
இரு தினங்களுக்கு முன்பு, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனது லட்சிய தி.மு.க யாரையும் ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை என்று தெரிவித்திருந்தார் டி.ராஜேந்தர்.
தனது அரசியல் பயணம் இனி ஆன்மிக அரசியல் பயணமாக இருக்கும் என லட்சிய தி.மு.க-வின் தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
இரு தினங்களுக்கு முன்பு, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனது லட்சிய தி.மு.க யாரையும் ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை என்று தெரிவித்திருந்தார் டி.ராஜேந்தர்.

இது குறித்து அவர் தெரிவித்திருந்ததாவது, ``ஓ.பி.எஸ் அவர்கள் என்னுடைய நீண்ட நாள் நண்பர். வேட்பு மனு தாக்கல் செய்யும் முன் அவர் என்னை அழைத்தார். நான் பூங்கொத்துடன் அவரை பார்க்கச் சென்றேன். வாழ்த்து சொல்லிவிட்டு வந்தேன்.
வருகின்ற சட்டமன்ற தேர்தல் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இல்லாத தேர்தல். அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய இருகட்சிகளுக்கும் இருக்கிறது பலம். இதைதவிர சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் பக்கபலம். அதை தவிர அவர்களிடம் உள்ளது பணபலம் எனவே நான் சென்று என்ன செய்ய போகிறேன்” என்றும் தனது பாணியில் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.
மேலும் ``கொள்கையை எடுத்து சொல்லி ஓட்டு கேட்டதெல்லாம் அந்த காலம் கொடுக்க வேண்டியதை கொடுத்து ஓட்டு பெற்றுவிடலாம் என்று நினைப்பது இந்த காலம். எனவே காலமும் சரியில்லை களமும் சரியில்லை. கரையில் நின்று வேடிக்கை பார்க்கலாம் என முடிவெடுத்துவிட்டேன்.” என தானும் தனது கட்சியும் இந்த சட்டமன்ற தேர்தலில் யாரையும் ஆதரிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தனது அரசியல் இனி ஆன்மிக அரசியலாக இருக்கும் எனவும் வரும் காலத்தில் ஆன்மீக அரசியலில் தான் ஈடுபடுவேன் என்றும் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். ஆன்மிக அரசியல் என்ற வார்த்தை தமிழக மக்களுக்கு ஒன்றும் புதியதல்ல. சில மாதங்களுக்கு முன் கட்சி தொடங்குவதாக அறிவித்து, அதை பின்வாங்கிய ரஜினி, தனது அரசியல் பாதை ஆன்மிக அரசியல் பாதையாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.