர்கள். ஒவ்வோராண்டும் +2வில் அதிக மதிப்பெண் பெற்று தாங்கள் விரும்பிய படிப்பில் சேரமுடியாமல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தவிக்கிறார்கள். சில தன்னார்வ அமைப்புகளும் தனிநபர்களும் கொஞ்சம் பேரைக் கண்டுபிடித்து உதவுகிறார்கள். பலருக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.

முதல்வர்களை உருவாக்க இதுவா வழி?

இப்படிப்பட்டவர்களைக் கண்டுபிடித்து உயர்கல்விக்குப் பொறுப்பேற்று எதிர்காலத்தை வளப்படுத்துவதுதே ‘நான் முதல்வன்' திட்டத்தின் அடிப்படை. ஆனால், ‘Early career program' எளிய குடும்பத்துப் பிள்ளைகளின் வாழ்வை திசைமாற்றி 17 வயதிலேயே ஒரு தனியார் நிறுவன ஊழியர்களாக்குகிறது.

இந்தியாவில் ஒவ்வோராண்டும் லட்சக்கணக்கான பொறியாளர்கள் உருவாகிறார்கள். பெரும்பாலானோர் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதியோடு இருப்பதில்லை. அதனால் பல நிறுவனங்கள் +2 அளவிலேயே மாணவர்களைத் தேர்வுசெய்து தங்களுக்கேற்றவாறு அவர்களுக்குப் பயிற்சியளித்து வேலையில் அமர்த்திக் கொள்கின்றன. இதே HCL உட்பட பல நிறுவனங்கள் ஏற்கெனவே இதுமாதிரியான திட்டங்களைச் செயல்படுத்திவருகின்றன. பொறியியலோ, பட்டமோ படித்தவர்களுக்குத் தரும் சம்பளத்தைவிட இவர்களுக்குக் குறைவாகக் கொடுக்கலாம். விரும்பினால் அந்த மாணவர்கள் வேலை பார்த்துக்கொண்டே இணையவழியிலோ, தொலைநிலை முறையிலோ பட்டப்படிப்பில் சேரலாம். தேவையிருக்கும் இளைஞர்கள் இந்த நிறுவனங்களில் இணைவார்கள்.

ஆனால் மாணவர்களின் உயர்கல்விக்குப் பொறுப்பேற்க வேண்டிய அரசே இதைச் செய்யலாமா என்பதுதான் இப்போதுள்ள கேள்வி. வறுமை சூழ்ந்த குடும்பத்திலிருந்து செல்லும் ஒரு மாணவர், சம்பாதிக்கத் தொடங்கிய பிறகு படிப்பில் கவனம் செலுத்துவாரா? +2-வோடு பணிக்கு வருகிற அந்த மாணவனின் எதிர்காலத்துக்கு யார் பொறுப்பு?

‘‘உண்மையிலேயே ‘நான் முதல்வன்’ ஆகச்சிறந்த திட்டம். ஆனால், அத்திட்டத்தின் செயல்பாடுகளைப் பார்க்கிறபோது முதல்வரின் நோக்கத்தை அதிகாரிகள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது’’ என்கிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன்.

‘‘கல்வி என்பது வெறுமனே வேலை பெற உதவும் கருவியல்ல. அதற்கு வேறு பல நோக்கங்கள் உண்டு. ‘நான் முதல்வன்' திட்டமும் ‘ஸ்கில் டெவலப்மென்ட்' திட்டம் அல்ல. மாணவர்களின் உண்மையான திறமையை அறிந்து வளர்த்தெடுக்காமல் +2விலேயே அவர்களை ஒரு நிறுவனத்தின் ஊழியர்களாக உருவாக்குவது தவறான திட்டமிடல்.

ஏராளமான கல்வி வாய்ப்புகள் இங்கே இருக்கின்றன. அதுகுறித்தெல்லாம் இப்போதும் கிராமப்புற மாணவர்களுக்குத் தெரிவதேயில்லை. சென்னைக்குள் கார்ப்பரேஷன் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கே ஐஐடி பற்றித் தெரியவில்லை. ‘நான் முதல்வன்' திட்டம் மூலம் இதையெல்லாம் மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். மாணவர்கள் என்னவாக விரும்புகிறார்களோ, அப்படி ஆக்குவதுதான் இத்திட்டத்தின் வெற்றியாக இருக்கமுடியும். தற்போது உருவாக்கியுள்ள திட்டம், மாணவர்களை +2-வோடு கைவிடுகிறது.

அரசுப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் பெரும்பாலும் அமைப்புசாரா தொழிலாளர்களாத்தான் இருப்பார்கள். பிள்ளைகள்தான் அவர்களது பெரிய நம்பிக்கை. +2 முடித்தவுடன் ஏதோ ஒரு வேலை கிடைக்கிறது என்றால் குடும்பத்தினரே அதற்கு ஊக்கப்படுத்துவார்கள். திறமைசாலிகள் அந்தக் கட்டத்தோடு ஒரு நிறுவனத்தின் ஊழியர்களாக முடங்கிவிடுவார்கள். நன்றாகப் படித்து முதல் மதிப்பெண் வாங்கிய சில மாணவர்களை மளிகைக் கடைக்காரராகவோ, கூலித் தொழிலாளியாகவோ பார்க்கும்போது நமது மனதில் ஒரு வலி ஏற்படுமல்லவா, எதிர்காலத்தில் அப்படியான நிலையைத்தான் இந்தத் திட்டம் உருவாக்கும்.

தகவல் தொழில்நுட்பத்துறை மாறிக்கொண்டே இருக்கிறது. நாம் கல்லூரிக்காலங்களில் படித்த சாப்ட்வேர், கணினி மொழிகள் இப்போது பயனற்றுப்போய்விட்டன. +2வில் ஒரு மாணவனைத் தேர்வுசெய்யும் நிறுவனம் அவனுக்கு என்னமாதிரியான பயிற்சிகளைத் தரும் என்பது புரிந்துகொள்ளக்கூடியதுதான். நிறுவனத்துக்கு என்ன தேவையோ அதற்கேற்பவே அவர்களைத் தயாரிப்பார்கள். குறைந்தபட்ச சம்பளத்தில் அவர்களுக்கு ஊழியர்கள் கிடைத்துவிடுவார்கள்.

முதல்வர்களை உருவாக்க இதுவா வழி?

கல்விக்குத் தனியாகவும் வேலைக்குத் தனியாகவும் அரசு திட்டமிட வேண்டும். இரண்டையும் ஒன்றாக்கக்கூடாது. கார்ப்பரேட் நிறுவனங்கள் உண்மையாகவே சமூகநோக்கோடு மாணவர்களுக்கு உதவ நினைத்தால் அவர்களுக்கு கல்வி உதவித்தொகை தந்து உயர்கல்விக்கு உதவட்டும்’’ என்கிறார் நெடுஞ்செழியன்.

தேர்வு செய்யப்படும் மாணவர்கள் வேலை பார்த்துக்கொண்டே படிக்கும் வாய்ப்பும் இந்தத் திட்டத்தில் இருக்கிறது என்கிறார்கள். கல்வி என்பது, வெறும் பாடப்புத்தகங்களைப் படித்து சான்றிதழ் பெறுவது மட்டும் கிடையாது. பள்ளி, கல்லூரிகளில்தான் மாணவர்கள் பல்வேறுபட்ட சமூகப் பண்புகளைக் கற்றுக்கொள்கிறார்கள். அதற்கேற்பவே நம் கல்விக்கூட வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்துக்கான வலுவான அடித்தளமென்பது கல்லூரிகளில்தான் வடிவமைக்கப்படுகிறது.

‘‘ஐ.டி கம்பெனிகளுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி படித்த மாணவர்கள் மட்டுமே பொருத்தமானவர்கள். ஆனால் இன்று சிவில், மெக்கானிக்கல் படித்தவர்கள் எல்லாம் ஐ.டிக்கு வருகிறார்கள். அவர்கள், கோடிங் பற்றி எதுவுமே அறியாதவர்கள். வந்து பயிற்சி எடுத்துதான் கற்றுக்கொள்கிறார்கள். 3 லட்சம் பேர் வேலை செய்யும் இன்போசிஸ் போன்ற நிறுவனங்களில் 60 சதவிகிதத்துக்கு மேல் சிவில், மெக்கானிக்கல், ஏரோநாட்டிக்கல் படித்தவர்கள்தான். பி.காம் படித்தவர்கள்கூட சாப்ட்வேர் கம்பெனிகளில் கோடிங் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

+2வில் ஓரளவுக்கு கணிதம், கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் திறன் இருப்பவர்களை எடுத்து கோடிங் பயிற்சியளித்தால் தங்களுக்குத் தேவையான ஊழியர்கள் கிடைத்துவிடுவார்கள் என்று நிறுவனங்கள் நினைக்கின்றன. இன்ஜினீயரிங் படித்தவர்களுக்குத் தரும் சம்பளத்தைவிட, +2வில் எடுத்துப் பயிற்சியளிப்பவர்களுக்குக் குறைந்த சம்பளம் தரலாம். வேலை செய்துகொண்டே படிப்பவர்கள், குறைந்தது அந்தப்படிப்பு முடியும் நான்கு ஆண்டுக்காலம் வரை வேலையை விட்டுப் போக மாட்டார்கள். தங்களுக்கேயான பணித்திறன்களோடு நான்கு ஆண்டுக்காலம் பணியாற்றும் நிலையான ஒரு ஊழியர் குறைந்த சம்பளத்தில் கிடைப்பது நிறுவனத்துக்கு லாபம்’’ என்கிறார், பெயர் வெளியிட விரும்பாத மூத்த மனிதவள நிபுணர் ஒருவர்.

இதிலிருக்கும் இன்னொரு முக்கியப் பிரச்னையையும் சுட்டிக்காட்டுகிறார் அவர். ‘‘நிறுவனத்தின் சார்பில் வெளிநாட்டுப் பணிகளுக்குச் செல்லும்போது இவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதுதான். இப்போது அமெரிக்காவுக்குத்தான் அதிக அளவில் இங்கிருந்து செல்கிறோம். அந்நாட்டு விதிப்படி 12+4 வருடப் படிப்பு இருந்தால்தான் ஹெச்1பி விசா வழங்கப்படும். +2 முடித்துப் பணியில் சேர்பவர்களுக்கு இந்த வெளிநாட்டுப் பணி வாய்ப்பு பறிபோகலாம்’’ என்கிறார் அவர்.

இன்று உலகின் ஆகப்பெரிய நிறுவனங்களில் தலைமை வகித்துக்கொண்டிருக்கும் தமிழர்கள் பலரும் மெத்தப்படித்துத் தங்கள் பாதையை வடிவமைத்துக்கொண்டவர்கள். அவர்களை அந்தப் பொறுப்புகள் தேடிவந்து சூடிக்கொண்டன. வேலைக்கும் கல்விக்கும் வேறு வேறு பாதைகள் இருக்கின்றன. பிளஸ் டூ முடித்து ‘Early career program'-மில் இணைந்து பயிற்சியும் பணியும் பெறுகிற ஒரு மாணவனின் உலகம் அந்த வளாகத்தை விட்டு விரிவடைய வாய்ப்புகள் குறைவு என்பதே எல்லோரின் கவலை.

புதிய கல்விக்கொள்கை திறன்பற்றியே அதிகம் பேசுகிறது. 8-ம் வகுப்பு முதலே கல்வியோடு சேர்த்து தொழில் திறனையும் பயிற்றுவிக்க வகை செய்கிறது. பத்தாம் வகுப்பு முடிக்கும்போது மாணவனை குறிப்பிட்ட ஒரு தொழிலுக்கு முழுத்தகுதியுள்ளவன் ஆக்கிவிட வேண்டும் என்பதுதான் அதன் இலக்கு. புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கிற தமிழக அரசு, கல்லூரிக்குச் செல்லவேண்டிய மாணவர்களைத் தொழிலாளர்களாகவே மாற்ற நினைக்கிறது. பசியோடு சேர்த்து லட்சியங்களையும் சுமந்து கொண்டு, யாரேனும் உதவ மாட்டார்களா என்று தவித்துக்கொண்டிருக்கிற மாணவர்களைத் தாயுள்ளத்தோடு தாங்கிப்பிடித்து இன்னும் இன்னுமென உயரத்துக்குக் கொண்டு செல்லவேண்டும். முதல்வர்களை உருவாக்க அது ஒன்றுதான் வழி!