Published:Updated:

`மதுபானங்களை ஏன் டோர்டெலிவரி செய்யக் கூடாது?’ - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் யோசனை

டாஸ்மாக்
டாஸ்மாக்

இந்தியாவில் மதுக்கடைகளுக்கு படையெடுக்கும் கூட்டத்தால் சமூக இடைவெளி காற்றில் பறந்துகொண்டிருக்கிறது.

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,000-த்தைக் கடந்துவிட்டது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 25-ம் தேதி முதல் இந்தியாவில் ஊரடங்கு அமலுக்கு வந்தது. அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. நிறுவனங்கள் இயங்கவும் அனுமதி மறுக்கப்பட்டது. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். தனி நபர் சுகாதாரம் மிகவும் அவசியம் என மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். இந்தியாவில் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இருப்பினும் மே 4-ம் தேதிக்குப் பிறகு சில தளர்வுகளுடன் இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு
கொரோனா ஊரடங்கு
vikatan

இந்தியாவில் கொரோனா பாதித்த பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களாக மத்திய அரசு அறிவித்தது. சிவப்பு மண்டலங்களைத் தவிர்த்து ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. குறைந்தபட்ச ஊழியர்களுடன் கடைகள் மற்றும் நிறுவனங்கள் இயங்கவும் இந்தப் பகுதியில் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாள்களாகப் பல்வேறு மாநிலங்களும் 40 நாள்களுக்கு மேலாக பூட்டி வைத்திருந்த மதுக்கடைகள் திறந்துள்ளன. முதல் நாளில் இருந்தே கோடிகளில் கல்லா கட்டிக்கொண்டிருக்கிறது மதுவியாபாரம். மதுக்கடைகளுக்கு படையெடுக்கும் கூட்டத்தால் சமூக இடைவெளி காற்றில் பறந்துகொண்டிருக்கிறது. இந்தக் இக்கட்டான சூழலில் அரசே இதுபோன்ற செயல்களில் ஈடுபடலாமா என வேதனை தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

ஊரடங்கில் மதுவிற்பனை செய்வதைத் தடை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷான், சஞ்சய் கிஷன் கவுல், பிஆர் காவே ஆகியோர் முன்னிலையில் காணொலிக்காட்சி மூலம் இன்று விசாரிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தீபக் சாய், ``லாக்டெளன் நேரம் என்பதால் குறைவான அளவிலே மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. இத்தகைய சூழலில் மதுபானங்களை வாங்க வரும் மக்களிடையே சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது கடினமாக இருக்கிறது. மது விற்பனையால் சாமான்ய மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்பதுதான் நோக்கம். மது விற்பனை தொடர்பாக உள்துறை அமைச்சகம் தெளிவுப்படுத்த வேண்டும்” என வாதிட்டார்.

``இந்த வழக்கில் இப்போது உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது. மாநில அரசுகள் மதுபானங்களை மக்களுக்கு மறைமுகமான முறையில் விற்பனை செய்யலாம். ஆன்லைன் மூலம் டோர் டெலிவரி செய்வது குறித்து மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும். இது எங்களின் யோசனைதான். இவ்வாறு செய்வதன் மூலம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கலாம். ஆன்லைனில் விற்பனை செய்வது தொடர்பாகப் பேச்சுகள் எழுந்து வருகின்றன” என நீதிபதிகள் கூறினர்.

`மதுபானங்களை ஏன் டோர்டெலிவரி செய்யக் கூடாது?’ - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் யோசனை

மதுக்கடைகளில் குவியும் கூட்டத்தைக் குறைப்பதற்கு மாநில அரசுகளும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. டெல்லி அரசானது மதுபான வகைகளின் மீது கொரோனா வரி என 70 சதவிகிதம் வரி விதித்துள்ளது. ஆந்திரா, உத்தரப்பிரதேச மாநிலங்களிலும் சில குறிப்பிட்ட அளவு மதுபானங்கள் மீதான விற்பனை வரியைக் கூட்டியுள்ளது. டெல்லியில் இ-டோக்கன் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் டோக்கன் வாங்கிக்கொண்டு கடைகளுக்குச் சென்று மதுவாங்க வேண்டும். கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக ஒரு மணிநேரத்துக்கு 50 டோக்கன்கள் என வழங்கப்படுகிறது. தமிழக அரசானது வயது அடிப்படையில் மதுபானங்களை விற்பனை செய்கிறது. குறிப்பிட்ட வயதுக்குட்பட்டவர்கள் நேரத்துக்குள் வந்து மதுவாங்கிச் செல்ல வேண்டும். மதுவாங்க வருபவர்கள் கட்டாயம் ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு