Published:Updated:

`2 முறை நீட் தேர்வு எழுதினார்; மருத்துவ சீட் கிடைக்கல!' - விபரீத முடிவெடுத்த பெரம்பலூர் மாணவி

எம்.திலீபன்

இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் சீட் கிடைக்காத விரக்தியில், பெரம்பலூர் மாணவி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உரியிழந்த மாணவி
உரியிழந்த மாணவி

பெரம்பலூர், துறைமங்கலம் தீரன் நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் பெரம்பலூரில் அரசுப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரின் மகள் கீர்த்தனா, கடந்த ஆண்டு நடைபெற்ற ப்ளஸ் டூ தேர்வில் 1053 மதிப்பெண் எடுத்தார். கடந்தாண்டு நீட் தேர்வில் 202 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்ததால் அவருக்கு மருத்துவ சீட் கிடைக்காமல் போனது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில், இந்த ஆண்டு முழுவதும் நீட் தேர்வுக்காகப் பயிற்சி பெற்ற அவர், 2019-ம் ஆண்டு நீட் தேர்வில் 382 மதிப்பெண்க மட்டுமே எடுத்தார். அதனால், இந்த ஆண்டும் அவருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.

உரியிழந்த மாணவி  கீர்த்தனா
உரியிழந்த மாணவி கீர்த்தனா

இந்நிலையில், இவரின் தோழி ஒருவர் பொதுத்தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்தபோதிலும், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்ததால் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்தது. இதனால் கடும் மனவிரக்தியிலிருந்த கீர்த்தனா, வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரை அடக்கம் செய்ய உறவினர்கள் முயற்சி செய்தபோது, அங்கு வந்த காவல்துறையினர், கீர்த்தனாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கீர்த்தனாவின் தற்கொலை குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர்
பெரம்பலூர்

இதுகுறித்து கீர்த்தனாவின் குடும்பத்தாரிடம் பேசினோம். "சின்ன வயதிலிருந்தே டாக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையில் படித்தவள். அவரின் தந்தையும் கண்டக்டராக இருந்தாலும் தன் மகளை மருத்துவராக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நீட் கோச்சிங் சென்டரில் சேர்த்தார். நீட் தேர்வுக்குப் பயிற்சி பெற்று, தற்போது நடந்து முடிந்த நீட் தேர்வில் 384 மார்க் வாங்கியிருக்கிறார். ஆனால், இரண்டு கட்ட கலந்தாய்விலும் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயில சீட் கிடைக்கவில்லை. ஆனால், இவருடன் பயிற்சி பெற்ற இவரின் தோழிக்குப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்தது. தனக்கு சீட் கிடைக்காததால் மனவேதனையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாள். நீட் என்ற சட்டத்தால் இன்னும் எத்தனை உயிர்கள் போகப்போகிறதோ தெரியவில்லை" என்று ஆதங்கப்பட்டனர்.