அரசியல்
அலசல்
Published:Updated:

மழைநீர் வடிகால்... அரைவேக்காட்டு திட்டம்! - சென்னை ஸ்கேன் ரிப்போர்ட்...

மழைநீர் வடிகால்
பிரீமியம் ஸ்டோரி
News
மழைநீர் வடிகால்

முதலமைச்சர் ஆய்வுசெய்த அடையாறு இந்திரா நகர் 3-வது பிரதான சாலைக்குச் சென்றோம். பளிச்சென பணிகள் நடந்துகொண்டிருந்தன. பக்கத்திலேயே 4-வது பிரதான சாலை தாறுமாறாகத் தோண்டப்பட்டுக் கிடந்தது

தலைநகர் சென்னையில், திரும்பிய பக்கமெல்லாம் மழைநீர் வடிகால் பணிகள்தான் நடைபெறுகின்றன. அமைச்சர்களும் அதிகாரிகளும் நாள்தோறும் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டுவருகிறார்கள். இந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் இரண்டு முறை வடிகால் பணிகளைப் பார்வையிட்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், “இன்னும் 15 நாள்களில் வடிகால் பணிகள் முடிந்துவிடும். எப்படிப்பட்ட மழை வந்தாலும் அதைச் சமாளிக்கும் வகையில் பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பணிகளில் எனக்கு திருப்தி” எனப் பாராட்டியிருக்கிறார். “சென்னையில் 85 சதவிகிதப் பணிகள் முடிவடைந்துவிட்டன” எனச் சொல்லியிருக்கிறார் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு. தலைமைச் செயலாளர் இறையன்பு, முதல்வரின் தனிச் செயலாளர் உதயச்சந்திரன் என மூத்த அதிகாரிகள் அவ்வப்போது நேரில் ஆய்வு நடத்தி, வடிகால் பணியை விரைவுபடுத்தி வருகிறார்கள். ஜூ.வி தன் பங்குக்கு, சென்னையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மழைநீர் வடிகால் பணிகளின் உண்மை நிலவரத்தை அறிவதற்குக் களமிறங்கியது. மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களுக்கும் நேரில் விசிட் அடித்து தகவல்களைத் திரட்டியது. பார்த்த காட்சிகளும், கேட்ட தகவல்களும் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கின.

மழைநீர் வடிகால்... அரைவேக்காட்டு திட்டம்! - சென்னை ஸ்கேன் ரிப்போர்ட்...
மழைநீர் வடிகால்... அரைவேக்காட்டு திட்டம்! - சென்னை ஸ்கேன் ரிப்போர்ட்...

சென்னையில், 2,078 கி.மீ தொலைவுக்கு மழைநீர் வடிகால்கள் இருக்கின்றன. இந்த வடிகால்கள் நகரில் ஓடும் 52 கிளை வாய்க்கால்களுடன் சேர்க்கப்பட்டு, 30 பிரதான கால்வாய்களோடு இணைக்கப்படுகின்றன. அந்தப் பிரதான கால்வாய்கள் ஆறுகளோடு சேர்க்கப்பட்டிருக்கின்றன. கால்வாய் ஆக்கிரமிப்புகள், தூர் வாராதது, இணைப்பே இல்லாதது உள்ளிட்டவற்றால், காலங்காலமாக இந்தக் கால்வாய் இணைப்பில் சிக்கல் இருந்துவருகிறது. ஒரு சிறிய மழைக்கே மாநகரம் முழுவதும் மழைநீர் தேங்கி நிற்பதற்கு, பிரதான காரணமும் அதுதான். தற்போது, சிங்காரச் சென்னை 2.0 திட்டம், உலக வங்கி நிதி, மூலதன நிதி, உள்கட்டமைப்பு நிதி, வெள்ளத் தடுப்பு நிதி உள்ளிட்ட பல்வேறு நிதிகளின் மூலம், புதிய மழைநீர் வடிகால் கட்டமைப்புப் பணி, வடிகால், கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டில் மட்டும், புதிதாக 1,058 கி.மீ நீளத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை அரசு மேற்கொண்டுவருகிறது. உண்மையிலேயே, இது பெரிய வேலைதான். ஓர் ஆண்டுக்குள் இவ்வளவு நீளத்துக்கு வடிகால் அமைப்பது, நிஜத்தில் சாத்தியமில்லாத விஷயமும்கூட. ஆனால், “இந்தத் திட்டப் பணிகளை முன்கூட்டியே முடிவு செய்திருந்தால், இன்னும் கொஞ்சம் முறையாகத் திட்டமிட்டிருந்தால் சென்னை இந்த அளவுக்கு ‘அலங்கோலமாக’ மாறியிருக்காது” என்பதே, நாம் சந்தித்த பொதுமக்களின் ஒருமித்த கருத்தாக இருந்தது.

மழைநீர் வடிகால்... அரைவேக்காட்டு திட்டம்! - சென்னை ஸ்கேன் ரிப்போர்ட்...

அரைகுறைப் பணி... அலட்சிய பதில்!

2015 பெருவெள்ளத்தில் மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்த வேளச்சேரி, சென்னை மாநகராட்சியின் அடையாறு மண்டலத்தின்கீழ் வருகிறது. 178-வது வார்டிலுள்ள தேவி கருமாரியம்மன் நகரில், மழைநீர் வடிகால் பணிகள் அரைகுறையாகவே செய்யப்பட்டிருக்கின்றன. வடிகால்கள் பாதி கட்டப்பட்டிருந்த நிலையில், ஆபத்தான முறையில் கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு மிரட்டின. வேளச்சேரி 177-வது வார்டிலுள்ள பிச்சை முகமது, “வடிகால் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட குழிகளில், மழைநீரும் கழிவுநீரும் கலந்து தேங்கி நிற்பதால், கொசுத் தொல்லை, காய்ச்சல் என அவதிப்படுகிறோம். தேங்காய்ச் சிரட்டைகளில் தண்ணீர் தேங்கினால்கூட, மக்களிடம் அபராதம் வசூலிக்கிறது அரசு. குளம்போல இங்கே தேங்கி நிற்கும் தண்ணீருக்கு யாரிடம் அபராதம் வசூலிப்பது... எங்கள் தெருவிலுள்ள ‘மேன் ஹோல்கள்’ மூடப்படாமலிருந்தன. அருகிலேயே பள்ளி ஒன்று இருக்கிறது. இது குறித்து நாங்கள் புகாரளித்தபோது, சூப்பர்வைசர்கள் அலட்சியமாக பதிலளித்தார்கள். வடிகால் வேலை செய்த வட இந்தியத் தொழிலாளி ஒருவர், அந்த ‘மேன்ஹோலில்’ சமீபத்தில் விழுந்துவிட்டார். அதன் பிறகுதான் ‘மேன்ஹோல்’ மூடப்பட்டது. பள்ளிக் குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருந்தால் யார் பொறுப்பேற்பது?” என்றார் கோபத்துடன்.

முதலமைச்சர் ஆய்வுசெய்த அடையாறு இந்திரா நகர் 3-வது பிரதான சாலைக்குச் சென்றோம். பளிச்சென பணிகள் நடந்துகொண்டிருந்தன. பக்கத்திலேயே 4-வது பிரதான சாலை தாறுமாறாகத் தோண்டப்பட்டுக் கிடந்தது. இந்திரா நகர் முழுவதுமே அந்த லட்சணத்தில்தான் இருக்கிறது. அந்தப் பகுதியில் வசிக்கும் ரிசுஜா, “மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டும்போது எங்கள் வீடுகளுக்கு வரும் மெட்ரோ வாட்டர் குழாய்களை உடைத்துவிட்டனர். ‘குழாய்களைச் சரிசெய்து கொடுங்கள்’ என்று மெட்ரோ நிர்வாகத்திடம் புகாரளித்தால், ‘சென்னை மாநகராட்சி ஆட்களை வரச் சொல்லுங்கள்’ என்கிறார்கள். சென்னை மாநகராட்சித் தரப்பில் கேட்டால், ‘மெட்ரோ ஆட்களை வரச் சொல்லுங்கள்’ என்கிறார்கள். இப்படி மாறி மாறி இரண்டு துறையினரும் எங்களை அலட்சியப்படுத்தி, அலைக்கழிக்கிறார்கள். வடிகால் பணிகளில், துறைகளுக்குள் ஒருங்கிணைப்பே இல்லை. 20 நாள்களாக நாங்கள் தண்ணீர் இல்லாமல் இருக்கிறோம். குடிப்பதற்கும் குளிப்பதற்கும் கேன் வாட்டர்தான் வாங்குகிறோம்’’ என்றார் வருத்தத்துடன்.

மழைநீர் வடிகால்... அரைவேக்காட்டு திட்டம்! - சென்னை ஸ்கேன் ரிப்போர்ட்...
மழைநீர் வடிகால்... அரைவேக்காட்டு திட்டம்! - சென்னை ஸ்கேன் ரிப்போர்ட்...

காவு வாங்கக் காத்திருக்கும் கம்பிகள்!

ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட வார்டு 156-ல், முகலிவாக்கம் - மணப்பாக்கத்தை இணைக்கும் பிரதான சாலையை ஒட்டிய பகுதியில் பாதி கான்கிரீட் போடப்பட்ட நிலையிலும், பாதி அஸ்திவாரம் மட்டுமே தோண்டப்பட்ட நிலையிலும் வடிகால் பணிகள் கிடக்கின்றன. பெரும்பாலான பகுதிகளில் கால்வாயின் கான்கிரீட் கம்பிகள், ஆறடி ஆழத்திலிருந்து முழுவதுமாக வெளியில் நீண்டபடி பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. நம்மிடம் பேசிய ஏரியாவாசிகள், “மழை கொஞ்சம் நேரம் பெய்தால்கூட, வெள்ளநீர் சாலையை மூழ்கடித்துவிடும். ரோடு எது, கால்வாய் எதுவென்றே அடையாளம் தெரியாது. தடுப்புக்குப் பேரிகாடுகள்கூட இல்லாததால், நீட்டிக்கொண்டிருக்கும் கம்பிகளில் பொதுமக்கள் இடறி விழுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. கம்பிகள் காவு வாங்கக் காத்திருக்கின்றன. தினமும் உயிரைக் கையில் பிடித்தபடி பயணிக்கிறோம்” என்கிறார்கள்.

157-வது வார்டில், மழைநீர் வடிகால் பணிகள் அவசரகதியில் முடிக்கப்பட்டு, சாலையில் வெறும் மண்ணைக் கொட்டி, மூடிவைத்திருக்கிறார்கள். நாம் சென்றபோது பெய்த சிறிய மழைக்கே, அந்தச் சாலைகள் உள்வாங்கி ராட்சதப் பள்ளங்களாகத் தென்பட்டன. ஏரியா வாட்ச்மேன் ஒருவர், “வடிகால் பணி முடிந்ததும் அப்படியே போட்டுவிட்டுப் போய்விட்டார்கள். மழைபெய்தால் நடுவில் பள்ளம் இருப்பதே தெரியாது. கடந்த அக்டோபர் 8-ம் தேதி இரவு, பைக்கில் வந்த ஒருவர் பள்ளத்தில் விழுந்துவிட்டார். நாங்கள்தான் அவரைக் காப்பாற்றினோம்” என்றார்.

அதிகாரிகளுக்கே, வடிகால் பணி எவ்வளவு முடிந்திருக்கிறது என்கிற கள நிலவரம் புரிபடவில்லை. நம்மிடம் பேசிய ஆலந்தூர் மண்டல அதிகாரி பாஸ்கரன், “95% பணிகள் முடிவடைந்துவிட்டனவே... நீங்கள் பார்த்தவையெல்லாம் முடிக்கப்படாத வெறும் 5% பணிகள்தான். அதையும் மழைக்காலம் முடிவதற்குள் முடித்துவிடுவோம்” என்றார். இதே பதிலைத்தான் நம்மிடம் பேசிய 156-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் ஜெ.செல்வேந்திரனும் சொன்னார்.

சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டல அதிகாரிகளும், மழைநீர் வடிகால் பணிகள் பற்றிய கேள்விகளுக்கு சொல்லிவைத்தாற்போல “90 சதவிகிதப் பணிகள் முடிந்துவிட்டன’’ என்ற ரெடிமேட் பதிலைத்தான் சொல்கிறார்கள். பணிகள் முடிவுறாத ஏரியாக்களைச் சுட்டிக்காட்டினால், “அதான் சார்... அந்த மீதமிருக்கிற 10 சதவிகிதம்’’ என்று ‘கரகாட்டக்காரன்’ செந்தில்போலச் சொல்கிறார்கள். ஆனால், பெரும்பாலான மண்டலங்களில் 50 சதவிகிதப் பணிகள்கூட முடியவில்லை என்பதே உண்மை. பணிகள் முடிந்துவிட்டதாகச் சொல்லப்படும் இடங்களிலும் அரைகுறைதான். இந்தக் கட்டுமானப் பணிகளில், பெரும்பாலான இடங்களில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களைப் பணியில் அமர்த்தியிருக்கிறார்கள். மொழிப் பிரச்னையில், அவர்களிடம் ஒப்பந்ததாரர்கள் வேலை வாங்குவதற்குள் பாதி நாள் ஆகிவிடுகிறது என்கிறார்கள்.

மழைநீர் வடிகாலா... தண்ணீர் டேங்க்கா?

அண்ணாநகர் மண்டலத்துக்கு உட்பட்ட அயனாவரம் ஐ.சி.எஃப் சிக்னல் பகுதியில், வேலை நடந்துகொண்டிருக்கும்போது பெரிய எலெக்ட்ரிக்கல் விபத்தால் பணியாளர் ஒருவர் சமீபத்தில் இறந்துவிட்டார். இதில் சூப்பர்வைசரை ரிமாண்ட் செய்திருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தால் கடந்த பத்து நாள்களாக வேலை ஏதும் நடக்காமல் இருந்து, இப்போதுதான் வடிகால் பணி மீண்டும் தொடங்கியிருக்கிறது.

வடிகால் அமைக்கும்போது, குழியில் தேங்கும் தண்ணீரை வெளியேற்றிவிட்டு கான்கிரீட் கொட்டுகிறார்கள். மழை பெய்தவுடன் மீண்டும் தண்ணீர் தேங்குகிறது. அதை வெளியேற்றிவிட்டு, தடுப்புச் சுவர் கட்டுகிறார்கள். மீண்டும் மழை... மீண்டும் தண்ணீர் வெளியேற்றம். கடைசியாக, பில்லர் எழுப்பிவிட்டு மேலே ‘ஸ்லாப்’ போட்டு மூடிவிடுகிறார்கள். இப்படிக் கட்டுமானம் போதுமான அளவு காயாமல், அதன் மேலேயே வடிகால் அமைப்பதால், அதன் உறுதித்தன்மையும் கேள்விக்குறியாகிறது. சென்னையில் கட்டப்படும் பெரும்பாலான வடிகால்கள் இப்படியான நிலையில்தான் அமைக்கப்படுகின்றன.

மழைநீர் வடிகால்... அரைவேக்காட்டு திட்டம்! - சென்னை ஸ்கேன் ரிப்போர்ட்...
மழைநீர் வடிகால்... அரைவேக்காட்டு திட்டம்! - சென்னை ஸ்கேன் ரிப்போர்ட்...

சென்னை கொருக்குப்பேட்டை ராமசாமி தெருவில் கட்டப்படும் கால்வாய்ப் பணிகள் தண்ணீர் - சாக்கடைக்குள்தான் நடக்கின்றன. நீரை முழுமையாக வெளியேற்றிவிட்டு, வேலையைத் தொடர்வதற்குக்கூட பணியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பொறுமையில்லை. “கட்டுறது மழைநீர் வடிகாலா இல்லை தண்ணீரைச் சேமிக்கும் டேங்க்கானு தெரியலைங்க. மழை பெஞ்சவுடனேயே, அந்தத் தண்ணீர் டேங்க் நிரம்பி ரோட்டுல மழைநீர் ஓடுது. அதுக்கு இணைப்பும் இல்லை, உறுதித்தன்மையும் இல்லை. கொருக்குப்பேட்டை பார்த்தசாரதி நகரில், அரைகுறையாக இருக்கும் கால்வாய்க்குள் இதுவரைக்கும் மூன்று பேர் தவறி விழுந்துருக்காங்க” என்கிறார்கள் ஏரியாவாசிகள்.

திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட 12-வது வார்டில், மழைநீர் வடிகால்களில் சிமென்ட் கலவை மட்டுமே போடப்பட்டிருக்கிறது. இன்னும் முழுமையாகப் பூச்சுப் பணிகளும், இணைப்புப் பணிகளும் நடைபெறவில்லை. 2021-ல் பெய்த மழையில் பாதிக்கப்பட்ட மணலி, சடையாங்குப்பத்துக்குச் செல்லும் வழியில் பாலம் அமைக்கப்பட்டுவருகிறது. இந்தப் பாலத்துக்குக் கீழே மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி கடந்த ஓராண்டுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இப்போது இந்தக் கால்வாயில் சாக்கடைநீர் கரைபுரண்டு ஓடுகிறது. பாலம் கட்டுவதால், மழைநீர் வடிகால்கள் அமைப்பது அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

மண் கடத்தல்... லஞ்ச முறைகேடுகள்!

அம்பத்தூர் மண்டலத்தின் 84-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் ஜான், “இந்த வார்டில், கொரட்டூர் வன்னியர் தெரு, கஸ்தூரி நகர், ஹவுஸிங் போர்டிலுள்ள சில பகுதிகள், பட்டரவாக்கம் பஜனை கோயில் தெரு பகுதிகளில் நடந்துவரும் மழைநீர் வடிகால் பணிகள் மந்தமாக நடக்கின்றன. கடந்த மழைக்கு, இந்த ஏரியாவே மூழ்கிவிட்டது. இந்த மழைக்காலத்தில் எப்படிச் சமாளிக்கப்போகிறோம் எனத் தெரியவில்லை” என்றார்.

அம்பத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ அலெக்ஸாண்டரிடம் பேசினோம். “மழைநீர் வடிகால்வாய் திட்டத்துடன், கொசஸ்தலையாறு வடிகால் திட்டத்தைச் சுமார் 3,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சி மேற்கொண்டுவருகிறது. இதில் மண்டலம் 7-ல், கால்வாய் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட மண்ணை, ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒரு லோடு 9,000 ரூபாய் என விற்றுவிட்டனர். குறிப்பாக, கள்ளிக்குப்பம் பகுதி செம்மண்ணை லாரிகளில் கடத்தி விற்றிருக்கிறார்கள். அதனால், கால்வாய் கட்டிய பிறகு அதன் கரைகளைப் பலப்படுத்த மண் இல்லாமல் அப்படியே பள்ளமாக ஒப்பந்ததாரர்கள் விட்டுச் செல்கின்றனர்” என்றார்.

மண் அள்ளுவதில் மட்டுமல்ல, பள்ளம் தோண்டுவதிலும் லஞ்ச முறைகேடுகள் தலைவிரித்தாடுகின்றன. பள்ளம் தோண்டும்போது துண்டிக்கப்படும் குடிநீர் இணைப்புகள், மின்சார இணைப்புகள் போன்றவற்றைச் சரிசெய்ய அதிகாரிகள் பணம் கேட்பதாகப் புலம்புகிறார்கள் மக்கள்.

மழைநீர் வடிகால்... அரைவேக்காட்டு திட்டம்! - சென்னை ஸ்கேன் ரிப்போர்ட்...
மழைநீர் வடிகால்... அரைவேக்காட்டு திட்டம்! - சென்னை ஸ்கேன் ரிப்போர்ட்...

முதல்வருக்கு ஷோ!

சமீபத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் வடசென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் பணிகளைப் பார்வையிட்டார். அந்த இடங்களுக்கு நாமும் நேரில் சென்று பார்த்தோம். அதில், புளியந்தோப்பு மெயின்ரோடு பகுதியில், முதல்வர் பார்வையிட்ட இடத்துக்கு அருகிலுள்ள தெருக்களின் நிலைமையெல்லாம் படுமோசம். வெறுமனே முதல்வருக்கு ஷோ காட்டியிருக்கிறார்கள். அங்கு வடிகால் அமைப்பதற்காகப் பள்ளங்கள் இப்போதுதான் தோண்டப்பட்டிருக்கின்றன. அதேபோல, முதல்வர் ஆய்வு நடத்திய வால்டாக்ஸ் சாலையில் பல இடங்களில் மழைநீர் வடிகால் இணைப்பு ஏற்படுத்தப்படவில்லை. இன்னும் சில இடங்களில் இப்போதுதான் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால், ஒரு பெருமழை பெய்தால் கண்டிப்பாக அந்த இடங்களில் மழைநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கும் அபாயம் இருக்கிறது.

கோடம்பாக்கம், தேனாம்பேட்டை மண்டலங்களில் கடந்தகாலத்தில் மழைநீர் நின்ற பகுதிகளில் வேலைகள் பெருமளவு முடிந்துவிட்டன. வளசரவாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட திருவள்ளுவர் சாலையில் பூ விற்கும் மீனா, “திருவள்ளுவர் ரோட்டுல எப்ப மழை பெஞ்சாலும் இடுப்பு வரை தண்ணீர் தேங்கி நிக்கும். இதுவரை இங்க மழைநீர் வடிகால் போட்டதில்லை. இந்த ஆட்சியிலதான் போட ஆரம்பிச்சாங்க. அவங்க நோக்கம் நல்லதுதான். ஆனா, இன்னும் முன்னாடியே வடிகால் பணியை ஆரம்பிச்சு முடிச்சிருக்கணும். இன்னமும் முடியாம, பாதி ரோட்டை அடைச்சுக்கிட்டு, பள்ளத்தைத் தோண்டி, நாத்து நடுறாப்புல கம்பியை மட்டும் நட்டுவெச்சுட்டாங்க. பெரும்பாலான வடிகால்களுக்கு நடுவுல பலகையைப் போட்டிருக்காங்க. கரணம் தப்புனா மரணம்கிற பயத்துலதான் அதுல ஏறி நடக்குறோம்” என்றார் பரிதாபமாக.

பெருங்குடி மண்டலத்தில் 193-வது வார்டில், வடிகால் அமைக்கும் பணி தற்போதுதான் தொடங்கியிருக்கிறது. 2.2 கி.மீ நீளமுள்ள இந்த வடிகாலில் தற்போது 120 மீட்டருக்கான பணிகளே முடிந்திருக்கின்றன. 184-வது வார்டில் வசிக்கும் முத்துசாமி, “பெருங்குடி கல்லுக்குட்டை ஏரியால்தான் 182, 183, 184 ஆகிய வார்டுகளில் வெள்ளம் வரும். இந்த ஏரி நிரம்பி, தண்ணீர் வெளியேறும் ஓடையை இதுவரை சுத்தம் செய்யவில்லை. ஒருவேளை பெருமழை வந்தால், அன்னை அஞ்சுகம்மாள் நகர் முழுவதும் மூழ்கிவிடும்” என்றார் பரிதவிப்புடன். துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்புறம், வடிகால் இணைப்புப் பெறாமல் இருக்கிறது. கட்டப்பட்ட வடிகாலும் தரையிலிருந்து சுமார் இரண்டடி உயரமாக தரமற்ற முறையில் அமைக்கப்பட்டிருப்பதால், மழை நீர் வடிவது சந்தேகம்தான். சோழிங்கநல்லூர், மாதவரம் மண்டலங்களிலும் இதே பிரச்னைதான்.

மழைநீர் வடிகால்... அரைவேக்காட்டு திட்டம்! - சென்னை ஸ்கேன் ரிப்போர்ட்...
மழைநீர் வடிகால்... அரைவேக்காட்டு திட்டம்! - சென்னை ஸ்கேன் ரிப்போர்ட்...

மோட்டார் பம்புகளே ஒற்றை நம்பிக்கை!

சென்னையில் மழைநீர் அதிகமாகத் தேங்கும் 564 இடங்களில், 300 இடங்களுக்கு மேல் வடிகால் அமைக்கும் பணிகள் முடிவுற்றிருக்கின்றன. பெரும்பாலான பிரதான சாலைகளிலும் பணிகள் நடந்திருக்கின்றன. ஆனால், அவற்றில் பல இடங்களில் முறையாக வடிகால்கள் கால்வாயோடு இணைக்கப்படவில்லை. தெருக்களில் மழைநீர் தேங்கினால், அதை மோட்டார் பம்ப் மூலமாக உறிஞ்சி, பிரதான சாலையிலுள்ள வடிகால்களில் விடும் திட்டத்தில்தான் இருக்கிறது அரசு. அதற்காக வெளிமாவட்டங்களிலிருந்து 600 மோட்டார் பம்ப்புகள் சென்னைக்கு வரவிருக்கின்றன. அந்த நம்பிக்கையில்தான், ‘எப்படிப்பட்ட மழை வந்தாலும் சமாளித்துவிடுவோம்’ என்று முதல்வர் தைரியமாகச் சொன்னாராம்.

சென்னையில் வெள்ள பாதிப்புகளைத் தடுக்க, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் கமிட்டி அமைத்தது தமிழ்நாடு அரசு. அந்த கமிட்டியின் முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. இப்போது கட்டுமானம் நடைபெறும் டிசைன்களை ஐஐடி வல்லுநர்களிடம் கொடுத்து ஒப்புதல் வாங்கியிருக்கிறது அரசு. இது ஒன்றுதான் பாராட்டுக்குரியதே தவிர, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நடந்த வடிகால் பணிகளுக்கும், இப்போது நடைபெறும் பணிகளுக்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை.

பல்வேறு குழப்பங்களால் பெரும்பாலான இடங்களில் பணி தாமதப்படுகிறது. பல இடங்களில் பாதுகாப்பற்ற நிலையில் கட்டுமானங்கள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட வடிகால் எந்தக் கால்வாயில் இணைக்கப்படப்போகிறது என்கிற கேள்விக்குப் பல அதிகாரிகளிடம் விடையே இல்லை. அலட்சியம், தரமற்ற கட்டுமானம், முறைகேடுகள் என ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கின்றன. மழைநீர் வடிகால் திட்ட புளூபிரின்ட் ஒழுங்காக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அதைச் செயல்படுத்தும்விதத்தில் அரைவேக்காட்டுத் தனமாகவே பணிகள் நடந்திருக்கின்றன என்பதே உண்மை. பணிகள் நடக்கும் பெரும்பான்மையான இடங்கள், மழைக்காலத்தில் உயிர்வாங்கும் பலிபீடங்களாக மாற வாய்ப்புகள் அதிகம். வெள்ள அபாயத்திலிருந்து மக்களைக் காக்கிறீர்களோ இல்லையோ, வடிகால் கட்டுமானங்களிடமிருந்து மக்களை உடனே காப்பாற்றுங்கள்!