Published:Updated:

`உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு!'- மாமல்லபுரத்தில் தெரு நாய்களை அப்புறப்படுத்துவதில் புது சிக்கல்

அடிபட்ட நாய்களுக்கு சிகிச்சை, தடுப்பூசி போடுதல், கருத்தடை செய்தல் ஆகிய காரணங்களுக்கு மட்டுமே விலங்குகளை பிடிக்க ப்ளூ கிராஸ் அமைப்புக்கு அனுமதி உண்டு. விஐபி வருகைக்காக நாய்களைப் பிடிக்க அனுமதி இல்லை.

தெரு நாய், மாமல்லபுரம்
தெரு நாய், மாமல்லபுரம்

மோடி-ஜின்பிங் சந்திப்புக்காக மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த நிலையில், அங்கு சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாமல்லபுரத்தில் பிடிக்கப்படும் மாடு
மாமல்லபுரத்தில் பிடிக்கப்படும் மாடு

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பேரூராட்சி, மாவட்ட நிர்வாகம், காவல்துறை, மின்வாரியம் எனப் பல்வேறு துறையினரும் தமிழகம் முழுவதிலுமிருந்து வரவழைக்கப்பட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மோடி மற்றும் ஜின்பிங் வரும்போது, சாலைகளில் மாடுகள், நாய்கள் சுற்றித் திரியாதவாறு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், மாமல்லபுரம் பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளைப் பேரூராட்சி நிர்வாகத்தினர் பிடித்துவருகின்றனர். இதுவரை 20-க்கும் மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்பட்டு, பூஞ்சேரி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் பராமரித்துவருகிறார்கள். அங்கு, கால்நடை மருத்துவர்களும் இருக்கிறார்கள்.

நாய்களை கட்டுப்படுத்தும் மார்ஸ் தன்னார்வலர்கள்
நாய்களை கட்டுப்படுத்தும் மார்ஸ் தன்னார்வலர்கள்

தெருக்களில் உள்ள நாய்களைப் பிடிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. புளூ கிராஸ் அமைப்புக்கு, அடிபட்ட விலங்குகள், சாலைகளில் திரியும் நாய்களுக்குத் தடுப்பூசி போடுவது, கருத்தடை செய்வது உள்ளிட்டவற்றை மட்டுமே செய்ய அனுமதி உண்டு. ஆனால், ஓரிடத்தில் தங்கி இருக்கும் நாய்களை வேறோரு இடத்துக்குக் கொண்டுசெல்ல மாட்டார்கள். இந்த நிலையில், நாய்களைப் பராமரிக்க மார்ஸ் (Madras animal rescue society) என்ற தனியார் தொண்டு நிறுவனம் முன்வந்துள்ளது.

மார்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் சாராவை சந்தித்துக் கேட்டோம். “ முக்கிய விஐபி-க்கள் வரும்போது, தெருக்களில் நாய்கள் திரியாதவாறு நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அவற்றை ஓரிடத்தில் நிற்குமாறு பார்த்துக்கொள்வோம்.

சாரா, மார்ஸ்
சாரா, மார்ஸ்
பா.ஜெயவேல்

எங்களிடம் நிறைய தன்னார்வலர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இதில் நன்கு பயிற்சி பெற்றிருக்கிறார்கள். மாமல்லபுரத்தில், 500-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன. அவற்றை எளிதாகக் கையாளும் திறன் அவர்களிடம் உள்ளது” என்கிறார்.

மாமல்லபுரம் மார்ஸ் நிறுவனத்தின் தன்னார்வலர் முரளி, “மோடி மற்றும் ஜின்பிங் வரும் நேரத்தில் நாய், மாடு, பன்றி போன்ற விலங்குகள் சுற்றித்திரியாதவாறு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுத்துவருகிறார்கள். மாடுகளையும் பன்றிகளையும் பிடித்துவருகிறார்கள். 500 நாய்கள் இந்தப் பகுதியில் சுற்றித் திரிகின்றன. இவற்றை ஓரிடத்தில் பிடித்து அடைப்பதென்பது சாத்தியமில்லை. அப்படிச் செய்தாலும், அது சட்டத்துக்குப் புறம்பானது. விலங்குகள் அடிபட்டால், அதை சரிசெய்து அதே இடத்தில் விடவேண்டும். கருத்தடை சிகிச்சை செய்தாலும் மீண்டும் அதே இடத்தில் விடவேண்டும். வேறு காரணங்களுக்காக நாய்களைப் பிடிக்கக்கூடாது என நீதிமன்ற உத்தரவு இருக்கிறது.

முரளி
முரளி

ஒவ்வொரு முறையும் விஐபி வருகையைக் காரணம் காட்டி, நாய்களைத் தொந்தரவு செய்தல் கூடாது. அப்படி ஒவ்வொரு முறையும் நாய்களைப் பிடித்தால், சில நேரங்களில் கயிறு இறுகி உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. நாய்களைப் பராமரிப்பதற்கு அரசுக்கு உதவ முன்வந்துள்ளோம். விஐபி வரும் நேரத்துக்கு நாங்கள் அந்தப்பகுதிக்குச் சென்று நாய்களை ஓரிடத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வோம். இந்த நாய்கள், என்னுடன் பழக்கமாக இருந்திருக்கின்றன. இதற்காக, நாங்கள் ஸ்பெஷல் பாஸ் கேட்டிருக்கிறோம். அதிகாரிகளும் இதற்கு அனுமதிப்பதாக உறுதியளித்துள்ளனர்" என்கிறார்.