Election bannerElection banner
Published:Updated:

`தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்கள்... மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு!’ - எச்சரித்த மத்திய அரசு

கொரோனா
கொரோனா

தமிழகத் தேர்தல் தொடர்பான செய்திகள் மற்றும் லேட்டஸ்ட் செய்திகளின் தொகுப்பு..!

28 Feb 2021 12 PM

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்கள்! - மீண்டும் அதிகரித்த கொரோனா!

மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத் ஆகிய ஆறு மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய கொரோனா தொற்று அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் பதிவான புதிய தொற்றுகளின் எண்ணிக்கையில் 86.37% இந்த ஆறு மாநிலங்களிலிருந்து பதிவாகியிருக்கிறது.

கொரோனா
கொரோனா

கொரோனா பரவலை விரைந்து கட்டுப்படுத்துமாறும் மத்திய அரசு இந்த ஆறு மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. பரிசோதனைகள், விரிவான கண்காணிப்பு, பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக தனிமைப்படுத்துதல், நெருங்கிய தொடர்புகளை விரைவாக தனிமைப்படுத்தல் ஆகியவற்றின் தேவைகளையும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியிருக்கிறது.

புதிய கொரோனா பரவல் அதிகரிப்பதற்கான காரணங்களைக் கண்டறியவும், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், மாநில சுகாதாரத் துறைகளுடன் ஒருங்கிணைக்கவும் கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், பஞ்சாப், மத்தியப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர்ஆகிய மாநிலங்களுக்கு உயர்மட்ட ஒழுங்கு குழுக்களை நியமித்திருக்கிறது மத்திய அரசு.

28 Feb 2021 11 AM

மீண்டும் கொளத்தூர்! - தி.மு.க தலைவர் ஸ்டாலின் விருப்ப மனு!

தி.மு.க தலைவர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிட இன்று தனது விருப்ப மனுவைத் தாக்கல் செய்தார். 1984 சட்டப்பேரவைத் தேர்தல் முதல் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வரும் ஸ்டாலின் இந்த முறை மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார். கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலிலும், 2016 சட்டமன்ற தேர்தலிலும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஸ்டாலின், இந்த முறை மூன்றாவது முறையாக மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

28 Feb 2021 9 AM

ம.நீ.ம-வின் உத்தரவு!

கமல்
கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சிம் தேர்தல் தொடர்பான சில முக்கிய இறுதி முடிவுகளை எடுக்கவிருக்கிறது. இந்தநிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் இன்று மாலை முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். தொடர்ந்து அடுத்த சில நாள்கள் மக்கள் நீதி மய்யக் கட்சியின் நிர்வாகிகள் சென்னையிலேயே இருக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதாம். மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைமையில் மூன்றாவது அணி அமையுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் குறைந்த நாள்களே இருப்பதால், தேர்தல் பணிகளை இறுதி செய்யும் வேலைகளில் அனைத்துக் கட்சிகளும் தீவிரம் காட்டிவருகின்றன.

28 Feb 2021 9 AM

அமித் ஷா மாநில நிர்வாகிகள் சந்திப்பு..!

அமித் ஷா
அமித் ஷா

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் பா.ஜ.க முன்னாள் தேசியத் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரப்புரை மேற்கொள்கிறார். தற்போது சென்னையில் தங்கியிருக்கும் அமித் ஷாவை பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து இன்று சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்ற தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் அமித் ஷா-வுடன் பா.ஜ.க மாநில நிர்வாகிகள் சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

28 Feb 2021 9 AM

ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு அழைப்பு!

தி.மு.க
தி.மு.க

தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால் பிரதான கட்சிகள் தேர்தல் பணிகளை வேகப்படுத்தியிருக்கின்றன. திமு.க-வைப் பொறுத்தவரையில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. ஏற்கெனவே காங்கிரஸுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்திருக்கும் நிலையில், இன்று மாலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கும் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசுவதற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில்வைத்து இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கும் நிலையில் நாளை தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு