அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

டார்கெட்... டார்ச்சர்... தனியார்மயம்... டெல்லி முற்றுகைக்குத் தயாராகும் 3.5 லட்சம் அஞ்சல் ஊழியர்கள்!

அஞ்சல் ஊழியர்
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்சல் ஊழியர்

இந்தியா முழுவதும் 3.5 லட்சம் ஜி.டி.எஸ் ஊழியர்கள் இருக்கிறோம். அவர்களில், 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வர்கள்

`அரசு அதிகாரிகளின் கால்தடங்கள் பதியாத, வரைபடங்களிலும் கண்டுபிடிக்க முடியாத இந்திய கிராமங்கள் பலவற்றை இன்றளவும் இணைப்பது இந்திய அஞ்சல்துறை. காடுகள், மலைகள், கரடுமுரடான பாதைகள் என எல்லா இடர்களையும் கடந்து, சாலை வசதிகளே இல்லாத குக்கிராமங்களுக்கும்கூட அஞ்சல் அட்டையைச் சுமந்து செல்பவர்கள் கிராமப்புற அஞ்சல் ஊழியர்களே. ஆனால், ஆளும் அரசாங்கங்கள் இன்னும் தங்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்காமலும், பணிப் பாதுகாப்பு, ஊதிய உயர்வு, பென்ஷன் போன்றவற்றை வழங்காமலும் நாளுக்கு நாள் பணிச்சுமையை ஏற்றி, துளைத்தெடுத்து வருவதாகக் கண்ணீர் வடிக்கிறார்கள் ஜி.டி.எஸ் (Gramin Dak Sevak-GDS) எனப்படும் கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள்.

கடந்த செப்டம்பர் 28-ம் தேதி, தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து கிராமப்புற அஞ்சல் ஊழியர்களும் ஒன்றிணைந்து சென்னை, அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர். அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம், தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ``இது உரிமைப் பிரச்னை இல்லை. உயிர் பிரச்னை. உயிரைக் கொடுத்து பணிசெய்யும் அஞ்சல் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வோ, ஓய்வூதியமோ கொடுக்கப் பணமில்லாத மத்திய பா.ஜ.க அரசிடம், அம்பானிக்கும் அதானிக்கும் பல்லாயிரம் கோடி கடன் கொடுத்து உலகப் பணக்காரர்கள் ஆக்குவதற்கு மட்டும் பணம் இருக்கிறதா?” எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.

டார்கெட்... டார்ச்சர்... தனியார்மயம்... டெல்லி முற்றுகைக்குத் தயாராகும் 3.5 லட்சம் அஞ்சல் ஊழியர்கள்!

`டார்கெட்... டார்ச்சர்... பணிச்சுமை!’

இந்த நிலையில், கிராமப்புற அஞ்சல் ஊழியர்களின் பிரச்னைகள் குறித்து அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் மாநில உதவிச் செயலாளர் சாந்தமூர்த்தியிடம் பேசினோம்.

``இந்தியா முழுவதும் 3.5 லட்சம் ஜி.டி.எஸ் ஊழியர்கள் இருக்கிறோம். அவர்களில், 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வர்கள். போஸ்ட் ஆபீஸில் வேலை செய்வதால் எங்களைப் பலரும் அரசு ஊழியர்களாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்திய அஞ்சல்துறை எங்களை ED (Extra Department) என்ற பிரிவில் வகைப்படுத்தி, பல்லாண்டுகாலமாக தற்காலிகப் பணியாளர்களாகவே வைத்திருக்கிறது. இதனால், இலாகா ஊழியர்களுக்குக் கிடைக்கும் எந்தச் சலுகையும் எங்களுக்குக் கிடையாது. 12, 24, 36 வருட சர்வீஸ் அடிப்படையில் நியாயமாக வழங்கவேண்டிய பணி உயர்வு, சம்பள உயர்வுகூட கிடைக்காமல் வஞ்சிக்கப் படுகிறோம். உச்சபட்சமாக 60 வயதில் ஓய்வுபெறும் இலாகா ஊழியர்களுக்கு பென்ஷன் கொடுக்கிறார்கள், ஆனால் 65 வயதுவரை வேலை செய்யும் எங்களுக்கு பென்ஷன் கொடுக்காமல் சொற்ப தொகையுடன் வீட்டுக்கு அனுப்புகிறார்கள். வாழ்நாள் முழுக்க உழைத்தும் ஒரு பலனும் எங்களுக்குக் கிடைப்பதில்லை” என்றார் வேதனையுடன்.

மேலும், “பணி ஓய்வுக்குப் பிறகு முதியோர் உதவித்தொகையாவது பெறலாம் என்று நினைத்து விண்ணப்பித்தால்கூட, அரசு வேலையில் இருந்த அஞ்சல் ஊழியராகக் கருதி எங்கள் விண்ணப்பங்களை நிராகரித்து விடுகிறார்கள். இது ஒருபுறமிருக்க, போஸ்ட் டெலிவரி மட்டுமல்லாமல், அரசாங்கம் புதிதாகக் கொண்டுவரும் பிற திட்டங்களுக்கான பணிகளையும் எங்களிடமே திணிக்கிறார்கள். சேமிப்பு, இன்ஷூரன்ஸ் போன்ற திட்டங்களுக்கு தினமும் புதிது புதிதாக ஆட்களைப் பிடித்துத் தர வேண்டும் என டார்கெட் விதித்து டார்ச்சர் செய்கிறார்கள். ஒரே கிராமத்தில் எத்தனை பேரை எங்களால் திட்டங்களில் சேர்க்க முடியும்... ஒரு நாளுக்கு நான்கு மணி நேரம் என்பதே எங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட வேலை நேரம்; ஆனால், எட்டு மணி நேரம் தாண்டியும் நாங்கள் வேலை வாங்கப்படுகிறோம். ஆண்டுக்கு 20 நாள்கள் விடுமுறை எடுக்க உரிமை இருந்தும், கர்ப்பிணிகளைக்கூட அவசர விடுப்பு எடுக்க அனுமதிக்காமல் உயரதிகாரிகளும் அதிகாரப்போக்குடன் செயல்படுகிறார்கள்” எனப் பிரச்னைகளை அடுக்கினார்.

தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க மாநிலச் செயலாளர் எம்.முனுசாமியிடம் பேசினோம். ``இந்திய அஞ்சல்துறை வங்கி (India Post Payments Bank-(IPPB)) படிப்படியாகத் தனியார்மயமாக்கப்படுகிறது. அஞ்சல்துறையின் அடுத்தடுத்த துறைகளையும் தனியாரிடம் ஒப்படைக்கிற வேலைத்திட்டத்தில் மும்முரமாகச் செயல்பட்டுவருகிறது மத்திய அரசு. இதை முற்றிலும் கைவிட வேண்டும். பணிப் பாதுகாப்பு, ஊதிய உயர்வு, பென்ஷன் உள்ளிட்ட அனைத்துச் சலுகைகளையும் ஜி.டி.எஸ் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் போடப்பாட்ட கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைகளை தற்போதைய பா.ஜ.க அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். இல்லையென்றால், வரும் அக்டோபர் 19-ம் தேதி, தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.

சாந்தமூர்த்தி, எம்.முனுசாமி, சி.கே.சரஸ்வதி
சாந்தமூர்த்தி, எம்.முனுசாமி, சி.கே.சரஸ்வதி

`நிச்சயமாக நிறைவேற்றுவோம்!’

இந்தக் கோரிக்கைகள் குறித்து பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினரும், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ-வுமான சி.கே.சரஸ்வதியிடம் பேசியபோது, ``கிராமப்புற அஞ்சல்துறை ஊழியர்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு நிச்சயம் செவி சாய்க்கும். அவர்களின் பிரச்னையை முழுமையாக ஆராய்ந்து அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் கட்டாயம் செய்வோம். இந்த விவகாரத்தை மாநிலத் தலைமையின் மூலம், விரைவில் பிரதமர் மோடியின் கவனத்துக்குக் கொண்டு சென்று சாதகமான முடிவை அறிவிப்போம்” எனத் தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய துறை என்ற வரலாற்றுப் பழம்பெருமையை இந்திய அஞ்சல்துறை தாங்கி நிற்கிறது. அதிலும், நாட்டில் மொத்தமுள்ள 1,56,000 அஞ்சல் அலுவலகங்களில் 90 சதவிகிதம் கிராமப்புறங்களில்தான் இருக்கின்றன. அஞ்சல்துறையின் முதுகெலும்பாக விளங்கும் கிராமப்புற அஞ்சல் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்குமா?