Published:Updated:

ஸ்டெர்லைட்: `ஆக்ஸிஜனை மத்திய அரசிடம் வழங்க வேண்டும்; ஆலையைத் திறக்கலாம்!’ - உச்ச நீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

`ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனை மத்திய தொகுப்பில் வழங்க வேண்டும். அவர்கள் மாநிலங்களுக்குப் பிரித்து வழங்குவார்கள்’ எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்குவது தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. முன்னதாக நேற்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டும் ஆலையைத் திறக்க அனைத்துக் கட்சிகளும் ஒப்புதல் வழங்கின. அப்போது, தமிழக அரசு, `ஆக்ஸிஜன் உற்பத்தியைக் காரணமாக வைத்துக்கொண்டு ஆலையில் வேறு எந்தப் பிரிவையும் இயக்கக் கூடாது’ என வாதிட்டது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

தொடர்ந்து மத்திய அரசு, ``ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யப்படவிருக்கும் ஆக்ஸிஜனை எங்களுக்குத்தான் தர வேண்டும். அங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனை தேவைப்படும் மாநிலங்களுக்கு நாங்கள்தான் பிரித்து வழங்குவோம்” என வாதிட்டது. இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர், ``உள்ளூர் மக்களைக் கண்காணிப்புக்குழுவில் சேர்க்கக் கூடாது” என எதிர்ப்பு தெரிவித்தார்.

உச் சநீதிமன்ற நீதிபதி சந்திர சூட், ``உற்பத்தியாகும் ஆக்ஸிஜனை மத்திய அரசு ஒதுக்குவதே முறை என ஏற்கெனவே ஓர் உத்தரவு இருக்கிறது. அரசின் கண்காணிப்பின் கீழ் ஸ்டெர்லைட் ஆலை இயக்கப்படலாம். அப்போது ஆலை நிர்வாகமும் இருக்கலாம்” என்றார். தொடர்ந்து வாதிட்ட தமிழக அரசு, ``ஆக்ஸிஜன் உற்பத்தியில் தமிழகத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்” என்றார்.

ஆனால் தொடர்ந்து வாதிட்ட மத்திய அரசு, சட்டம் ஒழுங்கு சிக்கலைக் காரணம் காட்டி உள்ளூர் மக்களைக் கண்காணிப்பு குழுவில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், ``ஆக்ஸிஜன் உற்பத்தியில் தமிழகத்துக்கு முன்னுரிமை வழங்க முடியாது” என்றும் தெரிவித்தது.

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம், `ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம்’ என அனுமதி அளித்தது. மேலும், `ஸ்டெர்லைட் ஆலையைக் கண்காணிக்க ஐந்து நிபுணர்கள்கொண்ட குழு அமைக்கப்படும்’ என்றும் `அந்தக் குழுவை, தேசிய சுற்றுசூழல் பொறியியல் ஆய்வு மையம் முடிவு செய்யும். இது தவிர்த்து உள்ளூர் மக்கள்கொண்ட மேற்பார்வைக் குழு ஒன்றையும் அமைக்கலாம். அதை நிபுணர்கள்குழு தேர்வு செய்யும்’ எனவும் உத்தரவில் தெரிவித்தது.

மேலும் `ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனை மத்திய தொகுப்பில் வழங்க வேண்டும். அவர்கள் மாநிலங்களுக்குப் பிரித்து வழங்குவார்கள்’ எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. `இது முழுக்க முழுக்க ஆக்ஸிஜன் தயாரிப்புக்கான அனுமதி மட்டுமே. வேதாந்தாவின் வேறு எந்த’ பணிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு