Published:Updated:

தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேக தேதியை அறிவிக்கத் தயங்கும் ஆட்சியாளர்கள்! - சென்டிமென்ட் காரணமா?

கும்பாபிஷேகத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் கடந்த மாதமே திட்டமிடப்பட்டுவிட்டன. சிவாச்சாரியார்கள் மூன்று தேதிகளைக் குறித்து இதில் எந்தத் தேதியில் வேண்டுமானாலும் கும்பாபிஷேகத்தை நடத்தலாம் என அ.தி.மு.க அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

ஆய்வில் டி.ஐ.ஜி லோகநாதன்
ஆய்வில் டி.ஐ.ஜி லோகநாதன் ( ம.அரவிந்த் )

தஞ்சாவூர் பெரியகோயில் கும்பாபிஷேகம் வரும் 2020 பிப்ரவரி மாதம் 5-ம் தேதி நடைபெற உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வந்த தஞ்சை சரக டி.ஐ.ஜி லோகநாதன் இதைத் தெரிவித்தார். சென்டிமென்ட் காரணமாகக் கும்பாபிஷேக தேதியை ஆட்சியாளர்கள் அறிவிக்கத் தயங்குவதாகக் கோயில் நிர்வாகம் தரப்பில் புலம்பி வருகின்றனர்.

பெரியகோயில்
பெரியகோயில்

தஞ்சாவூர் பெரியகோயிலில் 1997-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 23 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கும்பாபிஷேகம் நடத்துவதற்காகத் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் கும்பாபிஷேகத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் கடந்த மாதமே திட்டமிடப்பட்டுவிட்டன. சிவாச்சாரியார்கள் மூன்று தேதிகளைக் குறித்து, இதில் எந்தத் தேதியில் வேண்டுமானாலும் கும்பாபிஷேகத்தை நடத்தலாம் என அரசுக்கு பரிந்துரையை அனுப்பி வைத்தனர்.

ஆளும் அ.தி.மு.க அரசு பிப்ரவரி 5-ம் தேதியை டிக் அடித்தனர். ஆனால், அதன் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறும் தேதியை அறநிலையத்துறை அதிகாரிகளோ, அறநிலையத்துறை அமைச்சரோ, ஆளும் தரப்பிலோ முறைப்படி அறிவிப்பார்கள் எனக் கோயில் தரப்பில் காத்துக் கிடந்தனர். ஆனால், யாரும் தேதியை அறிவிக்கவில்லை. `தேதிதான் முடிவு செய்யப்பட்டுவிட்டதே? அதை ஏன் இன்னும் அறிவிக்காமல் ஆட்சியாளர்கள் காலம் கடத்துகிறார்கள்' என்று ஆன்மிக வட்டாரத்தில் விசாரித்தனர். கோயில் தொடர்பான சென்டிமென்ட்தான் இதற்குக் காரணம் எனத் தெரிய வர அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மா காப்பு நிகழ்வில்
மா காப்பு நிகழ்வில்

இது குறித்து கோயில் வட்டாரத்தில் விசாரித்தோம், ``பெரியகோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 2-ம் தேதி பாலாலயம் நடத்தப்பட்டு, மூலவர் உள்ளிட்ட சுவாமி சிலைகள் இருக்கும் சந்நிதி திரையிட்டு மறைக்கப்பட்டது. அத்துடன் கும்பாபிஷேகத்துக்காக யாகசாலை பூஜைகள் நடத்துவதற்கு கோயில் வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும், ஆகமவிதியின்படி, திருச்சுற்று மாளிகையில் உள்ள ஈசான மூர்த்தி, 252 சிவலிங்கங்கள், 12 விநாயகர் சிலைகள், 8 முருகன் சிலைகள் மற்றும் சப்தக்கன்னிகள் அடங்கிய `சிலா மூர்த்திகளுக்கு' மா காப்பு விமரிசையாக நடைபெற்றது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ள பெரியகோயில் கும்பாபிஷேகத்தை தமிழக மக்கள், சமூக ஆர்வலர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் எனப் பலரும் ஆர்வமுடன் எதிர்பார்த்து வருவதுடன் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியுடன் இதைப் பரப்பி வருகின்றனர்.

பெரியகோயில்
பெரியகோயில்

ஆனால், ஆட்சியாளர்களோ கும்பாபிஷேக தேதியைக்கூட முறைப்படி அறிவிக்காதது வேதனையைத் தருகிறது. கடந்த தி.மு.க ஆட்சியின்போது பெரியகோயில் ஆயிரமாவது ஆண்டு விழா நடைபெற்றது. அப்போதைய முதல்வராக இருந்த மறைந்த கருணாநிதி இந்த விழாவை விமரிசையாக நடத்தினார். அதன் பிறகு ஆட்சி பொறுப்புக்கு இன்னும் தி.மு.க-வால் வர முடியவில்லை என்று இதை ஒரு சென்டிமென்டாகக் கூறுகின்றனர். இதேபோல் பெரியகோயிலைப் பற்றி பல வந்ததிகள் பரப்பட்டு வருகின்றன.

தினமும் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். பிரதோஷ தினத்தில் மகாநந்திக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்கின்றனர். அவர்கள் எல்லாம் வாழ்கையில் வளர்சியடைந்து வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் இந்தியா முழுவதிலுமிருந்தும் எத்தனையோ அரசியல் பிரபலங்கள் வந்துகொண்டுதான் உள்ளனர். சிலர் திட்டமிட்டு சோழர்களின் பெருமையைக் குலைக்க வேண்டும் என்பதற்காக இது போன்ற வதந்திகளைப் பரப்புகின்றனர்.

பெரியகோயில்
பெரியகோயில்

இதை நம்பும் ஆட்சியாளர்களும் கும்பாபிஷேக தேதியையே அறிவிக்க தயக்கம் காட்டுகின்றனர். உலகமே போற்றக்கூடிய கூடிய கோயிலின் விழாவை முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரை முன்னின்று சிறப்பாக நடத்த வேண்டும்'' என்றனர்.