Published:Updated:

`ஆட்சி எடப்பாடி கையிலா... மணல் கொள்ளையர்கள் கையிலா?'- ஸ்டாலின் ட்வீட்டின் பின்னணி

கட்டுமானப் பணி, சாலைப் பணி உள்ளிட்டவற்றின் ஒப்பந்தக்காரர்களாக ஆளும்கட்சிக்கு நெருக்கமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஆயிரக்கணக்கான லாரிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்குகின்றன.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

“இது யாரோட லாரி தெரியுமா?- காஞ்சி அதிகாரிகளைப் பதறவைத்த ஆளும்கட்சிப் பிரமுகர்கள்!” என்ற தலைப்பில் கடந்த 27-ம் தேதி விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்தச் செய்தியின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சவுடு மண் எடுக்கும் லாரிகள் (கோப்புப் படம்)
சவுடு மண் எடுக்கும் லாரிகள் (கோப்புப் படம்)

சென்னையின் வளர்ச்சிக்காக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டுவருவது வாடிக்கையாகிவிட்டது. மணல் சுரண்டப்படுவதும், ஏரி, குளங்களை ஆழப்படுத்துவதாகச் சொல்லி அளவுக்கு அதிகமாகச் சவுடு மண் எடுப்பதும் இன்றளவில் நடைபெற்று வருகிறது. மணல், சவுடு மண் போன்றவற்றை ஆளும் கட்சியினரின் அனுமதி இல்லாமல் யாரும் எடுக்க முடியாது. ஆளும்கட்சிக்கு நெருக்கமானவர்கள்தான் கட்டுமானப் பணி, சாலைப் பணி உள்ளிட்டவற்றின் ஒப்பந்தக்காரர்களாக இருக்கிறார்கள். அவர்களின் ஆயிரக்கணக்கான லாரிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்குகின்றன.

இந்த லாரிகளைக் கொண்டு இயற்கை வளங்களைச் சுரண்டுகிறார்கள். அவற்றை எந்தக் காவலர்களும் பிடிப்பதில்லை. தவறுதலாகப் பிடித்தாலும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். ஆளும் கட்சிப் பிரமுகர்களோடு மற்ற கட்சியினரும் இதில் சிண்டிகேட் போட்டுக் கொள்ளையடிக்கிறார்கள். இதனால் சட்ட விரோத செயல்கள் குறித்து யாரும் குரல்கொடுப்பதில்லை.

`இது யாரோட லாரி தெரியுமா?'- காஞ்சி அதிகாரிகளைப் பதறவைத்த ஆளுங்கட்சிப் பிரமுகர்கள்!
ஸ்டாலின் ட்வீட்
ஸ்டாலின் ட்வீட்

இந்த நிலையில், ஆளும்கட்சிக்கு நெருக்கமானவர்களின் லாரிகளைப் பிடித்து தாழம்பூர் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதில் தொடர்புடைய காவலர்களைத் தென்மண்டலத்துக்குத் தூக்கியடிக்கப்படும் அளவுக்குக் கடுமையான நடவடிக்கை பாய்ந்தது, மற்ற காவலர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில், முதல்வர் பழனிசாமியை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில், “இது எடப்பாடி பழனிசாமியின் லாரி என மிரட்டும் அளவுக்கு சமூக விரோதிகள் நடமாட்டத்துக்கு முதலமைச்சர் பெயரைப் பயன்படுத்துவது போன்ற அராஜகம் வேறு என்ன இருக்க முடியும்? ஆட்சி-எடப்பாடியின் கையிலா... மணல் கொள்ளையர்கள் கையிலா? தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா... குற்றத்தின் ஆட்சியா?“ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.