Published:Updated:

டாஸ்மாக் ஐ.ஏ.எஸ் அதிகாரியைத் தூக்கியடிக்கத் துடிக்கும் 10 பேர் - மயக்கம் என்ன? - 4

மயக்கம் என்ன? - 4
மயக்கம் என்ன? - 4

டாஸ்மாக்கின் ஒரு நாளைய மொத்த சராசரி விற்பனை 80 கோடி ரூபாய். கூடுதல் விலை வைத்து மது விற்பனை செய்வதன்மூலம் ஒரு லட்சத்துக்கு சராசரியாக 3,000 ரூபாய் கிடைக்கிறது.

இந்தத் தொடரை `மீள்’ பாணியில்தான் தொடங்கினேன். `அப்டேட்’டாக இன்றைய நடப்புகளை லேசாகச் சேர்க்கலாம் என்பது திட்டம். ஆனால், தொடரை எழுதத் தொடங்கியவுடன் நாலாதிசைகளிலிருந்தும் நிகழ்கால நடப்பு தகவல்களைக் கொட்டத் தொடங்கியிருக்கிறார்கள் சோர்ஸ்கள். ஆட்சி அதிகாரம், கட்சி அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்கு இணையான அத்தனை சாம, பேத, தான, தண்ட சூழ்ச்சிகளும் டாஸ்மாக்கில் உண்டு. ஒவ்வொரு நாளும் கோடிகளைக் கொட்டும் துறை என்றால் சும்மாவா? எனவே, இந்த அத்தியாயத்தில் நடப்பு விவகாரங்களைப் பார்ப்போம். இன்றைய தேதியில் தமிழக டாஸ்மாக்கைப் பொறுத்தவரை ஆதியிலிருந்து அந்தம் வரை அத்தனையையும் ஆட்டிப்படைப்பவர்கள் 10 பேர். எந்தக் கடையில் ரெய்டு நடத்த வேண்டும், யாரை சஸ்பெண்டு செய்ய வேண்டும், யாரை, எங்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது தொடங்கி மாவட்ட மேலாளர்கள், முதுநிலை மண்டல மேலாளர்கள் வரை யார் இருக்க வேண்டும் என்று நிர்ணயிப்பது இவர்களே.

Tasmac
Tasmac

டாஸ்மாக்கைப் பொறுத்தவரை மொத்தம் 38 மாவட்டங்கள். ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு மாவட்ட மேலாளர்கள். சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் என ஐந்து மண்டலங்கள். ஒவ்வொரு மண்டலத்துக்கும் முதுநிலை மண்டல மேலாளர்கள் என மொத்தம் ஐந்து பேர். இவர்களுக்கான மொத்த வருமானமும் மேற்கண்ட பத்து பேரால்தான் பிரித்து வழங்கப்படுகிறது. மாவட்ட மேலாளர்களுக்கும் ஐந்து மண்டல மேலாளர்களுக்கும் கொஞ்சநஞ்ச வருமானம் எல்லாம் இல்லை; கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும் என்பார்களே... உண்மையிலேயே அப்படித்தான் கொட்டுகிறது. மற்ற துறைகளில் ஊழல் செய்ய வேண்டும் என்றால் அதிகாரிகள் யோசிப்பார்கள்; கையொப்பம் போட வேண்டுமே, தரமற்ற பொருளை வாங்கிப் போட வேண்டுமே, நாளை பிரச்னை வந்தால் மாட்டிக்கொள்வோமே என்று யோசித்து, தயங்கி, முன் பாதுகாப்பு வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, பிறகுதான் ஊழல் செய்வார்கள். ஆனால், இந்த அதிகாரிகள் அப்படி எல்லாம் மெனக்கெடத் தேவை இல்லை. தானாகக் கொட்டுகிறது பணம்.

இன்றைக்கு தமிழகத்திலுள்ள மதுக்கடைகளின் எண்ணிக்கை 5,299. ஒரு மண்டலத்துக்கு சராசரியாக ஆயிரம் கடைகள். வாடிக்கையாளர்கள் ஒரு முழு பாட்டிலுக்கு (நான்கு குவாட்டர்கள்) கொடுக்கும் கூடுதல் விலை 20 ரூபாய். டாஸ்மாக்கின் ஒரு நாளைய மொத்த சராசரி விற்பனை 80 கோடி ரூபாய். கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வதன்மூலம் ஒரு லட்சத்துக்கு சராசரியாக 3,000 ரூபாய் கிடைக்கிறது. அப்படி எனில் ஒரு கோடி ரூபாய்க்கு மூன்று லட்சம் ருபாய் கமிஷன். 80 கோடி ரூபாய்க்கு 2.40 கோடி ரூபாய் கமிஷன். ஒருநாளைக்கு 2.40 கோடி ரூபாய் எனில் மாதம் சராசரியாக 72 கோடி ரூபாய் கமிஷன் கொட்டுகிறது. இதில் ஒவ்வொரு மாவட்ட மேலாளருக்கும் 3 சதவிகிதம் கொடுக்க வேண்டும். இவர்கள் கட்டுப்பாட்டில் சிலநூறு கடைகள் இருக்கின்றன. இதுவே முதுநிலை மண்டல மேலாளர்களுக்கு எனில் ஒரு சதவிகிதம் கொடுக்க வேண்டும். ஒரு முதுநிலை மண்டல மேலாளரின் கட்டுப்பாட்டில் சராசரியாக ஆயிரம் கடைகள் இருக்கின்றன. அந்தக் கடைகளில் வசூலிக்கப்படும் கூடுதல் விலையிலிருந்து இந்தத் தொகை அவர்களுக்குச் செல்கிறது. அதாவது, ஒவ்வொரு மாதமும் இவர்களின் வருமானம் மட்டுமே சிலபல கோடிகள். பன்னாட்டு நிறுவனங்களின் சி.இ.ஓ-க்கள் கூட இவ்வளவு சம்பாதிப்பார்களா என்பது சந்தேகமே. அதிலும் இவர்கள் எதுவுமே மெனக்கெட தேவை இல்லை. குடிகாரர்களிடமிருந்து ஒவ்வொரு நாளும் அடித்துப் பிடுங்கப்படும் பணம், இவர்களின் உண்டியலில் கொட்டப்படுகிறது.

மது வாங்க நிற்கும் கியூ
மது வாங்க நிற்கும் கியூ

கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்படும் தொகையிலிருந்து டாஸ்மாக் பணியாளர்களுக்கு வேறு சில மாமூல் மற்றும் செலவுகளும் இருக்கின்றன. அவற்றையும் பார்ப்போம். ஒவ்வொரு கடையிலும் வசூலிக்கப்படும் கூடுதல் விற்பனை விலையிலிருந்து போலீஸ் மாமூலுக்கு ஒரு சதவிகிதம், கோயில் கொடை, உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், ரெளடிகள் உள்ளிட்ட உள்ளூர் சமாளிப்புகளுக்கு ஒரு சதவிகிதம், மாவட்ட வருவாய்ப் பிரிவு கலால் அதிகாரிகளுக்கு ஒரு சதவிகிதம், பார் ஏலம் எடுத்தவருக்கு ஒரு சதவிகிதம் என கப்பம் கட்ட வேண்டும்.

மது இப்படித்தான் தயாரிக்க வேண்டும்... ஆனால், இந்தியாவில் நடப்பதோ மனிதக் கொலைகள் - மயக்கம் என்ன? - 3

கடையின் வாடகை மற்றும் மின்சாரக் கட்டணத்தை பகிர்ந்துகொள்ள வேண்டும். அரசு முழு வாடகையை மற்றும் மின்கட்டணத்தைக் கட்டாது என்பது டாஸ்மாக்கில் எழுதப்படாத சட்டம். கடைக்கு வரும் சரக்கு வண்டிகளுக்கு ஏற்று / இறக்குக் கூலி கொடுக்க வேண்டும். தினமும் உடையும் பாட்டில்களுக்கும் அவ்வப்போது திருட்டுப் போகும் சரக்குகளுக்குமான செலவை ஈடுகட்ட வேண்டும்.

சரி, ஆரம்பித்த விஷயத்துக்கு வருவோம். டாஸ்மாக்கின் மொத்த நிர்வாகத்தையும் நிர்ணயிக்கும் சுமார் பத்து பேர் என்று சொல்லியிருந்தேன் அல்லவா... அவர்கள் ஒன்றும் பெரிய அதிகாரிகளோ... ஐ.ஏ.எஸ்-களோ இல்லை. பத்து பேரும் கடை மேற்பார்வையாளர்கள். சென்னையில் ஒருவர், மதுரையில் மூவர், சேலம், கோவை, திருச்சியில் தலா இருவர் இருக்கிறார்கள். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவர்கள் கொடிதான் டாஸ்மாக்கின் உயரத்தில் பறக்கும்.

டாஸ்மாக்
டாஸ்மாக்

தற்போது டாஸ்மாக்கில் உச்சப் பொறுப்பில் இருக்கும் இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி இவர்கள் சொல்வதற்கு கட்டுப்படுவதில்லை. இவர்கள் கைகாட்டும் பணியாளர்களுக்கு, அதிகாரிகளுக்கு இடமாற்றம் உள்ளிட்ட விஷயங்களை செய்து தருவது இல்லை. இதனால், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாகவே இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியைப் பொறுப்பிலிருந்து தூக்கிவிட்டு, ஏற்கெனவே மதுரையில் முதுநிலை மண்டல மேலாளராகப் பணிபுரிந்த திருப்பதி கடவுளின் பெயர் கொண்ட மற்றொரு அதிகாரியை உச்சப்பதவிக்கு கொண்டுவருவதற்கான காய்நகர்த்தல்களை இவர்கள் மேற்கொண்டுவருகிறார்கள். ஓர் அரசுத்துறையின் பத்து சூப்பர்வைஸர்கள் சேர்ந்து அந்தத் துறையின் தலைமை அதிகாரியையே மிரட்டுவதும் மாற்றுவதும் தமிழக டாஸ்மாக்கில் மட்டுமே நடக்கக்கூடிய அவலம்!

(தெளிவோம்)

அடுத்த கட்டுரைக்கு